Pages

Saturday, September 17, 2011

பாவம் சிவன்


 சிவனுக்கு எத்தனை கண்? இது தெரியாதா? மூன்று கண் என்று உடனே பதில் சொல்பவர்கள் சற்றே மன்னிக்க வேண்டும். கவி காளமேகத்தின் கணக்குப்படி சிவனுக்கு உள்ளது அரைக் கண் தானாம். எப்படி? காளமேகம் சொல்கிறார். சிவனின் உடலில் சரி பாதி உமையம்மை பிடித்துக் கொண்டிருக்கிறாள். எனவே மூன்றில் பாதி ஒன்றரைக் கண் உமையுடையது. மீதி உள்ளதிலாவது சிவனுக்கு உரிமை உண்டா? இல்லையாம். அதிலும் ஒரு கண் கண்ணப்பனுடையது. மீதி அரைக் கண் தான் சிவனுககுச் சொந்தமானது என்று வாதிடுகிறார் அவர்.

முக்கண்ணன் என்றரனை முன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற் குள்ளது அரைக்கண்ணே-மிக்க
உமையாள்கண் ஒன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்று
அமையும் இதனாலென்று அறி.

காளமேகமாவது நகைச்சுவைப் புலவர் என்று பேர் வாங்கியவர். அப்பரடிகள் இருக்கிறாரே! அவர் இளமையில் சமணத்தில் இருந்து முதுமை வந்தபின் சைவத்தைச் சரணடைந்தவர். அவரது பாடல்களில் தன் பழைய வாழ்க்கை பற்றிய கழிவிரக்கமும் சிவபெருமானின் பெருமைகளும் தான் காணப்படும். அவர் கூட சிவனின் மூன்று கண்களை வைத்துக் கொண்டு கிண்டல் செய்கிறார். 

இன்றரைக் கண்ணுடை யாரெங்கு மில்லை யிமயமென்னும்
குன்றரைக் கண்ணன் குலமகட் பாவைக்குக் கூறிட்ட நா
ளன்றரைக் கண்ணுங் கொடுத்துமை யாளையும் பாகம்வைத்த
ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி யூருறை யுத்தமனே. (தேவாரம் 4-86-7)

உலகத்தில் எல்லோருக்கும் இரண்டு கண் தான் உண்டு. சில பேர் ஒரு கண் பார்வையை இழந்தவர்களாக இருந்தால் அவர்களை ஒற்றைக் கண்ணன் என்று சொல்வார்கள். ஆனால் ஒரு கண்ணும் இல்லாமல் இரண்டு கண்ணும் இல்லாமல் ஒன்றரைக் கண் உடையவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இதோ இருக்கிறார் பாருங்கள்.

அவருக்கு முதலில் மூன்று கண் தான் இருந்தது. இமயமலையின் அரசனான இமவானின் மகளை மணந்து கொண்டபோது தன் உடம்பில் பாதியை உமா தேவிக்குக் கொடுத்து விட்டார். அதனால் சிவனுக்கு ஒன்றரைக் கண் தான் மிச்சம் என்கிறார் நாவுக்கரசர்.

அண்மைக் காலப் புலவரான கோபால கிருஷ்ண பாரதி பாடுகிறார்,

 அந்தமில் நடனம் செய்யும் அம்பல வாணனே 
அருமையாகவே பெற்று ஒருமையுடன் வளர்த்த 
தந்தை தாய் இருந்தால் இவ்வுலகத்தில்
உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா

கல்லால் ஒருவன் கடந்தடிக்க உடல் பதைக்க
காலின் செருப்பால் ஒரு வேடன் எதிர்த்து உதைக்க
வில்லினால் ஒருவன் வந்தடிக்க
உமது திருமேனி என்னமாய் நொந்ததோ
கூசாமல் இடையன் கைக்கோடாரியால் வெட்ட
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா எனத் திட்ட
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க
அந்த வேளை யாரை நினைந்தீரோ ஐயா
சீலமில்லாதொரு பெண் காரியுமிழலாச்சே
சேர்ந்தவளும் தலைமீதேற எளிதாய்ப் போச்சே
பாலகிருஷ்ணன் இதைப் பார்க்கும்படியாச்சே
பாருலகில் எங்கணும் பார்க்கில் இதுவே பேச்சே

 பாவம் சிவன். இந்தப் புலவர்கள் வாயில் அகப்பட்டுக் கிண்டலுக்கு ஆளாகி, தன் அரைக் கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்கிறார்.

Thursday, September 15, 2011

புதிய ஆலயம்

(இந்த என் படைப்பு வல்லமை மின் இதழில் பிரசுரம் ஆகியுள்ளது.)

 சுற்றிலும் பார்க்கிறோம் சோகச் செய்திகள்
சாதியின் பெயரால் மதமெனும் சாக்கால்
உடமை சேர்க்க உரிமை நாட்ட
அடிதடி கொலைகள் ஆயிரம் நிதமும்
அமைதி வேண்டி ஆலயம் சென்றால்
அங்கும் ஆண்டவன் கையில் ஆயுதம்
ராமன் பாணம் கண்ணன் சக்கரம்
கணபதி அங்குசம் காளியின் போர்வாள்
 மாறுபட்டார் மனத்தினை மாற்ற
கொலை வழி அன்றிப் பிறவழி அறியா
முதிரா மனத்தினர் வகுத்தவை இவையாம்
 சமய முறையிலும் சாத்திரங்களிலும்
புதியன புகுதல் வழுவல அதனால்
புத்தர் காந்தி புனிதர் வள்ளல்
போதனை செய்த புண்ணிய வழியை
நெஞ்சில் நிறுத்தும் தெய்வங் களுக்கு
புதிய ஆலயம் புனைவோம் வாரீர்
 ஆலமர்ந் திருந்து அறமொழி அருளும்
மோன குருவை மூலவர் ஆக்குவோம்
ஆடல் புரிந்து அணுதொறும் இயக்கும்
தாண்டவன் கோயில் தனியே அமைப்போம்
செல்வம் அருளும் சீரார் திருமகள்
அறிவினை அருளும் கலைமக ளுக்கும்
ஆலயம் பலவாய் ஆங்காங் கமைப்போம்
வள்ள லாரை வணங்கிடும் மன்றம்
போதி மரத்தடி முனிவன் சைத்தியம்
வீதிகள் தோறும் விளங்க வைப்போம்
அமைதி வழியில் அகிலம் வெல்லும்
ஆற்றல் பெற்றிட அவரை வணங்குவோம்

Tuesday, September 13, 2011

நரி பரி ஆனது எப்பொழுது?

(இந்த என் கட்டுரை வல்லமை மின் இதழில் வெளிவந்தது) பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்த வாதவூரடிகள் அராபிய வணிகரிடம் குதிரை வாங்கக் கடற்கரைப் பகுதிக்குச் சென்றார். அங்கு சிவபெருமான் குருந்த மரத்தடியில் குரு வடிவாக எழுந்தருளி இவருக்கு உபதேசம் செய்தார். வந்த வேலையை மறந்து இறைவனுக்கு ஆலயம் எழுப்புவதில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொருள் முழுவதையும் செலவிட்டார். அரசனிடமிருந்து அழைப்பு வந்ததும், சிவனிடம் முறையிட, பெருமானும் நரிகளைப் பரியாக்கிக் குதிரைச் சேவகனாக வந்து பாண்டியனிடம் ஒப்புவித்துச் சென்றார். இரவில் அக்குதிரைகள் மீண்டும் நரியாயின. அது கண்டு சினந்த அரசன் மணிவாசகரைச் சிறையிலிட்டான். பின் இறைவன் மணிவாசகரின் பெருமையை அரசனும் பிறரும் உணருமாறு, வைகையில் வெள்ளம் தோற்றுவித்துத் திருவிளையாடல் புரிந்தார். இந்த நிகழ்ச்சி திருவிளையாடற் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மணிவாசகர் வாழ்வில் நடந்ததாகக் கூறப்படும் இதற்கு அவரது திருவாசகத்தில் அகச்சான்று உள்ளதா? ஆராய்வோம். திருவாசகத்தில் 3 இடங்களில் நரியைப் பரியாக்கிய விபரம் கூறப்பட்டுள்ளது. கீர்த்த்தித் திருவகவல் 36வது வரியில் - “நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்.” திருவேசறவு 1-“நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவாறன்றே உன் பேரருளே.” ஆனந்தமாலை 7- “நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்தாய்.” இது தவிர 9 இடங்களில் சிவன் குதிரைச் சேவகனாக வந்த செய்தி கூறப்பட்டுள்ளது. இந்த 12 இடங்களில் எதிலும், இந்தத் திருவிளையாடல் தனக்காகச் செய்யப்பட்டதாகவோ தன் வாழ் நாளில் நடைபெற்றதாகவோ மணிவாசகர் குறிப்பிடவில்லை. தன்னடக்கத்தின் காரணமாக, மணிவாசகர் தன்னைப் பற்றிக் கூறாமல் இறைவனின் திருவிளையாடலை மட்டும் குறிப்பிடுகிறார் என்ற வாதம் பொருந்தாது. ஏனெனில், மணிவாசகர் பல இடங்களில் இறைவன் தனக்காகச் செய்த பெருங் கருணை பற்றிப் பலவாறாகப் புகழ்கிறார். என் குற்றங்களைப் பொருட்படுத்தாது ஆண்டு கொண்டாயே, இறைவா உன் கருணைத்திறத்தை நான் எப்படி இயம்புவேன் என்று விம்முகிறார். என்னைத் தில்லைக்கு வா என்று பணித்து என்னை உன் அடியவருடன் கூட்டிவைத்தவன் அல்லவா நீ என்று போற்றுகிறார். . நாயினேனை நலமலி தில்லையுட் கோலமார்தரு பொதுவினில் வருகென ஏல என்னை ஈங்கொழித்தருளி அன்றுடன் சென்ற அருள் பெறும் அடியவர் ஒன்றவொன்ற உடன்கலந்தருளி......... கீர்த்தித் திருவகவல் 127- 131 எந்தத் திருவிளையாடலையும் இன்னாருக்காகச் செய்யப்பட்டது என்று கூறும் வழக்கம் இல்லாதவர் மணிவாசகர் என்ற கூற்றும் பொருந்தாது. ஏனெனில், பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சியைக் கூறும்போது, ‘அடியவட்காகப் பாங்காய் மண் சுமந்து’ என்று பிட்டு வாணிச்சியைப் பற்றிக் குறிப்பிடுகிறார். கீர்த்தித் திருவகவல் 15 பாண்டிய மன்னனுக்காகக் குதிரைச் சேவகனாக இறைவன் வந்ததைத் திருப்பாண்டிப் பதிகத்தில் 6 இடங்களில் குறிப்பிட்டு ‘மதுரையர் மன்னன் மறுபிறப்போட மறித்திடும்’ பாண்டிப்பிரான் என்று இறைவனைப் போற்றும் அவர் எந்த இடத்திலும் தனக்காக இறைவன் குதிரை மேல் வந்ததாகக் கூறவில்லை. அதிசயப்பத்து என்ற பகுதியில் அவர் குறிப்பிடும் அதிசயம், மானிடரில் கடையனான தன்னை இறைவன் ஆண்டுகொண்டது தான். மண்ணிலே பிறந்திறந்து மண்ணாவதற் கொருப்படுகின்றேனை அண்ணல் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே. மேலும் அவர் இறைவனின் மிகப் பெரிய அதிசயச் செயலாக வியந்து பாராட்டுவது கல்லைப் பிசைந்து கனியாக்கிய விந்தையைத் தான். ஆம். கல் போன்ற தன் மனத்தை நெகிழ வைத்து ‘மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்து, கை தலை மேல் வைத்து கண்ணீர் ததும்பி உள்ளம் வெதும்பி’ இறைவனைப் போற்றும் நெறியில் ஆற்றுப்படுத்திய செயல் தான் மிகப் பெரிய அதிசயம். கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கன்பன் ஆக்கினாய் - திருச்சதகம் 94 கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத் தழுத்தி வினை கடிந்த வேதியனை தில்லை நகர் புக்குச் சிற்றம்பல மன்னும் ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய் - திருவம்மானை 5 இறைவனின் மற்ற திருவிளையாடல்களை வர்ணிப்பது போல, எங்கோ எப்போதோ நடந்தது என்ற முறையில் தான் அவர் நரியைப் பரியாக்கிய திருவிளையாடலையும் கூறுகிறாரே அன்றித் தன் வாழ்வில் அது நடந்ததாகக் குறிப்பிடாத நிலையில் இந்தக் கதை எப்படியோ மணிவாசகர் வரலாற்றுடன் தன்னை இணைத்துக் கொண்டுவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, நரியைப் பரி ஆக்கிய திருவிளையாடல் மணிவாசகர் காலத்துக்கு முன்பே நடந்தது என்பதற்கு வலுவான சான்று, மணிவாசகருக்குக் காலத்தால் முற்பட்ட திருநாவுக்கரசரும் இறைவன் நரியைப் பரி ஆக்கிய நிகழ்ச்சியைக் குறிப்பிடுவது தான். அப்பரின் திருவீழிமிழலைப் பதிகத்தில் இறைவன் இடுகாட்டு நரியைப் பரியாகக் கொண்டு மகிழ்வதாகக் கூறுகிறார். எரியினார் இறையார் இடுகாட்டிடை நரியினாற் பரியா மகிழ்கின்றதோர் பெரியனார் தம் பிறப்பொடு சாதலை விரியினார் தொழு வீழி மிழலையே திருவாரூர்ப் பதிகத்தில் மேலும் தெளிவாக இறைவன் நரியைக் குதிரை செய்பவன் என்றே கூறுகிறார். நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும் விரதங்கொண்டாடவல்லானும் விச்சின்றி நாறு செய்வானும் முரசதிர்ந்தானை முன்னோட முன்பணிந்தமரர்கள் ஏத்த அரவரைச் சாத்தி நின்றானும் ஆரூரமர்ந்த அம்மானே இதில் இறைவன் எல்லாம் வல்லவன் என்பதற்குச் சான்றாக சில எடுத்துக்காட்டுகள் தருகிறாரே தவிர இந்த நிகழ்ச்சி நடந்ததாக அவர் குறிப்பிடவில்லை. மறைமலை அடிகள் கூறுவது போல மணிவாசகர் திருநாவுக்கரசருக்குக் காலத்தால் முந்தியவர் என்பதை ஏற்றுக் கொண்டாலும் பிரச்சினை தீரவில்லை. தன் காலத்திலும் முற்காலத்திலும் இருந்த பல அடியார்களைக் குறிப்பிடும் அப்பர் பெருமான் .மணிவாசகர் பற்றியோ அவர் பொருட்டு நரி பரியாக்கப்பட்டதையோ குறிப்பிடாதததும் சிக்கலைத் தருகிறது. அப்பர் மட்டுமல்ல பிற தேவார ஆசிரியர்களும்மணிவாசகர் பற்றிக் குறிப்பிடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். நரியைப் பரி ஆக்கிய நிகழ்ச்சி ஒன்று நடந்திருந்தாலும் அது மணிவாசகர் காலத்தில் அல்ல என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது.

Monday, September 12, 2011

ஸம்ஸ்கிருதமும் கணினியும்

/இந்த என் கட்டுரை வல்லமை மின்னிதழில் வெளியாகியுள்ளது./



ஸம்ஸ்கிருதம் எவ்வாறு கணினிக்கு ஏற்ற மொழி என்பதை Artificial Intelligence Magazine Volume 6 Number 1 (1985) என்ற பத்திரிகையில் விளக்கியுள்ளார் ரிக் பிரிக்ஸ் என்ற நாசா விஞ்ஞானி. Rick Brigs - RIACS, NASA Ames Research Center, Moffet Field, California 94305. அவருடைய கட்டுரையைத் தழுவியது இது.

வினையை மையப்படுத்தும் செமான்டிக் நெட்

கணினி மூலம் மொழிபெயர்க்கும்போது, அகராதிப்படி நேருக்கு நேரான வார்த்தைகளைப் போடுவதன் மூலம் சரியான மொழிமாற்றம் செய்ய முடியாது என்பதை அனைவரும் அறிவர். அதற்கு முதல்படியாக, ஒரு மொழியில் சொல்லப்பட்ட கருத்தை, ‘செமான்டிக் நெட்’ Semantic Net எனப்படும் கூற்று வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, முருகன் வள்ளிக்குப் பழம் கொடுத்தான் என்ற வாக்கியத்தைச் செமான்டிக் நெட்டாக மாற்றினால் கீழ்க்கண்டவாறு வரும்.

