Pages

Sunday, May 30, 2010

மனிதனின் எதிரிகள்


                                                           
      மகாகவி பாரதியின் புதிய ஆத்திசூடியில் ஒரு வாசகம் நையப்புடை என்பது. அந்தச் சொற்களில் தான் என்ன வேகம். அவற்றில் பாரதியின் முழுக் கோபமும் வெளிப்படுகிறது.
           
      பாரதி என்ன வன்முறையாளரா? அன்பு இல்லாத வன்நெஞ்சரா? இல்லை, இல்லை. கொல்ல வரும் புலியையும் அன்போடு சிந்தையில் போற்றச் சொன்னவர் அல்லவா அவர்? இப்பொழுது ஏன் முரண்பாடாகக் கூறுகிறார்?

            பாரதியை முழுமையாகப் படித்தால் இதில் முரண்பாடு இல்லை என்பது தெரிய வரும். புலியினும் கொடிதான பகைவர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களைத் தான் அவர் நையப்புடைக்கச் சொல்கிறார். யார் அந்தப் பகைவர்கள்? ஆத்திசூடியிலேயே அந்தப் பட்டியல் வருகிறது. அச்சம், இளைப்பு, மௌட்டியம், ஓய்தல் இவை தாம் அவை.

            பாரதம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்றதற்குக் காரணம் நம் மக்களிடத்தில் உள்ள இத் தீய குணங்கள் தாம் என்பதை உணர்ந்த பாரதி அவற்றில் முதன்மையான அச்சத்தை ஒழிக்கச் சொல்லிப் பலகாலும் வற்புறுத்துகிறார். பாப்பாவிற்குக் கூறும் அறிவுரையில்,

            பாதகம் செய்பவரைக் கண்டால் நீ
            பயம் கொள்ளலாகாது பாப்பா,
            மோதி மிதித்து விடு பாப்பா அவர்
            முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
என்று பாடி அச்சமின்மையைப் பிஞ்சு நெஞ்சில் விதைக்கிறார்.

            அஞ்சி அஞ்சிச் சாவார் இவர்
            அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே
என்று நெஞ்சு பொறுக்காமல் புலம்புகிறார்.

            நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று மார் தட்டிய நாவுக்கரசர் வழி நின்று நம் கவியரசரும்
           
      காலா என் காலருகே வாடா
            சற்றே உனை மிதிக்கிறேன்
என்றும்
            யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே
            உன்றன் போர்க்கஞ்சுவேனோ பொடியாக்குவேன் உன்னை
என்றும் கூறுகிறார். சாவுக்கு மட்டுமன்றி வேறு எதற்கும் அஞ்சக் கூடாது என்பது அவரது கருத்து.

            தொன்மைக்கு அஞ்சேல்
            கீழோர்க்கு அஞ்சேல்
            தீயோர்க்கு அஞ்சேல்
            பேய்களுக்கு அஞ்சேல்

      தருமத்திற்கும் நீதிக்கும் பயப்படவேண்டும், தலை வணங்க வேண்டும் என்ற முன்னோர் கருத்தை வலியுறுத்தும்போது கூட நீதி நூல் பயில், நீதி தவறேல் என்பாரே அன்றி பயப்படு, தலை வணங்கு என்ற சொற்களைத் தவறியும் பயன்படுத்தவில்லை.
           
      ஆறுவதுசினம், நயம்படஉரைஔவையின் இந்த உபதேசங்களிலிருந்து மாறுபடுகிறார் பாரதி. சினத்தை முன்னே வென்றிடுவீர் என்று அவர் சொன்னாலும், தீமையைக் கண்டால் எல்லையற்ற கோபம் பொங்கி வரவேண்டும், அப்படி வராதவன் நாயினும் கீழானவன் என்பது அவர் கருத்து.

            ரௌத்திரம் பழகு
            வெடிப்புறப் பேசு
            கொடுமையை எதிர்த்து நில்
            சீறுவார்ச் சீறு
என்ற வாசகங்களாலும்

            தாய் பிறன் கைப்படச் சகிப்பவனாகி
            நாயென வாழ்பவன் நமரில் இங்கு உளனா
என்ற அடிகளாலும் தீமையை எதிர்த்துப் போராட ஊக்கம் கொடுக்கிறார். இத்தகைய முயற்சியில் சாவது நேரினும் அஞ்சாமல் முனையிலே முகத்து நிற்கும்படி அவர் கூறியது இளைஞர்களுக்கு எவ்வளவு எழுச்சி ஊட்டக்கூடியது.

            நையப் புடைத்து ஒழிக்க வேண்டியவற்றில் அடுத்து வருவது இளைப்பு.

            உடலினை உறுதி செய்
            ஊண் மிக விரும்பு
            இளைப்பது இகழ்ச்சி என்றும்

            அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறா உடல் உறுதி வேண்டும் என்றும் அவர் உடலைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். நோயாளியைக் கண்டால் அவருக்கு மட்டற்ற கோபம் வருகிறது. வலிமையற்ற தோளினானை, மார்பிலே ஒடுங்கினானை, பொலிவிலா முகத்தினானை, பொறியிழந்த விழியினானை, ஒலியிழந்த குரலினானை, ஒளியிழந்த மேனியானைப் போ போ என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளி நோய்களற்ற உடலினானை வா வா என்று வரவேற்கிறார். நோயினுக்கு இடம் கொடேல், யௌவனம் காத்தல் செய் என்று அறிவுறுத்திய அவர் தளர்ந்த முதுமைக் கோலத்தோடு தான் வாழக் கூடாது என்று கருதித் தானோ என்னவோ இளமையிலேயே இறந்து விட்டார்.

