Pages

Sunday, May 30, 2010

உலகளந்த நாயகி



                ஒன்றென்றிரு   தெய்வம் உண்டென்றிரு என்பது முதுமொழிஅறிவிலிகள் ஆயிரம் தெய்வம் உண்டென்று அலைவர். எப்பெயரிட்டு அழைத்தாலும் அது ஒரே பரம்பொருளையே குறிக்கும் என்பதை ஞானிகள்  பலர் உணர்த்தியுள்ளனர்.    

        ஒரு நாமம்  ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
                திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ
என்று  திருவாசகம் கூறுவதும் இதே கருத்தைத் தான்.
               
        இத்தகைய தெய்வத்தைச் சக்தி என்றும்  முருகன் என்றும் சங்கரன் என்றும் கண்ணன் என்றும் பல  பெயர்களில் நாம் அழைத்துப் புகழ்கிறோம்.வழிபாட்டு முறைகள் பலவும் ஒரே லட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றன என்ற திடமான அறிவு  இருந்தாலும்  எனக்கு தெய்வத்தை அன்னையாகப் பார்ப்பது தான்  மனதுக்குப் பிடிக்கிறது என்று ராமகிருஷ்ண பரமஹம்சர்  கூறினார். அவரது  அமுத மொழிகளில் தோய்ந்த பாரதியும் பரம்பொருளை  அன்னை பராசக்தி என்று அழைப்பதைப் பெருவழக்காக ஆக்கிக் கொண்டார். அவளது திருவடிகளை இறுகப் பற்றுவது தான் நிலையற்ற இவ்வுலகில்  துயரின்றி வாழ வழி என்று  தன் நெஞ்சுக்குக் கூறுவது போல அவர் நமக்குக் கூறுகிறார். அவ்வாறு சரணம் அடைவதால் நமது குறைகள் தீர்க்கப்படும், தேவைகள் நிறைவு பெறும் என்று அவர் நம்புகிறார். இந்த இடத்தில் குறை என்ற சொல்லுக்கும் தேவை என்ற சொல்லுக்கும் ஒரு நுட்பமான வேறுபாட்டைப் பாரதி காட்டுகிறார்.

                பசியும் பிணியும் தான் மனிதரின் உண்மையான துன்பங்கள் - உண்மையான தேவைகள்.  இவற்றிலிருந்து காக்கச் சொல்லி அவர் பராசக்தியை வேண்டுகிறார். குறை என்பது இந்தப் பொருள் இல்லையே என்று மனதால் ஏங்குவது. இது மனக்குறையே அன்றி உண்மையான தேவை அல்ல. பொன் வேண்டும், உயர்வு வேண்டும், புகழ் வேண்டும் என்று விரும்புவது மனதின் அகங்காரத்தின் விளைவு. மற்றவரை விட நான் மேலானவன் என்று காட்டிக் கொள்வதற்குத் தான் நாம் பெரிய மாட மாளிகையும், உயர்ந்த பதவியும், ஏவல் செய்யப் பணியாளர்களும், உலகறியும் வகையில் உலவி வரும் புகழும் விரும்புகிறோம். இவை குறைகள். தேவைகளோ துன்பங்களோ அல்ல. பாரதி சக்தியிடம் என் குறைகளை நிறைவு செய் என்று கேட்கவில்லை. அவற்றைத் தீர்க்கச் சொல்லி, அதாவது தீர்த்துக் கட்டிவிடுமாறு, ஒழித்துக் கட்டுமாறு, வேண்டுகிறார். பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று நின்னைச் சரணடைந்தேன் என்று வேறொரு பாடலில் கூறுகிறார். பாரதி வேண்டியது ஒரே ஒரு  பெருமையைத் தான். சக்தி தாசன் என்று பெயர் பெற வேண்டும்  என்ற ஒரு பெருமையைத் தான் அவர் விரும்புகிறார். அப் பெருமை பக்தியினால் வருவது. அகந்தை, பொன்னாசை, பதவி ஆசை, புகழ் ஆசை எல்லாம் தீய நெறிகளில் சேர்த்துவிடும். ஆனால் பக்தியோ உத்தம நன்னெறிகளிலே சேர்த்துவிடும். எனவே உலகளந்த நாயகியாகிய  அம்மகாசக்தியின் தாளை அனவரதமும் நினைப்பாயாக என்று அவர் நெஞ்சுக்கு அறிவுறுத்துகிறார்.

சக்தி என்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்   
சங்கரன் என்று உரைத்திடுவோம் கண்ணன் என்போம்
நித்தியம் இங்கு அவள் சரணே நிலை என்று எண்ணி   
நினக்குள்ள குறைகள் எல்லாம் தீர்க்கச் சொல்லி
பக்தியினால் பெருமை எல்லாம் கொடுக்கச் சொல்லி    
பசி பிணிகள் இல்லாமல் காக்கச் சொல்லி
உத்தம  நன்ற்னறிகளிலே சேர்க்கச் சொல்லி             
உலகளந்த நாயகிதாள் உரைப்பாய் நெஞ்சே.

No comments:

Post a Comment