கொடு- செய்பவர் – முருகன்
கொடு – பெறுபவர் – வள்ளி
கொடு – பொருள் – பழம்
கொடு – காலம் – இறந்தகாலம்

இதில் கொடு என்ற வினையை மையப்படுத்தி அது வாக்கியத்தின் மற்ற சொற்களோடு எத்தகைய உறவு கொண்டிருக்கிறது என்பது சந்தேகத்திற்கோ, இரண்டு பொருள் வருவதற்கோ இடமில்லாத வகையில் முறைப் படுத்தப்படுகிறது. அதைப் படமாகக் கீழே காண்க.



இனி சற்றே சிக்கலான மற்றொரு உதாரணம் பார்ப்போம்.
“பெரியதெரு, 37 ஆம் எண் இல்லத்தில் உள்ள ஆசிரியர் முருகன், வள்ளி என்ற வக்கீலுக்கு ஒரு புத்தகம் தந்தார்.”




செயல் - நிகழ்வுகள் என்னும் பெருங்குழுவில் உறுப்பான கொடுத்தல் நிகழ்வுகளில் ஒன்று.

செய்பவர் - விலாசங்கள் என்ற பெருங்குழுவில் உறுப்பான பெரியதெரு, 37 என்பதை இடமாகக் கொண்டவர், நபர்கள் என்ற பெருங்குழுவில் உறுப்பான முருகன், தொழில்கள் என்ற பெருங்குழுவில் உறுப்பான ஆசிரியத் தொழில் செய்பவர்.

பெறுபவர் - தொழில்கள் என்னும் பெருங்குழுவில் உறுப்பான வக்கீல் தொழில் செய்பவர், நபர்கள் என்னும் பெருங்குழுவில் உறுப்பான வள்ளி.

செயப்படுபொருள் - பொருள்கள் என்ற பெருங்குழுவில் உறுப்பான புத்தகம்.

காலம் - இறந்த காலம்.

மேற்கண்ட வகையில் சொன்னால் தான் கணினியால் புரிந்து கொள்ள முடியும்.. ஆனால் நாம் நடைமுறையில் இவ்வாறு பேசுவதில்லை. இந்தக் கணினி மொழியிலிருந்து இயற்கை மொழிகள் மிகவும் விலகி நிற்கின்றன. அப்படி இருக்க, இந்தக் கணினி மொழியிலிருந்து சற்றும் விலகாத ஒரு இயற்கை மொழி உண்டென்றால் அது ஸம்ஸ்கிருதம் மட்டுமே என்கிறார் பிரிக்ஸ்.

ஸம்ஸ்கிருத இலக்கணத்தில் வாக்கியத்தின் சொற்களிடையே உள்ள உறவுகளைக் காண மேற்கண்ட முறையே பின்பற்றப்படுவதாக அவர் கூறுகிறார். இம்முறை கி.மு. முதலாவது ஆயிரம் ஆண்டுகளில் பாணினியால் அறிமுகப்படுத்தப்பட்டு பின் வந்தவர்களால் விரிவுபடுத்தப்பட்டது என்றும் 18ஆம் நூற்றாண்டில் மராட்டியப் பிரதேசத்தில் வாழ்ந்த நாகேசர் என்பவரால் எழுதப்பட்ட வையாகரண சித்தாந்த மஞ்ஜூஷா என்ற நூல் இவ்வரிசையில் கடைசியாக வந்த நூல் என்றும் கூறுகிறார். அதிலிருந்து சில உதாரணங்கள் தருகிறார்.

சொற்றொடரும் அதன் உறுப்புகளும்

இந்திய இலக்கண ஆசிரியர்களின் முறைப்படி, ஒவ்வொரு வாக்கியமும் ஒரு செயலைக் குறிப்பிடுகிறது. அச்செயல் வினைச் சொல்லாலும் அதன் துணைகளாகிய பெயர்ச்சொல் முதலியவற்றாலும் குறிப்பிடப்படுகிறது.

‘சித்ரா கிராமத்தைச் சென்றடைகிறாள்’ என்ற வாக்கியத்தை நாகேசர் அலசுவது இவ்வாறு -

“ஒரு செயல் நடைபெறுகிறது. அது தொடர்பு என்னும் ஒரு விளைவை ஏற்படுத்துகிறது. செய்பவர் சித்ரா, வேறு யாரும் அல்ல. காலம் நிகழ்காலம். செயலின் செயப்படுபொருள் கிராமம், வேறு எதுவும் அல்ல.“

வினைச் சொல்லின் பொருள் செயல்- பலன் என்று இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு செயலும் பல உட்செயல்களாகப் பகுக்கப்படக் கூடியது என்ற கருத்தை நாகேசர் வலியுறுத்துகிறார்.

கந்தன் முருகனுக்குப் புத்தகம் கொடுத்தான் என்பதில் கொடுத்தல் என்பது செயல், புத்தக இடமாற்றம் என்பது பலன். இச்செயல், கந்தன் கையில் வைத்திருத்தல், அதை முருகனை நோக்கி நீட்டுதல், அது முருகன் கையோடு தொடர்பு கொள்ளுதல், கந்தன் கையை விட்டு நீங்குதல் ஆகிய பல உட்செயல்களைக் கொண்டது என்று கூறுகிறார்.

வேற்றுமைகளும் காரகங்களும்

தமிழில் இருப்பது போல ஸம்ஸ்கிருதத்திலும் எட்டு வேற்றுமைகள் –விபக்திகள்- உண்டு. அதில் முதல் 7 வேற்றுமைகள்- தமிழில் போலவே முறையே செய்பவர், செயப்படுபொருள், கருவி, சென்றடையும் இடம், புறப்படும் இடம், உடமை, இருக்கும் இடம் ஆகியவற்றைக் குறிப்பிடுவன. இதில் ஆறாம் வேற்றுமையான உடமையும், 8 ஆம் வேற்றுமையான விளியும் வாக்கியத்தின் மையக் கருத்தான செயலைப் பற்றி விளக்குவதில்லை. ஏனைய ஆறும் செயலை விளக்குவதால் அவை ‘காரக’ என்ற பெயர் பெறுகின்றன. இந்த ஆறு காரகங்கள் செயலுக்கும மற்ற துணைச் சொற்களுக்குமான உறவைக் குறிப்பிட்டு சொற்றொடருக்கு முழுமையான பொருளைத் தருகின்றன.

பிரிக்ஸ் விளக்கும் நாகேசரின் இந்த உதாராணத்தைக் கவனியுங்கள். ‘நட்பின் காரணமாக மித்ரா தேவதத்தனுக்காக நெருப்பு கொண்டு பானையில் அரிசி சமைக்கிறாள்.‘

இதில் செயல் சமைத்தல். இது அடுப்பை மூட்டுதல், பானையை வைத்தல், நீர் ஊற்றுதல், அரிசி இடுதல், அரிசியின் கடினத் தன்மையைப் போக்கி மென்மையாக்குதல் ஆகிய பல உட்செயல்களைக் கொண்டது. இச் சொற்றொடரின் பொருளை நாகேசர் அலசும் முறை இது-

“மென்மையாக்குவதற்குச் சாதகமான ஒரு செயல் நடைபெறுகிறது. செய்பவர் – மித்ரா, உட்படும் பொருள் - அரிசி. கருவி –.நெருப்பு, செயலின் பயன் சென்றடையும் இடம் – தேவதத்தன், செயல் புறப்படும் இடம் அல்லது காரணம் – நட்பு, நடைபெறும் இடம் - பானை.”

இவ்வாறு செமான்டிக் நெட் முறையும் நாகேசரின் அலசல் முறையும் ஒன்றாக இருப்பது காட்டப்படுகிறது.

சொல் வரிசை அமைப்பு

Syntax எனப்படும் சொல் வரிசை முறை ஆங்கிலத்தில் முக்கிய இடம் பெறுகிறது. Rama killed Ravana என்பதில் சொற்களின் இட வரிசையை மாற்றி விட்டால் பொருள் மாறிவிடும் அல்லது பொருள் விளங்காது. மாறாக, தமிழில் ராமன் ராவணனைக் கொன்றான் என்பதை இடம் மாற்றி
ராமன் கொன்றான் ராவணனை என்றோ
ராவணனை ராமன் கொன்றான் என்றோ
கொன்றான் ராமன் ராவணனை என்றோ எழுதினாலும் பொருள் மாறாது.

ஆனால் தமிழில் இது ஓரளவுக்குத் தான் பொருந்தும். ‘கோசலவேந்தன் ராமன் லங்காதிபனான ராவணனை கூர்மையான அம்பினால் கொன்றான்’ என்ற சொற்றொடரை மேற்கண்டது போல் மாற்றி எழுதினால் பொருள் சிதைந்துவிடும்.

ஆனால் ஸம்ஸ்கிருதத்தில் அடைமொழிகளுக்கும் வேற்றுமை உருபு சேர்க்கப்படுவதால், ‘கோசலவேந்தன் ராமன் லங்காதிபனை ராவணனை கூர்மையானதால் அம்பினால் கொன்றான்’ என்று தான் எழுதவேண்டும். அதனால் சொல் வரிசையை எப்படி மாற்றினாலும் பொருள் மாறுவதில்லை. “கோசலவேந்தன் ராவணனை கூர்மையானதால் கொன்றான் ராமன் லங்காதிபனை அம்பினால்” என்று எழுதினாலும் ஒத்த காரகச் சொற்களை இணைத்துப் பொருள் கொள்வதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

ஒரு சொல் சொற்றொடரில் எத்தகைய பணி ஆற்றுகிறது என்பதை மாறுபாடு இல்லாமல் கணினி புரிந்து கொள்ள இதுவே சிறந்த வழி என்கிறார் பிரிக்ஸ்.

கூட்டல் கழித்தல் முறை

‘மரத்திலிருந்து இலை விழுகிறது’ என்ற சொற்றொடரை செமான்டிக் நெட் வகையில் அமைத்தால் இலை என்னும் பொருள், இருப்பிடம் 1 இலிருந்து இருப்பிடம் 2க்கு நிலை மாற்றம் அடைவதாகச் சொல்ல வேண்டும்.

இலை என்னும் பொருள், இருப்பிடம் 1 இலிருந்து பிரிகிறது. இருப்பிடம் 2 உடன் சேர்கிறது என்று அலசுகிறார் நாகேசர். இது முதல் இருப்பிடத்தில் கழித்தல், இரண்டாவது இருப்பிடத்தில் கூட்டல் என்னும் கணினி முறைக்கு ஏற்றதாக இருப்பதால் இந்திய முறை செமான்டிக் நெட் முறையினும் மேம்பட்டதாக இருக்கிறது என்பது பிரிக்ஸின் கருத்து.

Tuesday, August 16, 2011

காளமேகப் புலவர் பாடல்கள்

நிந்தா ஸ்துதிகள்

கொங்குலவுந் தென்றில்லைக் கோவிந்தக் கோனிருக்க
கங்குல் பகலண்டர் பலர் காத்திருக்க செங்கையில்
ஓடெடுத்த அம்பலவ ரோங்குதில்லையுட் புகுந்தே
ஆடெடுத்த தென்ன வுபாயம்

நாட்டுக்கு ளாட்டுக்கு நாலுகா லய்யா நினஅ
ஆட்டுக் கிரண்டு காலானாலும் நாட்டமுள்ள
சீர்மேவு தில்லைச் சிவனே யிவ்வாட்டை விட்டுப்
போமா சொல் லாயப்புலி

பொன்னஞ்சடை யறுகம்புல்லுக்கும் பூம்புனற்கும்
தன்நெஞ்சுவகையுறத் தாவுமே அன்னங்கள்
செய்க்கமலத் துற்றுலவும் தில்லை நடராசன்
கைக்கமலத் துற்ற மான்கன்று

மாட்டுக் கோன் தங்கை மதுரை விட்டுத் தில்லைவனத்
தாட்டுக் கோனுக்குப் பெண்டாயினாள் கேட்டிலையோ
குட்டி மறிக்கவொரு கோட்டானையும் பெற்றாள்
கட்டுமணிச் சிற்றிடைச்சி காண்.

நச்சரவம் பூண்ட தில்லை நாதரே! தேவரீர்
பிச்சை எடுத்துண்ணப் புறப்பட்டும் – உச்சிதமாம்
காளமேன் குஞ்சரமேன் கார்கடல்போற் றான்முழங்கும்
மேளமேன் ராஜாங்கமேன்?

தாண்டி யொருத்தித் தலையின்மே லேறாளோ
பூண்ட செருப்பா லொருவன் போடானோ மீண்டொருவன்
வையானோ வின் முறிய மாட்டானோ தென்புலியூர்
ஐயாநீர் ஏழையா னால்

செல்லாரும் பொழில்சூழ் புலியூ ரம்பலவாண தேவனாரே
கல்லாலும் வில்லாலும் செருப்பாலும் பிரம்பாலும் கடிந்து சாடும்
எல்லாரும் நல்லவரென்றிரங்கி யருளீந்ததென்ன இகழ்ச்சியொன்றும்
சொல்லாமல் மலரைக் கொண்டெறிந்தவனைக் கொன்றதென்ன சொல்லுவீரே.

சொல்லிற் பெரிய கழுக்குன்றரே தொல்லை நாள் முதலா
அல்லற் பிழைப்பே பிழைத்து விட்டீர் முப் புரத்தவரை
வில்லைப் பிடித்தெய்ய மாட்டாமல் நீர் அந்த வேளையிலே
பல்லைத் திறந்து விட்டீர் இது காணும் படைத் திறமே.

தெருமுட்டப் பாளை சிதற வளர் பூகத்
தருமுட்டச் செய்வாளை தாவும் – திருமுட்டத்
தூரிலே கண்டேன் ஒரு புதுமை பன்றிக்கு
மாரிலே கொம்பான வாறு.

முட்டத்துப் பன்றி முளரித் திருப்பதத்தைக்
கிட்டத்துப் பன்றிக் கிடந்தோமே- தொட்ட
மருங்கிலே சங்கெடுத்த மாலே யெமக்கு
வருங்கிலே சங்கெடுக்க வா.

ஆலங் குடியானை ஆலால முண்டவனை
ஆலங் குடியானென் றார் சொன்னார் – ஆலம்
குடியானே யாயில் குவலயத் தோரெல்லாம்
மடியாரோ மண் மீதிலே.

வள்ளலெனும் பெரிய மாயூர நாதருக்கு
வெள்ளிமலை பொன்மலையு மேயிருக்கத் – தெள்ளுமையாள்
அஞ்ச லஞ்சலென்று தின மண்டையிலே தானிருக்க
நஞ்சுதனை யேனருந்தி னார்.

தீத்தானுன் கண்ணிலே தீத்தானுன் கையிலே
தீத்தானு முன் புன் சிரிப்பிலே – தீத்தானுன்
மெய்யெலாம் புள்ளிருக்கு வேளூரா உன்னையிந்த
தையலாள் எப்படிச் சேர்ந்தாள்.

அன்னவயல் சூழு மாரூர்த் தியாகேசனார்க்
கின்னம் வயிர மிருக்குமோ – முன்னமொரு
தொண்டர் மகனைக் கொன்றும் சோழர் மகனைக் கொன்றும்
சண்ட மதனைக் கொன்றும் தான்.

ஒருமாடுமில்லாமல் மைத்துனனார் புவிமுழுது முழுதேயுண்டார்
நரைமாடொன் றுமக்கிருந்து முழுதுண்ண மாடாடமல் நஞ்சையுண்டீர்
இருநாழி நெல்லுக்கா இரண்டு பிள்ளைக்கும் தாய்க்கும் இரந்தீரின்று
திருநாளுமாயிற்றோ செங்கமலைப் பதிவாழும் தியாகனாரே.

ஆடாரோ பின்னையவர் அன்பரெலாம் பார்த்திருக்க
நீடாரூர் வீதியிலே நின்று தாம் –தோடாரும்
மெய்க்கே பரிமளங்கள் வீசும் தியாகேசர்
கைக்கே பணமிருந்தக் கால்

பாரூரறியப் பலிக்குழன்றீர் பற்றிப் பார்க்கிலுமக்
கோரூருமில்லை இருக்கவென்றா லுள்ளவூரு மொற்றி
பேரூரறியத் தியாகரென்றே பெரும்பேரும் கொண்டீர்
ஆரூரிலிருப் பீரினிப் போய்விடு மம்பலத்தே

சட்டியிலே பாதியந்தச் சட்டுவத்திலே பாதி
இட்டவிலை யிற்பாதி யிட்டிருக்கத் திட்டமுடன்
ஆடிவந்த சோணேசா வென்றழைத்த போது பிள்ளை
ஓடிவந்த தென்னா உரை

ஆடல்புரிந் தானென் றந்நாளிலே மூவர்
பாடலு வந்தானென்ற பான்மையான் கூடலிலே
நன்னரி வாசிக்கு நடைபயிற்றி னானென்றும்
கின்னரி வாசிக்கும் கிளி

கண்டீரோ பெண்காள் கடம்பவனத் தீசனார்
பெண்டீர் தமைச் சுமந்த பித்தனார்- எண்டிசைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்
அக்காளை யேறினா ராம்.