            அவரது பாடல்களை ஒரு முறை படித்து விட்டாலே யாருக்கும் தாழ்ந்து நடவாமல் நிமிர்ந்து ஏறு போல் நடக்கத் தோன்றுகிறது.

            நொய்ந்தது சாகும் என்ற இயற்கை நியதியை வலியுறுத்துகிறது புதிய ஆத்திசூடி. இதை விளக்கும் வகையில் அவரது வசன கவிதை,

            காற்றுத் தேவன் மெல்லிய தீயை அவித்து விடுவான், வலிய தீயை வளர்ப்பான். எனவே நொய்ந்த உடல், நொய்ந்த உள்ளம் இவற்றை ஒழித்து விட்டு உயிரை வலிமையுற நிறுத்துவோம் வாருங்கள் என்று முழங்குகிறது.

            நமது மூன்றாவது எதிரி மௌட்டியம்-மூடத்தனம். அதில் தான் எத்தனை வகை நம்மிடம் உள்ளன. கஞ்சி குடிப்பதற்கு இல்லாத நிலையில் அதன் காரணம் இவை என்று அறியாமை, வஞ்சனைப் பேய்கள், மந்திரவாதி, சோதிடம் இவற்றை நம்புதல், மூடப் பழக்கங்கள் எனத் தெரிந்தும் முன்னையோர் சொன்னது என்பதால் கண் மூடித்தனமாகப் பின்பற்றுதல், நூலினைப் படித்துணராமல் பொய்மைச் சாத்திரங்களை நம்பி மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை, ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று அலையும் அறிவீனம்--அப்பப்பா, எத்திசை நோக்கினும் நமது தாழ்வுக்குக் காரணமாக நிற்பது அறியாமையே என்பதை உணர்ந்த அவர் இதை நையப் புடைத்து ஒழிக்கச் சொன்ன வசனங்கள் இவை:-

            சோதிடம் தனை இகழ்
            தொன்மைக்கு அஞ்சேல்
            பிணத்தினைப் போற்றேல்
            புதியன விரும்பு
            மௌட்டியம் தனைக் கொல்
            வேதம் புதிது செய்

            நமது நாலாவது எதிரி சோம்பல்.

            ஓய்தல் ஒழி
            நாளெல்லாம் வினை செய்
            யவனர் போல் முயற்சி கொள்
            கெடுப்பது சோர்வு என்றும்
சோம்பல் மிகக் கெடுதி பாப்பா என்றும் தொழிலிலே சோம்பலைப் போல் இழிவில்லை என்றும் கூறிய அவர் ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா மாக்களுக்கோர் கணமும் வாழத் தகுதி உண்டோ என்று சாடுகிறார்.

            வாருங்கள், பாரதியுடன் சேர்ந்து பேரிகை கொட்டுவோம்--அச்சம், இளைப்பு, அறியாமை, சோம்பல் என்னும் பகையே, நையப் புடைக்கத் துள்ளி வருகுது வேல், சுற்றி நில்லாதே,போ.
************* ********************************************************************
      இனி மற்றொரு முரண்பாட்டை எடுத்துக் கொள்வோம்.

      பாரதி தன் புதிய ஆத்திசூடியில் ஓய்தல் ஒழி, நாளெல்லாம் வினை செய், யவனர் போல் முயற்சி கொள் என்று அறிவுறுத்துகிறார். வேறு பாடல்களிலும் நமக்குத் தொழில் இமைப்பொழுதும சோராமல் இருத்தல் என்று முயற்சியின் அவசியத்தை வலியுறுத்தியும் சோம்பேறித்தனத்தை இழித்தும் பேசுகிறார். இத்தகைய கவி அன்பு செய்தல் என்னும் கவிதையில் கூறுவதைக் கேளுங்கள்.


      பாடுபடல் வேண்டா, ஊனுடலை வருத்தாதீர் என்கிறாரே சோம்பேறித்தனத்துக்கு ஆதரவு தருகிறாரா, இது என்ன முரண்பாடு ?

      முரண்பாடு இல்லை. கடைசி வரியை மீண்டும் ஒரு முறை படியுங்கள்.  உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்.

      அன்பு செய்தல் என்றால் என்ன ? பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல் இரண்டும் தான். இரண்டும் ஒன்றல்ல. பின்னது தெய்வத்தை வேண்டுவது மனதால் செய்யப்படும் தொழில்.  பிறர் துயர் தீர்ப்பது என்றால் உடலால் உழைக்கத் தான் வேண்டும். 

      இங்கு தான் பாரதியின் உயர்ந்த உள்ளம் புலனாகின்றது. பிறர் துயர் தீர்ப்பதற்காக உழைக்க வேண்டும், தன் வயிற்றுக்காக உழைக்கத் தேவை இல்லை, உணவு இயற்கை கொடுக்கும் என்கிறார்.

      பாரதி தன் கட்டுரைகள் பலவற்றிலும் மேலை நாட்டினர் ஒன்று கூடிச் சங்கம் அமைத்துப் பொது நன்மைக்குத் தொழில் செய்தல் போல நம்மவர் செய்வதில்லை, அடுத்தவன் அதிகாரம் பெற்று விடப் போகிறானே என்று குழிபறிப்பதிலேயே உள்ளனர் என்று வருத்தப்படுகிறார். ஆத்திசூடியில் கூடித் தொழில் செய் என அறிவுறுத்துகிறார். 

No comments:

Post a Comment