நல்லதொரு புதுமை நானிலத்தில் கண்டேன்
சொல்லவா சொ்ல்லவா சொல்லவா –செல்வ
மதுரை விக்கினேசுரனை மாதுமையாள் பெற்றாள்
குதிரை விற்க வந்தவனைக் கூடி.

மண்டலத்தில் நாளும் வைத்தியராய்த் தாமிருந்து
கண்டவினை தீர்க்கின்றார் கண்டீரோ தொண்டர்
விருந்தைப் பார்த் துண்டருளும் வேளூரெந் நாதர்
மருந்தைப் பார்த்தால் சுத்த மண்.

கண்ணனிடும் கறியும் காட்டு சிறுத் தொண்ட ரன்பிற்
பண்ணுசிறுவன் கறியும் பற்றாதோ- தண்ணிய
மட்டியையுஞ் சோலை மருதீசரே பன்றிக்
குட்டியை யேன்றீத்தீர் குறித்து.

காலையிலும் வேலை கடையக் கயிறாகும
மாலையிலும் பூ முடித்து வாழும்- சோலை செறி
செய்யிலா ரம்பையிலும் செந்துருத்தி மாநகர் வாழ்
பொய்யிலா மெய்யரிடும் பூண்.

மூப்பான் மழுவு முராரி திருச்சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ வாய்ப்பார்
வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை யையோ
எலி யிழுத்துப் போகின்ற தே

அப்பன் இரந்துண்ணி ஆத்தாள் மலை நீலி
செப்பரிய மாமன் உறி திருடி சப்பைக் கால்
அண்ணன் பெருவயிற னாறுமுகத் தானுக்கிங்
கென்ன பெருமை யிது

வாணியன் வாழ்த்திட வண்ணான் சுமக்க வடுகன் செட்டி
சேணியன் போற்றத் திரைப்பள்ளி முன் செல்லத் தீங்கரும்பைக்
கோணியன் வாழ்த்தக் கருமான் றுகிலினைக் கொண்டணிந்த
வேணியனாகிய தட்டான் புறப்பட்ட வேடிக்கையே.

முன்னே கடிவாளம் மூன்று பேர் தொட்டிழுக்கப்
பின்னே யிருந்திரண்டு பேர் தள்ள என்னேரம்
வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம் போம் காதவழி.

அம்பேந்தி கையானவன் பதியிலைம் மாவைக்
கொம்பேந்தி தந்தை பணிகொண்டதோ அன்பா
அரிந்த மகவை அழையென்று சொல்லி
இருந்த வன்றன் செங்காட்டிலே.

சிலேடைகள்

ஆமணக்கு - யானை
முத்திருக்கும் கொம்பசைய மூரித்தண் டேந்திவரும்
கொத்திருக்கு நேரே குலை சாய்க்கும் எத்திசைக்கும்
தேமணக்கும் சோலைத் திருமலைராயன் வரையில்
ஆமணக்கு மால் யானையாம்.

எள் - பாம்பு
ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்
மூடித் திறக்கில் முகம் காட்டும் ஓடுமண்டை
பற்றிப் பரபரவென்னும் பாரிற் பிண்ணாக்கு முண்டாம்
உற்றிடு பாம் பெள்ளெனவே ஓது

யானை - வைக்கோல்
வாரிக் களத்தடிக்கும் வந்து பின்பு கோட்டை புகும்
போரிற் சிறந்து பொலிவாகும் சீருற்ற
செக்கோல மேனித் திருமலைராயன் வரையில்
வைக்கோலு மால் யானையாம்

பாம்பு - எலுமிச்சைப் பழம்
பெரியவிடமே சேரும் பித்தர் முடியேறும்
அரியுண்ணு முப்புமே லாடும் எரிகுணமாம்
தேம்பொழுயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பும் எலுமிச்சம் பழம்

மலை - சந்திரன்
நிலவாய் விளங்குதலால் நீள்வான் படிநது
சிலபோதுலவுதலாற் சென்று தலை மேல்
உதித்து வரலால் உயர் மலையை
மதிக்கு நிகராக வழுத்து

தேங்காய் - நாய்
ஓடிருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலை தனக்கு நாணைது சேடியே
தீங்காய தில்லாத் திருமலைராயன் வரையில்
தேங்காயும் நாயும் தெரி

மீன் - பேன்
மன்னீரிலே பிறக்கும் மற்றலையிலே மேயும்
பின்னீச்சிற் குத்தும் பெருமையால் சொன்னேன் கேள்
தேனுந்து சோலைத் திருமலைராயன் வரையில்
மீனும் பேனும் சரியாமே

குதிரை -காவிரி
ஓடுஞ் சுழிசுத்த முண்டாக்குந் துள்ளலலரைச்
சாடு பரிவாய்த் தலை சாய்க்கும் நாடறியத்
தேடுபுகழாளன் றிருமலைராயன் வரையில்
ஆடுபரி காவிரியா கும்.

கீரைப்பாத்தி - குதிரை
கட்டியடிக்கையாற் கான்மாறிப் பாய்கையால்
வெட்டி மறிக்கின்ற மேன்மையால் முட்டப் போய்
மாறத் திருப்புகையால் வன் கீரைப் பாத்தியும் மன்
ஏறப் பரியாகு மே

ஆடு - குதிரை
கொம்பிலையே தீனி தின்னும் கொண்டதன்மேல் வெட்டுதலால்
அம்புலியி னன்னடைய தாதலால் உம்பர்களும்
தேடுநற் சோலைத் திருமலைராயன் வரையில்
ஆடுங் குதிரையு நேராம்

துப்பாக்கி - ஓலைச் சுருள்
ஆணிவரையுறலான் குறிப்பே தரலான்
தோணக் கருமருந்து தோய்த்திடலாலால் நீணிலத்தில்
செப்பார்க் குதவாத் திருமலைராயன் வரையில்
துப்பாக்கி ஓலைச் சுருள்

பூசணிக்காய் - ஈசன்
அடிநந்தி சேர்தலால் ஆகம் வெளுத்துக்
கொடியு மொருபக்கங் கொண்டு வடிவுடைய
மாசுணத்தைப் பூண்டு வளைத் தழும்பு பெற்றதனால்
பூசணிக்காய் ஈசனெனப் போற்று

வானவில் - திருமால்
நீரிலுளதா னிறம்பச்சை யாற் றிருவால்
பாரிற் பகை தீர்க்கும் பான்மையால் சாருமனுப்
பல்வினையை மாற்றுதலால் பாரீர் பெருவான
வில் விண்டு நேர் வெற்றிலை.

சிவன் - விஷ்ணு
சாரங்கபாணி யருஞ்சக்கரத்தர் கஞ்சனை முன்
ஓரங்கங் கொய்த உகிர்வாளர் பாரெங்கும்
ஏத்திடு மையாக ரினிதாயி வரும் மைக்
காத்திடுவ ரெப்போதுங் காண்

சிவன் - கணபதி
சென்னிமுக மாறுளதால் சேர்தருமுன் னாலு கையால்
இன்னிலத்திற் கோடொன் றிருக்கையால் மன்னுகுளக்
கண்ணுதலானும் கணபதியும் செவ்வேளுக்கு
எண்ணரனு நேராவரே.

அரசன் - கண்ணாடி
யாவருக்கு மாஞ்சனை செய் தியாவருக்கு மவ்வவராய்ப்
பாவளையாய்த் தீதகலப் பார்த்தலால் ஏவும்
எதிரியைத் தன்னுள்ளாக்கி யேற்ற ரசத்தால்
சதிருறலா லாடி யரசாம்

வாழைப்பழம் - பாம்பு
நஞ்சிருக்குந் தோலிருக்கும் நாதர் முடி மேலிருக்கும்
வெஞ்சினத்திற் பற்பட்டால் மீளாதே விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பாகும் வாழைப்பழம்

கத்தி- பால்
காய்த்துத் தோய்த்துக் கடை.

சிட்டுக்குருவி-சிவன்
பிறப்பிறப்பிலே

யமகண்டப் பாடல்கள்
மெச்சுதிரு வேங்கடவா வெண்பாவிற் பாதியிலென்
இச்சையிலுன் சென்ம மியம்பவா - மச்சா கூர்
மாகோலா சிங்காவா மாராமா ராமாரா
மாகோமா லாமாவா வா.

பகருங்கான் மேடமிடப மிதுனங் கர்க்க
டகஞ்சிங்கங கன்னிதுலாம் விருச்சிகந்த
னுசுமகரங் கும்பமீன பன்னிரண்டும்
வசையறு மிராசி வளம்.

சிறுவளணை பயறு செந்நெல் கடுகு
மறிதிகிரி தண்டு மணிநூல் பொறியரவம்
பெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்
கற்றாழம் பூவே கறி.

வாரணங்களெட்டும் மாமேருவும் கடலும்
தாரணியும் நின்று சலித்தனவால் நாரணனைப்
பண்வாயிடைச்சி பருமத்தினா லடித்த
புண்வாயில் ஈ மொயத்த போது

ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறு வேழெட்டு
ஒன்பது பத்துப் பதினொன்று பன்னி
ரண்டுபதி மூன்றுபதிநான்கு பதினைந்து பதி
னாறு பதினேழு பதினெட்டு.

விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் பெண்ணை
இடத்திலே வைத்த இறைவர் சடாம
குடத்திலே கங்கை அடங்கும்.

நூலா நாலாயிரத்து நாற்பத் தொன்பதான்
பாலா நானூற்று நாற்பத் தொன்பான் மேலா நாறஅ
பத்தொன்பான் சங்கமறு பத்துநா லாடலுக்கும்
கர்த்தன் மதுரையிற் சொக்கன்.

நீரே பிறவா நெறிகாட்டி யாரெமக்கு
நீரே சமிசை நிலையிட்டீர் – நீரே இவ்
விங்ஙனமேன் செய்தீர் வீடுங் கடுங்காற்று மழை காட்
டுங் கடுநட்புப் பகை காட்டும்.

சுத்தபாற் கடலினடுவினிற் றூளி தோன்றிய வதிசயமது கேள்
மத்தகக் கரியையுரித்தவன் மீது மதன் பொருதழித்திடு மாற்றம்
வித்தகக் கமலை செவியுறக் கேட்டாள் விழுந்து நொந்து அயர்ந்து அழுது ஏங்கி
கைத்தல மலரால் மார்புறப் புடைத்தாள் எழுந்தது கலவையின் செந்தூள்.

ஓகாமாவீதோ டுடுடுடுடு நேரொக்க
நாகார் குடந்தை நகர்க்கிறைவனார் –வாகாய்
எடுப்பர் நடம்புரிவ ரேறுவ ரன்பர்க்கு
கொடுப்ப ரணிவர் குழைக்கு

அரையின் முடியிலணி மார்பி னெஞ்சில்
தெரிவை யிடத்தமர்ந்தான் சேவை புரையறவே
மானார் விழியீர் மலரண வொற்றிருக்கும்
ஆனாலாம் நாநீநூநே

நீறாவாய் நெற்றி நெருப்பாவாய் அங்கமிரு
கூறாவாய் மேனி கொளுந்துவாய் மாறாத
நட்டமா வாய் சோறு நஞ்சாவாய் நாயேனை
இட்டாமாய்க் காப்பா யினி

மாயன் றுயின்றதுவும் மாமலராள் சொல்லதுவும்
ஏய குருந்திற் கொண்டேறியதும் தூயை
இடப்பாகன் சென்னியின் மேலேறியதும் பச்சை
வடம் பாகு சேலை சோமன்

வாதமண ரேறியது மாயன் றுயின்றதுவும்
ஆதி தடுத்தாட் கொண்ட அவ்வுருவும் சீதரனார்
தாள் கொண் டளந்ததுவும் தண்கச்சிக் காவலா
கேள் செங்கழுநீர்க் கிழங்கு

செருப்புக்கு வீரர்களைச் சென்றுழக்கும வேலன்
பொருப்புக்கு நாய்களைப் புல்ல மருப்புக்குத்
தண்டன் பொழிந்த திருத்தாமரை மேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்குமாறே.

உடுத்ததுவும் மேயத்ததுவும் உம்பர்கோன் றன்னால்
எடுத்ததுவும் பள்ளிக் கியையப் படுத்ததுவும்
அந்நா றெறிந்ததுவும் அன்பி னிரந்தததுவும்
பொன்னா வரையிலை காய் பூ

பாணற்குச் சொல்லுவதும் பைம்புனலை மூடுவதும்
தாணு வுரித்ததுவும் சக்கரத்தோன் ஊணதுவும்
எம்மானை யெய்துவது மீசனிடத்துஞ் சிரத்தும்
தைம்மாசி பங்குனி மாதம்

வண்ணங் கரியனென்றும் வாய் தேவநாரியென்றும்
கண்ணனிவனென்றுங் கருதாமல் மண்ணை
அடிப்பது மத்தாலே யளந்தானை யாய்ச்சி
அடிப்பது மத்தாலே யழ

சங்கரற்கு மாறுதலை சண்முகற்கு மாறுதலை
ஐங்கரற்கு மாறுதலை யானதே சங்கைப்
பிடித்தோற்கு மாறுதலைப் பித்தனார் பாதம்
பிடித்தோர்க்கு மாறுதலை பார்.

நேற்றிரா வந்தொருவ னித்திரையிற் கைபிடித்தான்
வேற்றூரானென்று ......யென்றேன் ஆற்றியே
கஞ்சி குடியென்றான் களித்தின்று போவென்றேன்
வஞ்சியரே சென்றான் மறைந்து

தடக்கடலிற் பள்ளிகொள்வோ மதனைநற் சங்கரனார்
அடற்புலிக் குட்டிக் களித்தனரா மதுகேட்டு நெஞ்சில்
நடுக்கம் வந்துற்றது கைகாலெழா நளினத்தியென்னை
இடுக்கடி பாயைச்சுருட்டடி யேகடியம்பலத்தே

கரிக்காய் பொறித்தால் கன்னிக்காய் தீய்த்தாள்
பரிக்காயைப் பச்சடியாயாப் பண்ணி உருக்கமுள்ள
அப்பைக்காய நெய்துவட்ட லாக்கினாள் அத்தை மகள்
உப்புக் காண் சீச்சீ உமி

கொட்டைப்பாக்கும் ஒரு கண் கூடையைப் பார்க்கும் மடியில்
பிட்டைப் பார்க்கும் பாகம் பெண்பார்க்கும் முட்டநெஞ்சே
ஆரணனு நாரணனு மாதிமறையுள் தேடும்
காரணனைக் கண்டு களிப்பாக்கு

செற்றவரை வென்ற திருமலைராயன் நகரத்தில்
வற்றிபுரியும் வாளே வீரவாள் மற்றையவாள்
போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள்
ஆவாளி வாளா வாளாம்

முக்கண்ண னென்றரனை முன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற் குள்ள தரைக்கண்ணே தொக்க
உமையாள் கண்ணொன்றரை மற்றூன் வேடன் கண்ணொனஅ
றமையு மிதனா லென்றறி

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்றன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும் குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்

அருந்தினா னண்டமெலா மன்று மாவீசன்
இருந்தபடி யேதென் றியம்பப் பொருந்திப்
பருங்கவளம் யானை கொளப் பாகன் தன் மீதே
இருந்தபடி யீசனிருந் தான்

தந்தை பிறந்திறவாத் தன்மையினாற் தன் மாமன்
வந்து பிறந்திருக்கும் வண்மையினால் முந்தொருநாள்
வீணிக்கு வேளையரித்தான் மகன் மாமன்
காணிக்கு வந்திருநதான் காண்.

காலனையுங் காமனையுங் காட்டுசிறுத் தொண்டர் தரும்
பாலனையுங் கொன்ற பழிபோமோ சீலமுடன்
நாட்டிலே வாழ்ந்திருக்கு நாதரே நீர் திருச் செங்
காட்டிலே வந்திருந்தக் கால்

பெருமாளு நல்ல பெருமா ளவர்தம்
திருநாளு நல்ல திருநாள் பெருமாளும்
இருந்திடத்திற் சும்மா இராமையினா லையோ
பருந்தெடுத்துப் போகிறதே பார்.

எட்டொருமா எண்காணி மீதே இருந்த கலை
பட்டொருமா னான்மாவிற் பாய்ந்ததே சிட்டர் தொழும்
தேவாதி தேவன் திருவத்தி யூருடையான்
மாவேறி வீதிவரக் கண்டு.

அப்பா குமரக் கோட்டக் கீரை செய்விலி மேட்
டுப்பாகற் காய்ப்பருத்திக் குளநீர் செப்புவா
சற்காற்றுக் கம்பத்தடியிற் றவங் கருமா
றிப் பாய்ச்சல் யார்க்கு மினிது

முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால் கண் டஞ்சாமுன் விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகா முன் கச்சி
ஒருமாவின் கீழரையின் றோது

மன்னு மருணகிரி வாழ் சம்பந் தாண்டாற்குப்
பன்னுதலைச் சவரம் பண்ணுவதேன்-மின்னின்
இளைத்த விடை மாதரிவன் குடுமி பற்றி
வளைத் திழுத்துக் குட்டா மலுக்கு.

வாழ்த்து திருநாகை வாகன தேவடியாள்
பாழ்த்த குரலெடுத்துப் பாடினாள் நேற்றுக்
கழுதை கெட்ட வண்ணான் கண்டேன் கண்டேனென்று
பழுதையெடுத் தோடிவந்தான் பார்.
ஞானசபை கனகசபை நர்த்தசபை
ஆனந்தக் கூடம் திருமூலட்டானம் பே
ரம்பலம் பஞ்சவாரண நாற்கோபுரம் பொற்
கம்ப மண்டபம் சிவகங்கை.

ஔவையார் பாடல்கள்

இட்டமுடன் என்றலையி லின்னபடி யென்றெழுதி
விட்டசிவனும் செத்துவிட்டானோ முட்டமுட்டப்
பஞ்சமே யானாலும் பாரமவனுக் கன்னாய்
நெஞ்சமே அஞ்சாதிரு

தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழமண்டலமே பெண்ணாவள்
அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு.

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா

வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமை சொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்

காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர் முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே- நாணாமல்
பேச்சுப் பேச்சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக் கீச்சென்னும் கிளி

சுரதந்தனி லிளைத்த தோகை சுகிர்த
விரதந்தனி லிளைத்த மேனி நிரதம்
கொடுத் திளைத்த தாதா கொடுஞ்சுளிற் பட்ட
வடுத் தொளைத்த கல்லாபிராமம்

ஈதலறந் தீவினைவிட் டீட்டல் பொருள் எஞ்ஞான்றும்
காதலிருவர் கருத்தொருமித் தாதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்திம் மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

வெண்பா விருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையா லெழுதானை யெஞ்ஞான்றும் பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளென்
றெற்றோ மற்றெற்றோ மற்றெற்று

வானமுளதால் மழையுளதால் மண்ணுலகில்
தானமுளதால் தயையுளதால் ஆனபொழு
தெய்த்தோ மிளைத்தோ மென்றே மாந்திருப்போரை
எற்றோ மற்றெற்றோ மற்றெற்று

பாரி பறித்த பறியும் பழையனூர்க்
காரி கொடுத்த களைக் கொட்டும் சேரமான்
வாராயென வழைத்த வாய்மை யிம்மூன்றும்
நீலச் சிற்றாடைக்கு நேர்

விரகரிருவர் புகழ்ந்திடவே வேண்டும்
விரல் நிறைய மோதிரங்கள் வேண்டும் அரையதனிற்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர் கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று

நம்பனடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தைக்காம் வம்புக்காம்
கொள்ளைக்காம் கள்ளுக்காம் கோவுக்காம் காவுக்காம்
கள்ளர்க்காம் தீக்காகும் காண்

கருங்குளவி சூரைத்தூ றீச்சங்கனி போல்
விருந்தினர்க்கொன் றீயாதான் வாழ்க்கை அரும்பகலே
இச்சித்திருந்த பொருள் தாயத்தால் கொள்வரென்
றெற்றோ மற்றெற்றோ மற்றெற்று

எண்ணா யிரத்தாண்டு நீரிற் கிடந்தாலும்
உள்ளீரம் பற்றாக் கிடையே போல் பெண்ணாவாள்
மெற்றொடி மாதர் புணைர்முலை மேற் சார்வாரை
எற்றோ மற்றெற்றோ மற்றெற்று

ஒரு கொம் பிருசெவி மும்மதத்து நால்வாய்க்
கரியுரிவைக் கங்காளை காளாய் பரியுடனே
கண்ணால வோலை கடிதெழுத வாராயேல்
தண்ணாண்மை தீர்ப்பன் சபித்து

பர்த்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி இருக்கலாம் சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளே யாமாகில்
கூறாமல் சன்னியாசம் கொள்

திங்கட் குடையுடைச் சேரனும சோழனும் பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்து நின்றார் மணப்பந்தலிலே
சங்கொக்கவோர் குருத்தீன்று பச்சோலை சலசலத்து
நுங்குக்கண் முற்றி யடிக்கண் கறுத்து நுனி சிவந்து
பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே

சண்டாளி சூர்ப்பனகை தாடகை போல் வடிவு
கொண்டாளைப் பெண்ணென்று கொண்டாயே தொண்டர்
செருப்படி தான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்.

ஏசியிடலின் இடாமையே நன்றெதிரிற்
பேசு மனையாளிற் பேய் நன்று நேசமிலா
வங்கணத்தி னன்று பெரிய பகை வாழ்வில்லாச்
சங்கடத்திற் சாதலே நன்று

கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கு நாணுமே பெருங்கானிற்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்ற
தீரிரவு துஞ்சாதென் கண்

ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன்றாம் புலவர்
வார்த்தை பதினாயிரத் தொருவர் பூர்த்தமலர்த்
தண்டாமரைத் திருவே தாதா கோடிக் கொருவர்
உண்டாயின் உண்டென் றறு.

உள்ள வழக்கிருக்க ஊரார் பொதுவிருக்க
தள்ளி வழக்கதனை தான் பேசி எள்ளளவும்
கைக்கூலி வாங்கும் காலறுவான்றன் கிளையும்
எச்சமறு மென்றா லறு



(மேலும் வளரும்)

Thursday, July 21, 2011

பூதமாகி நின்றாய் காளி

புயல் என்றாலே அஞ்சி நடுங்கி அலறுகிறோம். அதன் உள்ளேயும் பரமாத்மாவைக் கண்டு வழிபடும் மனப் பக்குவத்தை ரிஷிகள் பெற்றிருந்தனர். ரிஷிகளின் வேத மந்திரம் நமக்கு வட மொழியில் சொன்னாலும் புரிவதில்லை, அதைத் தமிழில் மொழி பெயர்த்தாலும் புரிவதில்லை. எனவே பாரதி தன் ஆழ்ந்த புலமையால் அதன் உட்பொருளை நாம் அனைவரும் விளங்கிக் கொள்ளும்படியாக எளிமைப்படுத்திப் புதுமை செய்தததை இப்பொழுது காண்போம்.

ரிக்வேதம் முதல் மண்டலம் 88 வது சூக்தம் - மருத்துக்களை (காற்றை)ப் பற்றி கௌதம ரிஷி பாடியது.

1வாரீர் மருத்துக்களே! மின்னல்களும் நல்ல பாட்டுக்களும் வேல்களும் நிரம்பியனவாய் காற்றுக் குதிரைகளைச் சிறகு போல் உடையனவாகிய தேர்களின் மீதேறி வருக. நல்ல மாயைகளை உடையீர்! மிக்க வளமுடைய இன்பத்தைக் கொண்டு எம்மிடத்தே பறவைகள் போல் வருக.

4 பருந்துகளே! எமது நாட்கள் உம்மை ஒரு முறை சுற்றி வந்து பிறகு எமது அறிவிடத்தேயும் எமது தெய்வீகமான செய்கையினிடத்தேயும் மீண்டெய்தி விட்டன.

ஆறு செய்யுள்கள் கொண்ட இதைப் பாரதி மொழி பெயர்த்துள்ளார். இரண்டு மட்டும் மேலே காட்டப்பட்டுள்ளன. படித்துப் பார்த்தால் என்ன புரிகிறது? இதற்குப் பாரதியின் முன்னுரையைப் படித்தால் ஓரளவு தெளிவு கிடைக்கும்.

வேத ரிஷிகள் காலத்தில் கோவில் கிடையாது. விக்ரக ஆராதனை கிடையாது. ஸந்யாஸம் கிடையாது. அத்வைத, த்வைத, விசிஷ்டாத்வைதப் பிரிவுகள் கிடையா. பக்தி மாத்திரம் தானுண்டு. கோவிலும் மடமும் பெளத்த மதப் பழக்கத்தால் நமக்குக் கிடைத்தவை. ஆனால் இப்போது இந்து மதத்திலிருந்து கோவிலைப் பிரிக்க முடியாது. கோவில்களுக்குள்ளே பரஸ்பரம் பொறாமையும் சண்டையும் இல்லாதபடி எல்லாக் கோவில்களும் ஸாக்ஷாத் ஸூர்யனாகவும் அக்னியாகவும் ருத்ரனாகவும் இந்திரனாகவும் வருணனாகவும் விளங்குகிற- பரமாத்மாவின் கோவில்களென்று நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ப்ரக்ருதி- இயற்கைத் தோற்றம். இதற்குள்ளே வியாபித்து நிற்கும் ஆத்மாவே விஷ்ணு. விஷ்ணுவைச் சிலையிலும் வணங்கலாம். மலையிலும் வணங்கலாம். வேத ரிஷிகள் நேராகக் கண்டு வணங்கினார்கள். உலகமே இவனுடைய உடம்பு. ஆதலால் அவர்கள் உலகத்தை வணங்கினர்.

மற்றொரு முறை விளங்கச் சொல்கிறேன். புயற் காற்று அடித்தது. வேத ரிஷிகள் அதன் முன்னே போய் நின்றார்கள். ஆயிரம் மின்னல்கள் வாள் போல வீசின. உலகம் குலுங்கிற்று. அண்டங்கள் இடிவது போலே சத்தம் கேட்டது. மேற்படி ரிஷிகள் பயப்படவில்லை. மந்திரங்களைப் பாடினார்கள். ருத்ரனுடைய உடம்பு தானே உலகம். வாயுவே ருத்ரன். வாயுவினுடைய உட் செய்கை தானே புயற் காற்று!

இந்திரன் மின்னலையும் இடியையும் காட்டுகிறான். மேகங்கள் சிதறுகின்றன. பூமிக்குத் தண்ணீர் கிடைக்கிறது. இதில் பயத்துக்கு இடம் எங்கே? ரிஷி புயற் காற்றைத் துதிக்கிறார். பிறகு இரவு நீங்கி சூர்யோதயம் உண்டாகிறது. அதைப் பார்த்து நேரே கை கூப்பி ரிஷி மந்திரம் பாடுகிறார். பட்சிகள் பாடுகின்றன. பூக்கள் மலர்கின்றன. நீரும் காற்றும் சிரிக்கின்றன. இதை ரிஷி போற்றும் போது ப்ரத்யக்ஷ நாராயணனைப் போற்றுகிறார்.

வீட்டிலே நெருப்பு வளர்த்து அதில் தெய்வத்தைக் கண்டு தொழும் வழக்கம் அக்காலத்தில் மிகுதிப்பட்டது. பொதுவாக இயற்கை வணக்கம் வழக்கமில்லாமல் போன பிறகும் அக்னி பூஜையும் சூர்ய பூஜையும் இன்று வரை நமக்குள்ளே மிஞ்சி நிற்கின்றன. ஸந்த்யா வந்தனாதிகளில் சூர்ய பூஜை நியதமாக நடந்து வருகிறது. சர்வ வைதிக கிரியைகளும் ஹோமம் வளர்த்துப் பூஜை பண்ணாமல் நடப்பதில்லை.

ப்ரக்ருதியை நேரே தொழும் வழக்கம் மிகுதிப்பட்டால் வேதம் ஒளி பெறும். மனத்தைக் கட்டி ஆளுவதற்கு மந்திரத்தை உச்சரிப்பதே வழி. மந்திரத்தின் ஒலியைத் தியானம் செய்தால் பயன் கிடைக்குமென்று தோன்றவில்லை. அதன் பொருளைத் தியானிக்க வேண்டும்.”

இனி முன் மொழி பெயர்த்த சூக்தத்தின் விளக்கத்தைப் பாரதி தருகிறார் கேட்போம்.

1 பழைய உலகத்தை மாற்றி புதிய உலகம் செய்வதும் பழைய காட்டை அழித்து புதிய காடு தோற்றுவிப்பதும் பழைய அறிவை நீக்கி புதிய அறிவு கொடுப்பதும் மருத்துக்களின் தொழில். அதனால் அவர்களுடைய தேர்களில் மின்னலும் நல்ல பாட்டும் வேலும் கொண்டு வருகிறார். மின்னலாலும் வேலாலும் பழமையை அழித்து நல்ல பாட்டினால் புதுமை பிறக்கும்படி செய்கிறார்கள்.

2 மருத்துக்களின் தலைவன் அரிவாளும் பொன் உடலும் கொண்டவன்.

3 மனிதர் பொருட்டாக மருத்துக்கள் மலையை அசைக்கிறார்கள். இந்த மலை அஞ்ஞானம், அகங்காரம்.

4 நாம் பல நாட்களாக மருத்துக்களை வேண்டிச் செய்த தவம் பயனடைந்துவிட்டது. கௌதம ரிஷியின் கூட்டத்தார் அமர வாழ்க்கை என்னும் கிணற்றின் மேல் உள்ள ஆணவம் என்னும் மூடியை அகற்றி அமிர்த பானம் செய்ய வழி வகுத்து விட்டனர். பருந்துகள் என்பது மருத்துக்களை.

5 இரும்புப் பற்களை உடைய காட்டுப் பன்றிகள் போல மருத்துக்கள் வருவதை நேரே ஞான விழியால் கௌதம ரிஷி கண்டு தன் அனுபூதியால் பாடியதால் இது நிகரற்ற பாட்டாகும்.

6 ஸ்வானுபூதியால் வெளிப்பட்ட பாட்டாகையால் இது யாதொரு சிரமமும் இல்லாமல் ஊற்றிலிருந்து நீர் புறப்படுவது போல் இயற்கையிலே தோன்றுகிறது. இந்த வாக்கினால் உலகத்தாரின் அஞ்ஞானம் நாசமடைகிறது.

Monday, July 18, 2011

ரிஷிகள்

ரிஷிகள் பற்றிய சில தவறான கருத்துகள் நம்மிடையே நிலவுகின்றன. சரியானதைத் தெரிந்து கொள்வோம்.

1 ரிஷிகளும் சன்னியாசிகளும் ஒன்று அல்ல. ரிஷிகள் அல்லது முனிவர் என்போர் வேறு. சந்நியாசிகள் அல்லது துறவிகள் என்போர் வேறு. ரிஷிகள் மனைவி மக்களுடன் வாழ்ந்தவர்கள். மாறாக, சன்னியாசி என்பவர் இல்லற வாழ்வைத் துறந்தவர். வேத காலத்தில் பிராமணர்களுக்கு மட்டுமே இந்தத் துறவறம் விதிக்கப்பட்டிருந்தது. பிரம்மசரியம் அல்லது கல்விப்பருவம், கிருஹஸ்தம் அல்லது இல்லறம், வானபிரஸ்தம் அல்லது காடுவாழ் பருவம் மூன்றையும் கடந்தபின் வருவது சன்னியாசம்.

ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றித் தீவிரமாகச் சிந்தனை செய்வோரே ரிஷி எனப்பட்டார். இது இறைவனைப் பற்றியதாகத் தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. பிற விஷயங்களாகவும் இருக்கலாம். நாட்டிய சாத்திரம் வகுத்த பரதரும், காம சூத்ராவின் ஆசிரியரான வாத்ஸ்யாயனரும் ரிஷி என்றே கூறப்படுகின்றனர். கடவுள் மறுப்புக் கொள்கையான சார்வாகம் பேசிய ஜாபாலி என்ற முனிவர் பற்றி வால்மீகி ராமாயணம் பேசுகிறது. முனி என்ற சொல்லுக்கு மனனம் (சிந்தனை) செய்பவர் என்பது பொருள். ரிஷி என்ற சொல்லுக்கு மந்திரத்தை மனக்கண்ணால் கண்டவர் என்பது பொருள். மந்திரம் என்பது இறைவன் பற்றிய மெய்ஞானம் மட்டுமல்ல, மனத்தின் ஆழத்தில் புதைந்து இருந்து, தீவிர சிந்தனையின் விளைவாக வெளிப்படும் உண்மையையும் குறிக்கும். சுருக்கமாகக் கூறுவதானால், இன்று ஆராய்ச்சியாளர் அல்லது சிந்தனையாளர் எனப்படுவோரே முன்பு ரிஷி எனப்பட்டனர் என்பது தெரிகிறது.

2 ரிஷிகள் என்றால் காட்டில் தான் வாழ வேண்டுமென்பது இல்லை. நகரத்தில் வாழ்ந்த ரிஷிகள் பலர் உண்டு. உதாரணமாக, ஜனகர், விஸ்வாமித்திரர் போன்ற ராஜரிஷிகளைக் கூறலாம். வசிஷ்டர் போன்று அரசருடைய குருவாக இருந்தவர்களும் நகரங்களிலேயே வாழ்ந்தனர்.

3 ரிஷிகள் காவி ஆடை உடுத்துபவர்கள் அல்ல. சன்னியாசிகள் தாம் துவராடை பூண்பவர்கள். அதுவும் சமண சாக்கிய சமயங்கள் தோன்றிய பின்னர் ஏற்பட்ட வழக்கமே. இளமையிலேயே துறவு பூணுதல், எல்லா வகுப்பினரும் துறவு பூணல், மற்றும் தலையை மழித்துக் கொள்ளுதல் ஆகிய வழக்கங்களை ஏற்படுத்தியது அவையே. சங்கரர் பௌத்த சந்நியாசிகளைப் பின்பற்றித் தலையை முண்டனம் செய்துகொண்டு பூணூலையும் களைந்து இளமையிலேயே துறவு பூண்டார். அதனால் அவர் பிரச்சன்ன பௌத்தர் –மறைமுக பௌத்தர்- எனப்பட்டார். இன்றும் சங்கரரின் வழிவந்தவர்கள் மேற்படி முறையில் தான் கோலம் கொள்கின்றனர். மாறாக, வைணவ சன்னியாசிகள் பழைய வேத முறைப்படி இல்லறத்தைக் கடந்த பின்னரே துறவு பூணுகின்றனர். தலையை முண்டனம் செய்யாமலும், பூணூல் அணிந்தும் காணப்படுகின்றனர்.

4 தவம் என்பது ஆராய்ச்சியே. தவம் என்ற சொல் தபஸ் என்ற வடமொழி வேரிலிருந்து பிறந்தது. அதற்கு உடலையும் உள்ளத்தையும் வெம்மைப் படுத்திக் கொள்ளுதல் என்பது பொருள். இடைவிடாத சிந்தனை இவ்வாறான நிலைமையை ஏற்படுத்துவதால் அது தவம் எனப்பட்டது. எனவே தவம் செய்யக் காட்டுக்குத் தான் போகவேண்டும் என்பது இல்லை.

5 எல்லா ரிஷிகளும் பிராமணர்கள் அல்லர். வேதப் பனுவல்களை இயற்றிய ரிஷிகளில் பலர் பிராமணர் அல்லாதவர்கள். பிறப்பின் காரணமாக ஒருவர் ரிஷி ஆவதில்லை. கடுமையான தவத்தின் மூலம் எவரும் ரிஷித் தன்மை அடைய முடியும் என்பதற்கு விசுவாமித்திரர் சான்று. விசுவாமித்திரர் தவிர வேறு பல அரசர்களும் வேத மந்திரங்களை இயற்றிய ரிஷிகளாகப் போற்றப்படுகின்றனர்- மந்தாத்ரி, ஷிபி, வசுமனான், பிரதர்த்தனன், மதுசந்தஸ், ரிஷபன், ரேணி, அம்பரீஷன், பரதன், மேதாநிதி, நாயகன், ரகுகணன், வக்ஷப்ரியன், புரூலன், வேனன், சுதாசன், கிருதசமதன், தேவாபி, சந்தானு.

வேதம் இயற்றிய ரிஷிகளில் பெண்டிரும் உண்டு - புலோமனை மகள் ஷசி, காமை மகள் சிரத்தை, சக்தி மகள் கோரவி, அப்பிரீணா மகள் வாக்கு, அகத்தியர் மனைவி லோபாமுத்ரை. (ஆதாரம் - தேவநேயப் பாவாணர் இயற்றிய தமிழர் மதம்)

வியாசர் பராசர முனிவருக்கும் மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவர். ஜாபாலா என்ற பெண்ணுடைய மகன் சத்திய காமன் கல்வி கற்கப் போகும்போது தன் தந்தை பெயரை அறிய விரும்பினான். அப்பொழுது அவள், உன் தந்தை யார் என்று எனக்குத் தெரியவில்லை என்றாள். அந்த சத்திய காமன் சிறந்த ரிஷியாகப் பெயர் பெற்றார். அதனால் தான் ரிஷி மூலம் விசாரிக்கக் கூடாது என்ற பழமொழி பிறந்தது. ஒருவர் ரிஷி ஆகிவிட்டால் அவருடைய சந்ததியினருக்கு அதே துறையில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்வதற்கான வாய்ப்பு மற்றவர்களை விட மிகுதியாக இருந்ததால் அவர்களும் ரிஷி ஆயினர்.

Friday, June 10, 2011

தமிழக அந்தணர்கள்

பொதுவாக அந்தணர் அனைவருமே ஆரியர்கள் என்றும், அவர்கள் அனைவரும் கைபர் போலன் கணவாய் வழியாக வட இந்தியாவில் நுழைந்து அங்கிருந்த திராவிடர்களைத் தென்னிந்தியாவிற்குத் துரத்தி விட்டார்கள் என்றும், பின் அங்கிருந்து அவர்களில் ஒரு பிரிவினர் தென்னாட்டிற்கும் வந்து குடியேறினார்கள் என்றும் ஆங்கிலேயர் தம் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாக எழுதி வைத்த வரலாறு கூறுகிறது. இது ஆட்சியாளர்களுக்கு வசதியாக இருப்பதால் இதுவே பள்ளிப் பாட புத்தகங்களில் போதிக்கப்படுகிறது. இதைப் பொய் என்று நிரூபிக்கும் தற்கால ஆராய்ச்சி உண்மைகள் புதைக்கப்பட்டுவிட்டன. உள்நோக்கத்துடன் எழுதப்பட்ட வரலாற்று நூல்களை ஆதாரமாகக் கொள்ளாமல், நம்பகமான சான்றுகளின் அடிப்படையில் தமிழக அந்தணர்கள் யார் என்பதைப் பார்ப்போம்.

இன்று தமிழ்நாட்டில் வாழும் பிராமணரில் பல மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள். பிற மொழி பேசுவோர் அனைவரும் அண்மைக் காலத்தில் அதாவது ஓரிரு நூற்றாண்டுக்குள் வேலையின் நிமித்தம் இங்கு வந்து குடியேறியவர்கள். அவர்களை நம் ஆய்விலிருந்து நீக்கி விடலாம். தமிழ் நாட்டில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அந்தணர்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். இவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1 பூர்விகக் குடிகள்
2 குடியேறியோர்
3 புதிய அந்தணர்கள்

1 அ பூர்விகக் குடிகள் - தொல்காப்பியர் காலம்

தமிழ்நாட்டில் தொல்காப்பியர் காலத்தில் அந்தணர்கள் இருந்திருக்கிறார்கள். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்டுவித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய அறுவகைத் தொழில் கொண்ட பார்ப்பனப் பக்கத்தையும், நான்மறைகளையும் பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [புறத்திணை இயல் 16, மரபியல் 71, பாயிரம்.]

1 ஆ பூர்விகக் குடிகள் - சங்க காலம்

சங்க காலத்தில் அந்தணர்கள் மிக உயர்வாக மதிக்கப்பட்டனர் என்பதற்கான பல சான்றுகள் அக்கால இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. நின் முன்னோர் எல்லாம் பார்ப்பனர் நோவன செய்யார் என்று ஒரு புலவர் ஓர் அரசனிடம் கூறுவதாக புறம் 43 உரைக்கிறது. புறம் 99இல் ஔவையார் அதியமான் நெடுமானஞ்சியின் முன்னோர் அமரர்ப் பேணி ஆவுதி அருத்திய (தேவர்களை மகிழ்விக்க வேள்வி செய்த) பெருமையைப் பேசுகிறார். புறம் 166, நான்கு வேதம், ஆறு ஆங்கம் ஓதி உணர்ந்த அந்தணர்கள் அறம் ஒன்று மட்டுமே புரிந்ததையும் 21 வகையான வேள்விகள் பற்றியும் குறிப்பிடுகிறது. புறம் 367 அந்தணர்கள் ஓம்பும் முத்தீ பற்றிக் குறிப்பிடுகிறது.

சங்க காலப் புலவர்களில் பலர் அந்தணர்கள். புறநானூற்றுப் புலவர்களில் மூவர் – தாமோதரனார், பெருஞ்சாத்தனார், பேரிசாத்தனார் - வடம வண்ணக்கண் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றனர். வடம என்ற சொல் வடநாட்டிலிருந்து வந்தவர் என்று குறிப்பதாகச் சிலர் கொள்வர். இவ்வாறு வடம என்ற அடைமொழி பெறாத அந்தணர்களும் இருந்தனர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் கபிலர், கவுணியன் விண்ணந்தாயன். அவர்கள் இந்த மண்ணின் பூர்விகக் குடிகளாக இருத்தல் வேண்டும்.

1 இ பூர்விகக் குடிகள் – களப்பிரர் காலம்

களப்பிரர் காலத்தில் வாழ்ந்த பூர்விகக் குடி அந்தணர்களில் ஒரு பிரிவினர் சோழியர் என அழைக்கப்பட்டனர் எனத் தெரிகிறது. ஒரு காலத்தில் இவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவி இருக்க வேண்டும். குறைந்தது, சோழநாடு முழுவதும் பரவி இருக்க வேண்டும். இவர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தனர். இன்று தில்லை தவிர்த்தப் பிற பகுதியில் இருந்த சோழியப் பிராமணர்கள் புதிதாக வந்தவர்களுடன் கலந்து விட்டனர்.

1 இ 1 தீட்சிதர்கள்

நடராஜாவை முதல்வராகக் கொண்ட, தில்லை மூவாயிரவர் என்று முற்காலத்தில் சிறப்பிக்கப்பட்ட இவர்கள் இன்று எண்ணிக்கையில் சில நூறுகளாகக் குறைந்துவிட்ட போதிலும் பிற அந்தணர்களுடன் திருமண உறவு கொள்ளாமல் தங்கள் தனித் தன்மையை இன்றும் பாதுகாத்து வருகின்றனர்.

மற்றத் தமிழ்நாட்டுக் கோயில்களில் பூசை செய்யும் சிவாசாரியர்களுக்கும் இவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. சிவாசாரியர்கள் வேதத்தின் ஒரு பகுதியை மட்டும் கற்று ஆகமத்தைப் பிரதானமாகக் கொண்டிருப்பது போல அல்லாமல், இவர்கள் வேதம் முழுமையும் கற்பவர்கள். அம்மையாரால் மயானத்தாடியாக வர்ணிக்கப்பட்ட ஆடற்பெருமானை அம்பலத்தில் ஏற்றி அவருக்கு வைதிக முறையிலான வழிபாட்டை ஏற்படுத்தியவர்கள் இவர்களே.

தங்கள் சிகையைப் பக்கவாட்டில் முடிந்து கொள்ளும் இவர்களது முறை மற்றவர்களிடமிருந்து மாறுபட்டது. முன் குடுமிச் சோழியன், சோழியன் குடுமி சும்மா ஆடாது என்ற வழக்காறுகளில் குறிப்பிடப்படுபவர்களும் சோழநாட்டின் பூர்விகக் குடிகளுமான சோழியர்களில் ஒரு பிரிவினராக இவர்கள் இருக்க வேண்டும். ஆனால் இன்று அவர்கள் தங்களைச் சோழியர்கள் என்று சொல்லிக் கொள்ளாமல் தீட்சிதர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். தீட்சிதர் என்பது ஒரு குலப் பெயரல்ல. விரதம் பூண்டவர் என்று பொருள்படும் இப்பட்டம், யாகம் செய்தவர்களுக்கும் அவர்கள் பரம்பரையினருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்படுவது. மற்ற தீட்சிதர்களுக்கும் தில்லை தீட்சிதர்களுக்கும் தொடர்பு இல்லை. [முன் குடுமி வழக்கம் கொண்ட கேரள நம்பூதிரிகளும் இந்தச் சோழியரே என்றும் ஆதி சங்கரர் அந்தக் குலத்தில் தோன்றியவர் என்றும் காஞ்சி மஹாஸ்வாமிகள் கூறுகிறார். தெய்வத்தின் குரல் பாகம் 5 சங்கரர் வரலாறு]

1 இ 2 நம்பியார்கள்

சைவத்தைச் சார்ந்த 300 சோழிய அந்தணர்கள் ஆவுடையார்கோவிலை ஒட்டிய பகுதியில் வாழ்ந்தனர். தில்லை மூவாயிரவர் போல, இவர்கள் ஆவுடையார்கோவில் முந்நூற்றுவர் எனப்பட்டனர். இன்று அக்கோவிலில் பூசை செய்பவர்கள் மட்டும் நம்பியார் என்ற பட்டப் பெயர் கொண்டவர்கள். இவர்கள் இன்றும் தங்களைச் சோழியர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இவர்கள் முன்குடுமியைக் கைவிட்டு விட்டனர். ஆனால் ஆவுடையார் கோவிலில் உள்ள சிற்பங்கள் அங்கு முன்பு வாழ்ந்த பிராமணரும், பிறரும் முன்குடுமி கொண்டிருந்தார்கள் என்று காட்டுகின்றன.

1 இ 3 தென்கலை வைணவர்கள்

பழந் தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு நம்பி என்ற பட்டம் பெருவழக்காக இருந்ததைப் பார்க்கிறோம். தென்கலை வைணவர்களும் சோழியர்களே. அவர்களும் நம்பி என்ற பட்டப் பெயரைப் பெற்றிருந்தனர். ராமானுஜரின் உறவினர்களும் குருமார்களும் பலர் நம்பி என்ற பின்னொட்டு தாங்கியவர்கள்.

1 இ 4 ஆனைக்கா அந்தணர்கள்

திருவானைக்காவில் பூஜை செய்பவர்கள் பிரதமசாகி, அய்யாநம்பி, திருணபட்டன் எனப் பல்வகைப் பட்டப் பெயர்களைக் கொண்ட வைதிகப் பிராமணர்கள். அங்கு பின்பற்றப்படும் பூஜை முறையும் வித்தியாசமாக உள்ளது. இவர்கள் இன்று வடமர்களுடன் கலந்து விட்டாலும் இவர்களது முன்னோர்கள் முற்காலத்தில் சோழியர்களாகவே இருந்திருத்தல் வேண்டும்.

1 இ 5 வீழி அந்தணர்

ஆவுடையார்கோவில் முந்நூற்றுவர் போல் திருவீழிமிழலை அந்தணர் ஐநூற்றுவர் என்ற வழக்கும் உண்டு. இவர்களும் பண்டைச் சோழியர்களாகவே இருத்தல் கூடும். ஆனால் இன்று அங்கு சோழியர் என்று சொல்லிக் கொள்வோர் இல்லை.

1 இ 6 நயினார், பட்டர், திருசுதந்திரர்

திருவாரூரில் பூசை செய்யும் நயினார், பிரமராயர் திருச்செந்தூரில் பூசை செய்யும் திருசுதந்திரர், மதுரைக் கோவிலில் பூசை செய்யும் பட்டர்கள் இத்தகைய பழந் தமிழ்க் குடிகளே.

களப்பிரர் கால அந்தணர்கள்

சைவ சமய வரலாற்றில் அம்மையாருக்கும் அப்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த அந்தணர்களின் பங்கு முக்கியமானது. அந்தணர்கள் பலர் இருந்த போதிலும் சைவத்தைச் சார்ந்த அந்தணர்கள் மட்டும் தில்லை மூவாயிரவர், ஆவுடையார் கோவில் முந்நூற்றுவர், திருவீழிமிழலை ஐநூற்றுவர், திருவானைக்கா சோழியர்கள், செந்தூர் ஈராயிரவர் என்று எண்ணிக்கையோடு சுட்டப்பட்டிருப்பதால் இவர்கள் சிறுபான்மையினர் என்றும் பெரும்பாலானோர் வைணவத்தைச் சார்ந்திருந்தார்கள் என்பதும் பெறப்படுகிறது.

சிவன் வேத தெய்வம் அல்ல என்பதாலும், வேத ருத்திரன் தவிர வேறு இரண்டு தோற்றுவாய்களிலிருந்து (சுடலை மாடன், சிந்துவெளியின் மகாயோகி) சைவம் உருவாக்கப்பட்டது என்பதாலும் வேள்விகளில் சிவனுக்கு அவிர்ப்பாகம் கொடுப்பதை அவர்கள் எதிர்த்திருக்கக் கூடும். இறுதியில் சைவ அந்தணர்கள் வெற்றி பெற்றனர். இதுவே தக்கன் கதை நமக்கு உணர்த்தும் வரலாற்றுச் செய்தியாகும். அம்மையாரால் குறிப்பிடப்படாத இப் புராண நிகழ்ச்சி, தேவாரத்தில் பெருமளவு குறிக்கப்படுவதிலிருந்து இது இடைப்பட்ட காலத்தில் நடந்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்கலாம்.

2 புதிய குடியேற்றம்

அம்மையார் காலத்துக்குப் பின் தமிழ் நாட்டில் பல முறை அந்தணர்கள் வடபுலத்திலிருந்து வந்து குடியேறினர். இவர்களில் வடமர் என்ற குழு மட்டும் தமிழ்ப் பெயரைத் தாங்கி நிற்கிறது. மற்றவற்றின் பெயர்கள் வடமொழியில் உள்ளன. எண்ணிக்கையில் மிகுந்தவர்களும் வடமர்களே. பல்லவர் காலத்தில் வந்த பிரகசரணம் (தண்டந்தோட்டம் கல்வெட்டு), வாத்திமர், கேசியர், ராஜேந்திர சோழன் காலத்தில் குடியேற்றப்பட்ட அஷ்ட ஸஹஸ்ரம் ஆகிய குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் உரியதாக தலா பதினெட்டு கிராமங்கள் உண்டு. வடமர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கிராமங்கள் இல்லை. அவர்கள் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்தனர். குறிப்பாக, சோழநாட்டில் வாழ்ந்த வடமர் எண்ணிக்கை மிகுதி.

இவர்கள் வெவ்வேறு குழுக்களாகப் பல்வேறு காலங்களில் வந்தவர்களாக இருக்க வேண்டும். வடமருக்கு மட்டும் தமிழ்ப் பெயரும் மற்றவர்க்கு வடமொழிப் பெயரும் இருப்பதிலிருந்து பின்வருமாறு ஊகிக்கலாம். முதலில் வந்தவர்களுக்கு இங்குள்ள தமிழர்கள் தமிழில் வடமர் என்று பெயர் சூட்டினர். பின்னர் வந்தவர்களும் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்றாலும் அவர்கள் தங்களைச் சாராதவர்கள் என்று வேறுபடுத்திக் காட்டுவதற்காக வடமர்கள் தங்கள் மொழியில் அவர்களுக்குப் பெயரிட்டு இருக்கலாம். எல்லோரும் வருணத்தால் அந்தணர் எனினும் இக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று கலக்கவில்லை. பின்னர் வந்த ஒவ்வொரு குழுவுக்கும் 18, 18 கிராமங்களை ஒதுக்கிவிட்டு பெரும்பான்மையான இடங்களில் வடமர் வாழ்ந்தனர்.

இந்த வடமர்கள் எங்கிருந்து வந்தவர்கள் ?

அம்மையார் காலத்தில் இல்லாத திருநீறு பூசும் வழக்கமும் கணபதி வழிபாடும் அப்பர் காலத்தில் ஏற்பட்டிருப்பதால் இவ்விரண்டு வழக்கங்களும் நிலவும் பிரதேசமான மராட்டியப் பகுதியிலிருந்து இவர்கள் வந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. மகாராட்டிரத்தின் கொங்கணக் கடற்கரையில் உள்ள சித்பாவன் பிராமணர்களின் தலை அமைப்பு, தமிழ் நாட்டில் சில அந்தணரிடையே காணப்படுகிறது என்ற நீலகண்ட சாஸ்திரியின் வரலாற்றுக் கூற்று இதனை உறுதிப்படுத்துகிறது. தமிழ்நாட்டு அந்தணர்கள் இன்றளவும் தினசரி சந்தியா வந்தனத்தில் நர்மதை நதிக்கு வணக்கம் செலுத்துவதிலிருந்து இவர்களது பூர்விக இடம் கொங்கணக் கடற்கரையில் நர்மதை கலக்கும் பகுதியான புரோச் மாவட்டமாக இருக்கலாம் என்பது தெரிகிறது.

இவர்கள் பஞ்சம் பிழைக்க வரவில்லை. அப்படி இருப்பின் அந்தணர் அல்லாத பிறரும் வந்திருக்க வேண்டும். எனவே இவர்கள் அரச அழைப்பின் பேரில் தான் வந்திருக்க வேண்டும். சோழ நாட்டில் இவர்களுக்கென இறையிலி நிலங்கள் பெருமளவில் வழங்கப்பட்டிருப்பதை நோக்கும் போது, களப்பிரர் காலத்தில் சீரழியும் நிலையில் இருந்த சைவ சமயத்திற்குப் புத்துயிர் கொடுக்கவென, வலிமை குன்றிய நிலையில் இருந்தபோதும் சோழ அரசர்கள் இவர்களைப் பெருமளவில் குடியேற ஊக்குவித்திருக்கலாம் என்பது அறியப்படுகிறது.

சோழ அரசர்கள் ஏன் நர்மதை நதிக்கரை அந்தணர்களைக் குடியேற ஊக்குவித்தனர் ? பாசுபத சைவம் தோன்றிய இடமான கார்வான் என்ற காயாரோகணம் இதற்கு அருகில் தான் உள்ளது. இந்த அந்தணர்கள் பாசுபதச் சைவத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். சைவத்தை வளர்க்க விரும்பிய சோழர்கள் இந்தப் பாசுபதச் சைவர்களை விரும்பி இருக்க வேண்டும். சோழ நாட்டில் குடந்தை, நாகை ஆகிய இரு தலங்களும் வட தமிழ் நாட்டில் திருவொற்றியூரும் காயாரோகணத் தலங்களாகக் கூறப்படுவதிலிருந்து இவை இவர்கள் முதலில் குடியேறிய இடங்களாக இருக்க வேண்டும். இவற்றில் நாகையும் திருவொற்றியூரும் கடற்கரையில் உள்ளன. குடந்தையும் கடற்கரைக்கு அதிகத் தொலைவில் இல்லை. எனவே இவர்கள் கடல் மார்க்கமாக வந்திருக்கவும் வாய்ப்பு உண்டு.

வடகலை வைணவர்கள்

புதிதாகக் குடியேறிய எல்லோருமே சைவத்துக்கு ஆதரவு அளித்தார்கள் எனக் கூற முடியவில்லை. சிலர் வைணவத்தின் பக்கம் சார்ந்தனர். அவர்களே வடகலை வைணவர்கள் எனப் பெயர் பெற்றனர். இவர்கள் வைணவத்தைப் பின்பற்றிய போதிலும் தென்கலை வைணவர்களுடன் சமய நடைமுறைகளில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தனர். சமூக அளவிலும் அவர்கள் தென்கலையாருடன் உறவு கொள்வதைத் தவிர்த்தனர். வடகலை வைணவர்கள் இறந்தால் தீட்டுக் காக்கும் வழக்கம் சில வடமரிடையே இருந்ததாகக் கூறப்படுவதிலிருந்து [The people of India –Tamilnadu, vol.3 – Page 1407– Author V.S.Deep Kumar, Editor K.S.Singh.] இவர்கள் வடமர்களே என்பதும் சமய வேற்றுமை காரணமாகப் பிற்காலத்தில் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர் என்பதும் தெரிகிறது. [தென்கலை வைணவர்கள் தமிழுக்கும் கோவில் வழிபாட்டுக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். வடகலையார் வைதிகச் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இவற்றிலிருந்து வடமர்களில் வைணவத்தைத் தழுவியோரே வடகலை வைணவராயினர் என்பது தெரிகிறது]

குடியேறியவர்கள் சைவ மறுமலர்ச்சியில் பெரிதும் உதவி புரிந்தனர். ஆனால் அவர்கள் வேதம் ஓதிக் கொண்டும் வேள்விகள் செய்து கொண்டும் இருந்தார்களே அன்றிக் கோவில் பூசகர்கள் பணியில் ஒரு போதும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. கோவிலுடன் அவர்களது தொடர்பு அங்கு அத்தியயன பட்டர் பணி (மாலை வேளைகளில் வேத பாராயணம் செய்தல்) மட்டுமே.

3 புதிய அந்தணர்கள்

சோழர் காலத்தில் கோயில்களின் எண்ணிக்கை பெருகியது. எனவே கோயிலில் பணி புரிவதற்குரிய பூசகர்களின் தேவையும் மிகுந்தது. எனவே பிற சாதியினர் அந்தணராக்கப்பட்டிருப்பர் என்று நினைக்க இடமுண்டு. சிவன் கோவில் பரிசாரகர் பிராமணப் பிள்ளை எனச் சோழநாட்டில் அழைக்கப்படுகின்றனர். இதிலிருந்து சிவாசாரியர்கள் பிராமணர் அல்லர் என்பது பெறப்படுகிறது.

சோழர் காலக் கல்வெட்டுகளில் பூசகர்கள் சிவப் பிராமணர்கள் எனக் குறிக்கப் பெற்றுள்ளனர். அவர்கள் பெயர் பெரும்பாலும் நம்பி, பட்டர், பட்டஸ்ய என்னும் பின்னொட்டைக் கொண்டிருந்தது. இப்பெயரைக் குடியேறிய பிராமணர்கள் வைத்துக் கொள்வதில்லை. பட்டர், நம்பி என்பன பழமையான அந்தணரைக் குறிப்பன. பட்டஸ்ய என்பது பட்டருடைய என்று பொருள் தருவது. இது புதிதாக அந்தணராக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயராக இருக்கலாம்.

கடம்ப நாட்டில் மயூரசன்மன் என்னும் மன்னன் காலத்தில் சில ஆந்திர பிராமணர்கள், பிராமணர் அல்லாதார் சிலரைப் பூணூல் அணிவித்து அந்தணராக்கி அவர்களுக்குப் புதிய பின்னோட்டுப் பெயர் அளித்ததாகக் கூறப்படுகிறது. [The peoples of India Vol – I page 169] அது போலத் தமிழகத்திலும் செய்யப்பட்டிருக்கலாம்.

திருவலஞ்சுழிக் கல்வெட்டு ஒன்றில் ஒரு சிவாசாரியரின் பெயர் திருவெண்காடன் செட்டி பெரியான் என்று கூறப்படுவது இதை வலுப்படுத்துகிறது. மேலும், அந்தணக் குடும்ப உறுப்பினர்கள் தங்களைக் குறிக்கும்போது சூத்திரம், கோத்திரம் சுட்டுவது இயல்பாகும். ஆனால் வலஞ்சுழியில் காணப்படும் கல்வெட்டுகள் சிலவற்றில் இந்நிலை இல்லை. [வலஞ்சுழிவாணர் – மு.நளினி, இரா.கலைக்கோவன்.]

பூர்விக இடத்தைப் பொறுத்து இன்றைய சிவாசாரியர்கள் திருவாலங்காடு, காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய மூன்று வகையினர். இந்த மூன்று இடங்களிலும் முதலாம் ராஜேந்திரன் காலத்தில் ஆந்திரத்திலிருந்து சிவாசாரியர்கள் வரவழைக்கப் பட்டுக் குடியமர்த்தப்பட்டனர் என்று சித்தாந்த சாராவளிக்கு உரை எழுதிய அனந்த சிவாசாரியர் கூறுகிறார். [புதுவை மண்ணில் ராசராசன் கண்ட கலைக்கோயில் – அரு. அப்பாசாமி பக்.147] தமிழ்நாட்டுச் சிவாசாரியர்கள் பண்பாட்டு வகையில் தமிழர்களாகவே இருப்பதால் அவர்கள் இந்த மூன்று இடங்களில் ஆந்திர ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்ட பிற சாதித் தமிழர்களாக இருக்கக் கூடும் என்று தெரிகிறது. புதிதாக அந்தணராக்கப்பட்டவர்கள் பழைய பட்டர்களுடன் திருமண உறவு கொண்டிருக்கலாம். அதனால் பட்டஸ்ய எனப் பெயர் பெற்றிருக்கலாம். பிராமணரின் பல வழக்கங்களைக் கடைப்பிடித்த போதிலும் இன்றும் சிவாசாரியர்கள் தங்களைப் பிராமணரிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவே விரும்புகின்றனர்.
************************************* ****************************************************

Wednesday, April 20, 2011

ஓம்

இந்து மதத்தில் ஓங்காரத்துக்கு ஒரு விசேடமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. வேதம் ஓதத் தொடங்கும் போதும் ஓதி முடித்த பின்னும் ஓம் என்பது உச்சரிக்கப்படுகிறது. ஐந்தெழுத்து உள்ளிட்ட எல்லா மந்திரங்களும் ஓங்காரத்துடன் தான் ஜபிக்கப் படுகின்றன. தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்யும் போது ஒவ்வொரு பெயருக்கு முன்னும் ஓங்காரம் சேர்க்கப் படுகிறது. இது எல்லா வேதங்களின் சாரம் என்று சாந்தோக்கிய உபநிஷத்தும், ஓங்காரமே பிரும்மம் (பரம் பொருள்) என்று தைத்திரீய, பிரச்ன உபநிடதங்களும் கூறுகின்றன.

பிரணவத்தின் பொருள் தெரியாத பிரமனைக் குட்டிச் சிறையில் அடைத்து சிவனார் மனம் குளிர அவர் செவியில் முருகன் ஓதினார் என்று புராணம் கூறுகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் ஓங்காரத்தின் பொருள் என்ன?

ஓங்காரத்துக்குப் பொருளே சொல்ல முடியாது என்று சிலரும், இறைவன் தான் ஓங்காரத்தின் உட்பொருள் என்று சிலரும் கூறுவர். இன்னும் சிலர், உலகிலுள்ள அனைத்து ஒலிகளின் சங்கமமே ஓங்காரம் என்பர்.

ஓங்காரத்துக்கு இன்னொரு பெயர் பிரணவம் என்பது. ப்ரணவ என்ற வட சொல் ப்ர + நவ என்ற இரு சொற்களின் கூட்டு. ப்ர என்ற முன்னொட்டு முதன்மை அல்லது சிறப்பைக் குறிக்கும். நவ என்பதற்குப் புதுமை என்பது பொருள். எனவே ப்ரணவம் என்பது புதுமைக்குச் சிறப்பு என்று பொருள் தருகிறது.

புதுமை என்பது, அடிப்படையை மாற்றாமல் பிற விஷயங்களில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகும். அடிப்படை ருதம். அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் சத்யம்.

பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் கணம் தோறும் மாறிக் கொண்டே, புதுமை அடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு பிரபஞ்சமே ஓங்கார ஸ்வரூபமாக உள்ளது. இந்த இடைவிடாத மாற்றங்களின் அடிப்படையான இறைவனும் ஓங்கார ஸ்வரூபனாகக் கருதப்படுகிறான். இறைவனை முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே என்று போற்றிய மாணிக்க வாசகர் அடுத்த அடியில் பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே என்று கூறுவதை நோக்குக.

நம் வாழ்வில் புதுமை முதன்மை பெறுவது எப்படி? புத்தாடை, புதிதாகப் பிறந்த குழந்தை, அது நாள் தோறும் செய்யும் புதிய குறும்புகள், புத்தாண்டு எல்லாமே மகிழ்ச்சி தருவது அல்லவா? என்றும் புதுமையை நாடுவோர் என்றும் மகிழ்ச்சியாக இருப்பர்.

கம்பருக்கும் சேக்கிழாருக்கும் ஒவ்வொரு ஆண்டும் விழா எடுக்கிறோம். புதிய புதிய கருத்துகள் வெளிவந்தால் நாம் ரசித்து மகிழ்கிறோம். சென்ற ஆண்டு சொன்னதையே மீண்டும் சொன்னால் அரங்கம் காலியாகி விடும். பழைய கருத்தையே புதிய வகையில் சொன்னால் அதற்கு கவர்ச்சி, மதிப்பு, பயன் அதிகம்.

கலைத் துறையிலும் புதியன புகுத்துவோர் தான் வரவேற்கப் படுகின்றனர். சம்பிரதாயம் என்ற பெயரில், புதுமையை எதிர்ப்பவர்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவர்.

எல்லாத் துறைகளிலும் புதுமையைப் படைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு சமூகத்தினர் ஒரு கால கட்டத்தில் இனி புதிதாக உருவாக்க ஒன்றும் இல்லை என்று நினைத்து விட்டால் அப்பொழுதிலிருந்து அவர்களுக்கு வீழ்ச்சி தான்.

இடைக்கால இந்தியாவுக்கு ஏற்பட்டது இக்கதி தான். கலை, இலக்கியம், அரசியல், நாகரீகம் இவற்றில் மிக உயர்ந்த நிலை அடைந்த நம் முன்னோர் இனி உயர்வதற்கு இடமில்லை, இதைத் தொடர்ந்து காப்பாற்றினால் போதும் என்ற மன நிலை அடைந்து விட்டனர்.

புதியன முயன்று அடிபடுவதை விட முன்னோர் சென்ற பழைய வழியே பாதுகாப்பானது என்று மக்கள் நினைக்கத் தொடங்கிய அப் பொழுதிலிருந்து அன்னியர் படையெடுப்பு தொடங்கியது. துலுகமா என்ற புதிய போர் முறையைக் கொண்டு வந்த பாபர் வெற்றி பெற்றார். புதிய கடல் வழி கண்டு, வாணிகம் மூலம் மக்களை வசப்படுத்தும் புதிய தந்திரம் பயின்ற ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். பழைய பாதுகாப்பு முறைகளான கோட்டை, வாள், வில் அம்புகளையும் வெற்றி வேல், வீர வேல் போன்ற பழைய கோஷங்களையும் நம்பினோர் அடிமை ஆயினர்.
இது தான் வரலாறு கற்றுத் தரும் பாடம்.

சாதாரணமாகக் குழந்தைகள் தாம் புதுமையில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். புதிய கற்பனைகள், புதிய சிந்தனைகள், புதிய விளையாட்டுகள், புதிய நண்பர்கள் என்று நாள் தோறும் புதுமையை வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைப் பருவம் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் இது தான். குழந்தைகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.
நாற்பது வயதானால் நமக்கு நாய்க் குணம் வந்து விடுகிறது. நாய்க் குணம் என்பது புதுமையை வெறுக்கும் தன்மை தான்.

புதுமையைப் போற்று என்று குழந்தைகள் சொல்கின்றனர். மரத்துப் போன மூளை, மரத்துப் போன இதயம் கொண்ட முதியவர்களே, குழந்தைகளிடம் இதைக் கற்றுக் கொள்ளுங்கள். அர்த்தம் புரியாமல் நிமிடத்துக்கு நூறு முறை பிரணவத்தை உச்சரித்துக் கொண்டிராமல் அதை நடைமுறைப் படுத்துங்கள் என்பது தான் முருகனின் உபதேசம்.

பதஞ்ஜலி யோக சூத்ர உரையில் பாரதி கூறுவதைக் கேட்போம். “ஓம் என்பது பிரணவ மந்திரம். இந்த மந்திரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள் சொல்கின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமையானது என்ற பொருள் தருவது. மஹா கணபதியே இந்த மந்திரத்தின் அதிஷ்டான தேவதை, சிருஷ்டி அடையாளம். எல்லையற்ற அறிவுக் கடலென்ற பொருளை தியானம் செய்யவேண்டும். அதுவே ஜபம். பொருளை பாவனை செய்யாமல் வெறுமே சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல் அதிகப் பயன் தர மாட்டாது என்பது பதஞ்சலி மஹரிஷியின் வாதம்.”

வேத அடிப்படையிலிருந்து விலகாமல், காலத்திற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வந்ததால் தான் இந்து சமயம் எத்தனையோ சோதனைகள் வந்தும், அவற்றைக் கடந்து வந்து இன்று உலகளாவப் பரவத் தொடங்கியுள்ளது. இக்கருத்தைச் சுருக்கமாகச் சொல்வது தான் ஓம் எனும் மந்திரம்.

Wednesday, March 2, 2011

निशि दिन बरसत नयन हमारे

நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை பிறங்கிற்று உலகு.

வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் பிறர்க்கு இடமேது.

இவ்வுலகிற்கு வந்த வரிசைப்படியே எவரும் திரும்புவதில்லை.

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் சாவு செய்தித் தாள்களில் இடம் பெறுகிறது. அத்தகைய இளைஞர்களின் பெற்றோர்களில் ஒருவனாக இருக்க மாட்டேன் என்று கோருவதற்கு நான் என்ன கடவுளுக்குச் செல்லப் பிள்ளையா?

தவிர்க்க முடியாத சாவைப் பற்றி வருந்துவதால் பயன் என்ன.?

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் மீண்டு வாரார்.

சென்ற பிறவியில் நீ யாரோ, அவன் யாரோ, அடுத்த பிறவியில் நீ யாரோ, அவன் யாரோ?

அவன் திரும்பி வாரான் என்ற உண்மையை நேருக்கு நேராகச் சந்தித்து விடு. ஏற்றுக் கொள்ள மறுப்பதால் தான் துயரம்.

மேலே கண்ட உண்மைகளை எல்லாம் நான் புரிந்து கொண்டுவிட்டேன்.

ஆனால் இவற்றை எனக்குப் படித்துச் சொன்ன கண்கள் புரிந்து கொள்ள மறுக்கி்ன்றனவே!

இரவும் பகலும் பொழியுதே, எமது கண்கள், என் செய்ய?

Saturday, February 19, 2011

சாதிகள் இல்லையடி பாப்பா

இந்து சமயத்தைச் சாடுவோர் வேதத்தின் வர்ணாசிரம நெறி தான் சாதிப் பிரிவுகளை உண்டாக்கியது என்று கூறுவர். உண்மை அதுவல்ல. வேதம் சாதி பற்றி எதுவும் கூறவில்லை. வேத காலத்தில் சாதி இல்லை. வர்ணாசிரம முறை இருந்தது.

வர்ணாசிரமம் என்பதில் வர்ணம் ஆசிரமம் என்ற இரு சொற்கள் அடங்கியுள்ளன. இதில் ஆசிரமம் என்பது ஒரு தனி மனித வாழ்வின் வெவ்வேறு கால கட்டங்கைளக் குறிக்கும் – மாணவப் பருவம், இல்லறப் பருவம், காடு வாழ் பருவம், துறவுப் பருவம். இந்த ஆசிரம முறை பற்றிப் பாரதி எதுவும் கூறவில்லை. இளம் பருவத்தில் துறவு பூணும் முறை புத்த மதத்திலிருந்து இந்து மதத்திற்கு வந்து சேர்ந்த ஒரு கேடு என்று மட்டும் கூறுகிறார்.

ஆனால் வர்ண முறையைப் பாரதி பெரிதும் போற்றினார். வர்ணம் என்ற சொல் நிறம் என்ற பொருளுடையது. இது தொழில் அடிப்படையில் மனித சமூகத்தில் காணப்படும் பிரிவைக் காட்டுவது. ஒவ்வொரு சமூகத்திலும் நடைபெறும் தொழில்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். சிலர் அறிவுத் துறையில் (ஆசிரியர், ஆராய்ச்சியாளர்) ஈடுபடுகின்றனர். சிலர் நாட்டு மக்களைக் காக்கும் பணியிலும் (அரசு அதிகாரிகள், ராணுவத்தினர்), சிலர் வாணிபத்திலும், மற்றையோர் உற்பத்தித் தொழிலிலும் உள்ளனர். ஒரு சமூகம் சீராக இயங்க இந்த நான்கு குழுக்களும் தேவை. இவற்றில் எந்த ஒன்றும் உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ சொல்ல முடியாது. ஒரு யந்திரத்தின் நான்கு பாகங்கள் போல, இவை நன்கு பொருந்தி சீராக அமைந்தால் தான் சமூக யந்திரம் சிக்கலின்றி இயங்கும். இதைத் தான் பாரதி குறிப்பிடுகிறார்.

வேதமறிந்தவன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டர் என்றோர் வகுப்பில்லை தொழில்
சோம்பலைப் போல் இழிவில்லை

நாலு வகுப்பும் இங்கொன்றே இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.

பகவத்கீதையில் நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன என்று கண்ணன் கூறுவதைப் பாரதி குறிப்பிடுகிறார்.

நாலு குலங்கள் அமைத்தான் அதை
நாசமுறப் புரிந்தனர் மூடர்

பாரதியாரின் ஞானரதம் அவரது கருத்தை மேலும் தெளிவுபடுத்துகிறது.

“பிறக்கும் போது மனிதர்கள் எல்லாம் மிருகங்களாகப் பிறக்கிறார்கள். பயிற்சியினாலும் குண கர்மங்களினாலும் வெவ்வேறு வர்ணத்தினராகிறார்கள். சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச: (நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன) எனப் பகவான் சொல்லியிருக்கிறார்.

“பாரத தேசத்தில் தான் வர்ணாசிரம பேதங்கள் இருப்பதாகச் சொல்வது பிழை. ஸகல தேசங்களிலும் உண்டு. ஆனால் பாரத தேசத்தில் தான் வர்ணாசிரம நெறி சீர் கெட்டுப் போயிருக்கிறது. பூர்வத்தில் பாரத தேசத்தில் வர்ணாசிரம நெறி நான் சொல்வது போலத் தான் இருந்தது. அதற்கு அந்நாட்டிலுள்ள வேதங்கள், உபநிஷத்துகள், புராணங்கள், இதிஹாஸங்கள் முதலிய ஸகல நூல்களும் ஸாக்ஷி. இப்பொழுது பாரதநாட்டைத் தவிர மற்றெல்லா நாடுகளிலும் பகவான் சொல்லிய முறை தான் நடைபெற்று வருகிறது. பாரத நாட்டில் அம்முறை தவறிவிட்டது. அது பற்றியே அந்நாட்டினர் வறுமை, நோய், அடிமைத் தனம் என்ற இழிவுகளிலே வீழ்ந்திருக்கிறார்கள்.”

இப்படி, விரிவாக வர்ண முறையை ஆதரித்த பாரதி, வர்ணங்களுக்குள்ளே உயர்வு தாழ்வில்லை, எத்தொழில் செய்தாலும் அனைவரும் சமம் என்பதைப் பல இடங்களிலும் வலியுறுத்துகிறார்.

சீலம் அறிவு தருமம் இவை
சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்

‘ஒற்றைக் குடும்பம் தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை, மற்றைக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை, ஏவல்கள் செய்பவர் மக்கள்’ என்றிருப்பது போல, சமூகத்திலும் வெவ்வேறு தொழில் செய்வோர் ஒற்றுமையாக ஒரு குடும்பம் போல வாழ வேண்டும் என்பது அவர் கருத்து.

பாரதியின் பூனைக் குட்டிகள் பாட்டு அனைவரும் அறிந்தது.

வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை
பேருக்கொரு நிறமாகும்

சாம்பல் நிறமொரு குட்டி கருஞ்
சாந்தின் நிறமொரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் அவை
யாவும் ஒரே தரமன்றோ
இந்த நிறம் சிறிதென்றும் இஃது
ஏற்றமென்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில்
மானிடர் வேற்றுமை இல்லை

சாதி போல் அல்லாமல் வர்ணம் மாற்றிக் கொள்ளக் கூடியது என்பதை அவர் வலியுறுத்துகிறார். அவரது ஞானரதத்தில் தர்ம லோகம் என்ற பகுதியில் கதாநாயகன் கூறுகிறான்:–

“எனது பிதா க்ஷத்திரியர். நான் பிராமணன். என் மக்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவனை மட்டுமே பிராமண காரியங்களுக்குத் தெரிந்தெடுத்திருக்கிறேன். மற்றவர்களை யெல்லாம் மற்ற மூன்று வர்ணங்களின் காரியங்களுக்கு அவரவர்களின் தகுதி, ஸ்வபாவம் முதலியவற்றைக் கருதி உரியவாறு பயிலுமாறு செய்திருக்கிறேன்.”

வர்ண முறையைப் போற்றிய பாரதி சாதி முறையைத் தீவிரமாக எதிர்த்தார். வர்ணம் என்பதும் சாதி என்பதும் ஒன்றல்ல என்ற உண்மையைப் பலர் அறிவதில்லை.

வர்ணம் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல. ஆனால் ஜாதி என்பது பிறப்பால் வருவது. பிறப்பின் காரணமாக ஏற்படும் பிரிவுகளைப் பாரதி அடியோடு வெறுத்தார்.

சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

மேலவர் கீழவரென்றே வெறும்
வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியை எல்லாம் இன்று
பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்

சாதிப் பிரிவுகள் சொல்லி அதில்
தாழ்வென்றும் மேலென்றும் சொல்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்

சாதிக் கொடுமைகள் வேண்டா அன்பு
தன்னில் செழித்திடும் வையம்.

மானிடச் சாதி என்ற ஒன்றைத் தான் அவர் ஒப்புக் கொள்கிறார்.

கூட்டி மானிடச் சாதியை ஒன்றெனக்
கொண்டு வைய முழுதும் பயனுறப்
பாட்டிலே அறம் காட்டு என்னும் ஓர் தெய்வம்.

..............................................ஆயிரம் சாதி
வகுப்பவர் வகுத்து மாய்க. நீரனைவரும்
தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம்
என்பவை போற்ற எழுந்திடும் வீரச்
சாதி ஒன்றையே சார்ந்தவராவீர்.

மானிடர் அனைவரும் ஒரே சாதி என்ற நிலையிலிருந்து இன்னும் ஒரு படி மேலே போய்ப் பிற உயிரினங்களையும் உயிரற்றவைகளையும் கூட ஒரே சாதிக்குள் அடக்குகிறார்.

“காக்கை குருவி எங்கள் சாதி
காடும் மலையும் எங்கள் கூட்டம்”
என்று அவர் பாடும்போது அத்வைத மாமேருவின் உச்சிக்கே போய் விடுகிறார்.

கீதை முன்னுரையில் அவர், “கண்ணபிரான் ஜாதி வேற்றுமையும் அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாது என்பது மட்டுமே அன்றி எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாராது இருத்தலே ஞானிகளுக்கு லட்சணம்” என்கிறார்.

“பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன், பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம். இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லட்சணம். எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம்.”

இவ்வாறு அவரது சமூகச் சமத்துவக் கொள்கையும் வேத அடிப்படையைக் கொண்டது என்பது தெரிகிறது.

Wednesday, February 16, 2011

சூழ்ந்ததெல்லாம் கடவுள்

கடவுள் எங்கே இருக்கிறார்? தூணிலும் உள்ளார், துரும்பிலும் உள்ளார் என்று சொல்கிறோம். அதற்குச் சான்றாகப் பிரகலாதன் கதையைக் கூறுகிறோம். இதை இக்கால இரணியர்கள் ஏற்றுக் கொள்வார்களா? புராணங்களைப் புளுகு என்று தள்ளும் காலம் இது. “தமிழா, தெய்வத்தை நம்பு. பயப்படாதே, உனக்கு நல்ல காலம் வருகின்றது..... வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே” என்று அறிவுறுத்திய பாரதி பிரகலாதன் கதைக்குப் புதிய பொருள் தருகிறார்.

ஈசாவாஸ்ய உபநிடதம் கூறும் ‘இந்த எல்லாமே இறைவன் தான்’ என்ற கருத்தை அதில் காண்கிறார்.

சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே
சொல்லென்று இரணியனும் உறுமிக் கேட்க
நல்லதொரு மகன் சொல்வான் தூணிலுள்ளான்
நாராயணன் துரும்பிலுள்ளான் என்றான்
வல்லமைசேர் கடவுளில்லாப் பொருளொன்றில்லை
மகாசக்தி இல்லாத வஸ்து இல்லை
அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ

கேளப்பா சீடனே கழுதை ஒன்றை
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப் பார்த்திருகரமும் சிரமேற் கூப்பி
சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும்
கூளத்தினை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடி நின்ற பொருனனைத்தின் கூட்டம் தெய்வம்
மீளத்தான் இதை மட்டும் விரித்துச் சொல்வேன்
விண் மட்டும் தெய்வமன்று மண்ணுமஃதே

யஜுர் வேதத்தின் ருத்ரம் என்னும் பகுதி உபநிடத மகா வாக்கியங்களின் விளக்கமாக உள்ளது. இது உலகம் முழுமையையும் ருத்திர வடிவமாக வணங்குகிறது.

மந்திரி, வணிகர், தேரோட்டி, வேடர், கள்வர், விராதன், [ஒழுக்கக் கேட்டால் புறம் தள்ளப்பட்டவர்], தச்சர், குயவர், செம்படவர் என்று பல வடிவங்களில் விளங்கும் ருத்திரருக்கு வணக்கம் தெரிவிக்கும் அது, சடைமுடியர், மொட்டைத் தலையர், நிற்பவர், நடப்பவர், தூங்குபவர், அருகில் இருப்பவர், தொலைவில் இருப்பவர் என்று எவரையும் மிச்சம் வைக்காமல் இறைவனாகக் கருதி வணங்குகிறது. மனிதர் மட்டுமல்ல, நாய், குதிரை ஆகிய விலங்குகள் வடிவத்திலும் ருத்திரன் விளங்குவதாகக் கூறப்படுகிறார். தேர், ஆற்று நீர், மரங்கள் போன்ற உயிரற்ற பொருள்களாகவும் அவர் இருக்கிறார். இந்த மனிதருக்குள்ளும், பிராணிகளிடத்திலும், பொருட்களுக்குள்ளும் ருத்திரன் வசிப்பதாகக் கூறாமல் அவர்களே, அவையே ருத்திரன் என்று கூறுவது கவனிக்கத்தக்கது.

“நீயே கார்த்திகை நட்சத்திரமாகவும் அக்னியாகவும் உள்ளாய். நீயே அக்னியின் சுவாலை, பிரஜாபதியின் ஒளி, சோமரசத்தின் பிரகாசம். நீயே ரோகிணி நட்சத்திரமாகவும் பிரஜாபதியாகவும் உள்ளாய். நீயே ஆதிரை, நீயே ருத்திரன், நீயே புனர்வஸு, நீயே அதிதி, நீயே பூசம், நீயே பிரகஸ்பதி, நீயே ஆயில்யம், நீயே பாம்புகள், நீயே மகம், நீயே பித்ருக்கள்...” என்று நீளும் மற்றொரு யஜுர் வேதப் பகுதி [யஜுர் 4.4.10] விண்ணிலுள்ள நட்சத்திரங்கள், தேவர்கள் எல்லாவற்றையும் ஒரு பரம்பொருளின் பல தோற்றங்களாகக் காண்கிறது.

இந்தக் கருத்தைப் பாரதி பின்வருமாறு பாடினார்.

சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்;
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,
வித்தையிலாப் புலையனுமஃதென்னும் வேதம்;

பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
நித்த நுமதருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்துவீரே?

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டுமன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;

வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்
[பாரதி அறுபத்தாறு 15, 17, 18]

மனிதர்க்குக் கோபம் வருவதற்கான காரணத்தை ஆராய்கிறார் பாரதி. நம்மைச் சூழ்ந்தது எல்லாம் கடவுள், நாமும் கடவுள் என்ற எண்ணம் எப்பொழுதும் நமக்கு இருக்குமானால் நமக்குக் கோபம் வராது அல்லவா? நம்மிலும் வேறான ஒரு பொருளிடம் தானே நாம் கோபித்துக் கொள்ள முடியும். அப்படி ஒரு பொருள் எதுவும் இல்லை என்ற வேதக் கருத்தைச் சுருக்கமாக, மூன்று வார்த்தைகளில் தருகிறார். சூழ்ந்தது எல்லாம் கடவுள்.

சூழ்ந்ததெலாம் கடவுள் எனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்தலாலே
சேருவதே மானிடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.

தன் வசன கவிதையில் பாரதி இக் கருத்தை மேலும் விளக்குகிறார்.
இவ்வுலகம் ஒன்று
ஆண், பெண், மனிதர், தேவர்,
பாம்பு, பறவை, காற்று, கடல்,
உயிர், இறப்பு இவை அனைத்தும் ஒன்றே
ஞாயிறு, வீட்டுச் சுவர், ஈ, மலை, அருவி,
குழல், கோமேதகம் இவ்வனைத்தும் ஒன்றே
இன்பம், துன்பம், பாட்டு,
வண்ணான், குருவி, மின்னல், பருத்தி
இஃதெல்லாம் ஒன்று
மூடன், புலவன்,
இரும்பு, வெட்டுக்கிளி
இவை ஒரு பொருள்
வேதம், கடல்மீன், புயற் காற்று, மல்லிகை மலர்
இவை ஒரு பொருளின் பல தோற்றம்
உள்ளதெல்லாம் ஒரே பொருள் ஒன்று
இந்த ஒன்றின் பெயர் - தான்
தானே தெய்வம்
தான் அமுதம் இறவாதது

பாரதி இக்கொள்கையைப் பின்பற்றினார். அத்வைத நிலையின் உச்ச கட்டத்தில் நின்று அவர் பாடுகிறார்.

காக்கைச் சிறகினிலே நந்தாலா -நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா- நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா- நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத்
தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா

உலகனைத்துமாக வியாபித்து நிற்கும் பிரமம் நானே என்ற உபநிடதக் கருத்து எவ்வளவு எளிய சொற்களில் வெளிப்படுகிறது பாருங்கள்.

வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
மண்ணில் திரியும் மரமெல்லாம் நான்
கானிழல் வளரும் மரமெலாம் நான்.
காற்றும் புனலும் கடலுமே நான்,

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில் கிடக்கும் புழுவெல்லாம் நான்
வாரியிலுள்ள உயிரெலாம் நான்.

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உருவெலாம் நான்,
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில் நகர் கோபுரம் யாவுமே நான்

இன்னிசை மாதரிசையுளேன் நான்
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்,
புன்னிசை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

மந்திரங் கோடி இயக்குவோன் நான்
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங் கோடி சமைத்துளேன் நான்,
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்ட பல சக்திக் கணமெலாம்நான்,
காரணமாகிக் கதித்துளோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர் வானில் செல்லுவோன் நான்,
ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்கு முதற் சோதி நான்.

Saturday, February 12, 2011

வாயுதேவன் புலம்பல்

வெப்பம் மிகுந்த இடம் நோக்கி
விரைந்து செல்லும் இயல்புடனும்
சூடு என் மேல் பட்டவுடன்
சுர்ரென மேலெழும் இயல்புடனும்
இறைவா என்னைப் படைத்துவிட்டாய்
இவ்விதி மாற்றல் எளிதாமோ

வீடுகள் தோறும் கூரையினில்
விதவிதப் பெயருடன் தொங்கிடுவார்
முக்கரம் விரத்துச் சுழன்றிடும் இச்
சக்கரத்தாழ்வார் செயல் காணீர்

தலைவா உன்னை மறந்துவிட்டு
தானே விதியெனத் தருக்குகிறார்
மக்கள் உடலைக் குளிர்வித்து
மற்றவர் வெப்பம் நான் பெற்று
மேலே செல்ல முயலுகையில்
மிகுந்த எதிர்ப்புக் காட்டுகிறார்
கழுத்தைப் பற்றித் திருகுகிறார்
தரையில் தள்ளி மோதுகிறார்
குனிய வைத்துக் குட்டுகிறார்
கொடுமை அந்தோ நான் சகியேன்
இறைவா உன்னை வேண்டுகிறேன்
இனிப் படமுடியாது இத்துயரம்
சக்கரத்தாழ்வார் செயும் கொடுமை
சற்றே மாற்ற மாட்டீரோ

அன்ன தாதா ஸுகீ பவ

வயிறு முட்டப் பாலை அருந்தி
வாயை விலக்கித் தாய்முகம் பார்த்து
இனிய வாயை இதமாய்த் திறந்து
கனிவும் மகிழ்வும் கண்களில் காட்டி
சின்னக் குழந்தை சிரிப்பதன் பொருள் என்?
அன்னம் இட்டவர் நலமுடன் வாழ்க

ஏதும் இல்லா ஏழை மெலிந்து
காதம் நடந்து வேற்றூர் ந்ண்ணி
வருத்தும் பசியினால் வயிறு சுருங்கி
அறத்திடு பிச்சை இரந்து பெற்றது
உப்பும் நீரில் ஊறிய சோறும்
தொப்பை குளிரத் தொலைந்தது துன்பம்.
உண்டபின் ஈந்தவன் முகத்தினை நோக்கி
கண்களில் நன்றிக் கண்ணீர் துளிர்க்க
சொன்ன செய்தி எதுவெனக் கேளீர் !
அன்னம் இட்டவர் நலமுடன் வாழ்க.

வேதனைக்கு நன்றி

செலுத்துகிறேன் நன்றி சேர்ந்திட்ட வேதனைக்கு
இதயத்தைக் கனமாக்கி எனைக் கவிஞன் ஆக்கியதால்.
உலகெல்லாம் பெருவெள்ளம், ஊரெங்கும் பால் வெள்ளம்
எந்தன் குடிசையிலே இருப்பதுவோ சிறு கலயம்
அதனில் இருப்பதுவோ அழுக்கடைந்த நீராகும்
தாகமும் தீர்ப்பதில்லை, தாபமும் தணிப்பதில்லை.
பொங்கு வரும் பாலாற்றில் மொண்டுவந்து ஒருகுவளை
விடாய் தீர்த்துக் கொள்ள விதி எனக்குப் பணிக்கவில்லை
அடுத்தவரைப் பார்த்து அழுக்காறு கொள்கின்றேன்
அவலாசைப் படுகின்றேன், ஆற்றாமை உணர்கின்றேன்.
விதியென்னும் தத்துவத்தை மனிதர்க்குரைத்தவனை
வியந்து பாராட்டி விடுகின்றேன் பெருமூச்சை

நரகத்தைத் தேடி நான் எங்கும் செல்லவில்லை
எனைத் தேடி வந்தஃது இயற்றியது ஓர்அரங்கை.
அரங்கின் பொருள் யாவும் ஆக்கியவன் யானே
என் செயலின் விளைவான இழிவான நரகிற்கு
விதியையோ நோவேன், வீழ்ந்து விட்ட மதியையோ நோவேன்

ஊரெங்கும் கொண்டாட்டம் உல்லாசம் களியாட்டம்
ஆற்றிடை நந்தி போல் அசையாமல் நிற்கின்றேன்
தனைமறந்து எல்லோரும் தமருடனே களிக்கையிலே
எனை மறக்க இயலாமல் எனக்குள்ளே குமைகின்றேன்

யான் என்பவன் எனக்கோர் பெரும்புதிர்
தன்னைப் புரிந்து கொள்ளத் தான் அனுமதிப்பதில்லை.
ஊரோடும் உறவில்லை, உறவோடும் ஒட்டில்லை.
வேலையிலும் ஓய்வினிலும் விளையாட்டு வேளையிலும்
தன்னைப் பற்றியே தான் மூழ்கி இருத்தலால்.
காணும் பொருள் யாவும் காட்டுவது என் குறையை
இந்த முட்செடி என்னால் தோன்றியது
அந்தப் பெரும்பள்ளம் ஆக்கியவன் நானே
இறைந்திருக்கும கற்களெல்லாம் இறைத்ததும் யானே
என் வாழ்வு என் துன்பம் யான் அடையத் துணிந்தேன்
எனை நாடி வந்தோர்க்கும் ஏனளித்தேன் துயரம்
அன்பால் எனை அணைத்து ஆறுதலாய் ஒரு வார்த்தை
நீயுரைப்பாய் என்று நிலையாக உனை நம்பி
அடைக்கலம் புகுந்த எனை ஆதரிப்பாயே.
கருணைக் கடலன்றோ, கவினுறு மலையன்றோ
சொல்லாமற் சொலவல்ல சூக்குமப் பரம்பொருளே
கேட்காமற் கொடுக்கின்ற கேடிலா வள்ளல் நீ.
உன்னை அடைந்தோர்க்கு உண்டோ ஒரு துன்பம்.

நகர வருணனை – நாகை 1970

கனவு

பளபளத்த கருமையுடன் பரவி நிற்கும் தார் ரோடு
சளசளத்த மழையினிலும் சகதியிலாத் தன்மையது
குண்டு குழிகளின்றிக் குறைகள் ஏதுமின்றி
வண்டுறை குளத்தில் வாலன்னம் மிதத்தல் போல்
செல்லும் ஊர்திகளைச் சீராகத் தாங்குவது
கொல்லும் புழுதியிலை, குப்பையிலை, கூளமிலை
வீடு கழித்த குப்பையென விரல் நீளச் சிறுதுரும்பும்
போடுதற்குக் கூச்சம் தரும் புனிதம் நிரம்பியது
அகலத்திற் குறைவுமிலை, அதிலேயோர் நெளிசலிலை
பகலென்ன இரவாக்கும் பாங்கான ஒளிக்குழல்கள்.
உருண்டிடும் ஊர்திகளில் ஒன்றேனும் புகை கக்கா
மருண்டிடும் அளவுக்கு மாவிரைச்சல் போடாதாம்.
உண்டிங்கே நடைபாதை ஓரங்கள் இருபுறத்தும்
வண்டிகளின் தடையின்றி மக்கள் நடப்பதற்கே
மற்று அவரன்றி மாடு நாய் முதலான
சிற்றறிவுயிரினங்கள் சிலவேனும் காண்கிலேன்.

ஓரத்தே வீடுகள் உயரத்திற் பெரியனவாய்
சீரொத்த பான்மைையதாய் சிறப்புமிகு தூய்மையதாய்
இடமகன்ற மாளிகைகள் இவை ஒளியிற் குறைவில்லா
தடமகன்ற தன்மையினால் தங்காத வளியுடைய.
குடிமக்கள் என்பாரோ கோலமிகு வனப்புடையார்
மிடியில்லார் நோயில்லார் மிகவான பகையில்லார்
நகரெங்கும் சென்றேன் நானிதுவே கண்டேன்
அகமெங்கும் மகிழ்ச்சியால் ஆகா நான் நிரம்பிட்டேன்.

நனவு

தாங்கிடும் பெயரால் தாமரைக் குளமெனவே
ஓங்கரும் புகழ் படைத்த ஒரு நீர் நிலையுண்டு
பாசியும் வெறுக்கும் பாவத் தீர்த்தமிது
நாசிக்கும் விழிகளுக்கும் நரகமெனத் தோன்றுமால்.
தூம்பொன்று வடித்து நிற்கும் துர்நாற்றச் சாக்கடை நீர்
ஆம்பலுடன் தாமரையும் அல்லியும் இதில் வாழா.
பண்டுமுதல் இந்நீரால் பயன் பெறுவது கிருமிகளே.
உண்டிங்கே மீன்கள். ஓரத்தே இருந்து அவற்றைத்
தூண்டிலிட்டுத் தூக்கித் தொழில் செய்வோர் சிலராவர்.

குளத்தின் கரையெனிலோ கோடி தொழிற்கூடம்
பொறுக்கி வந்த சாணத்தைப் போராய்க் குவித்ததனை
வரட்டி தட்டி விற்கும் வனிதையரும் ஆங்குண்டு

குளத்தின் கரையோரம் குடிசைகள் பல உளவாம்
குடிசையிலே வாழ்கின்ற குழந்தையர்க்குக் கழிவிடமாய்
பன்றிகளும் நாய்களும் பக்கக் கண் காக்கைகளும்
இரை தேடிப் பெறுகின்ற இன்பக் களஞ்சியமாய்
குளிர் தாங்கா மூதாட்டி குளிர் காயும் நல்லிடமாய்
அழுக்கினையே அன்றி ஆடை பிற அணியாத
சிறுவர் விளையாடச் சீரான ஆட்டிடமாய்
குடிசைவாழ் மக்கள் தம் குப்பைகளின் நிலைக்களனாய்
அவ்விடத்தின் பயன் கூற ஆயிரம் நா வேண்டும்

தார் போட்ட ரோடுண்டு தாமரைக் குளக்கரையில்
தார் பிரிந்து விட்டதனால் தனிப் பிரிந்த கல்லுண்டு.
கோணலோ சொல்லப் போனால் கோடி கோடி ஆகிடாதோ
குழிகளில் விழுந்தேறிக் குலுங்கியே செலும் வண்டி

அச்சாலையை அடுத்து அமைந்ததோர் சிறு குப்பம்.
குப்பத்து மக்கள் தாம் குறைவில்லாச் சண்டையினர்
ஒரு வீட்டு வாசலிலே ஒடுங்கி நிற்கும் ஒரு சொறிநாய்
மறு வீட்டில் உயிருக்கு மன்றாடும் ஒரு கிழவன்
சூரியனும் சந்திரனும் சோவென்னும் பெருமழையும்
கூரையினைத் தாண்டிக் குடிசையினுள் செல்லும்.

Monday, February 7, 2011

கண்ணீர்

என்னருமைக் கண்ணீரே,
இன்னலிலே என் தோழா,
உன்னருமை நானறிவேன்
ஒன்றுரைப்பேன் கேளாய் நீ

நலிந்தார்க்கு நற்றோழா நானறிவேன் நின் திறமை
வலிமையுள்ள நின் முன்னே வாள் திறனும் சிறிதாகும்
ஞாலத்தின் முழுமையிலும் நீ தூண்டி நடத்திட்ட
கோலப் பெருஞ்செயல்கள் கோடி கோடி ஆகுமையே

வாயினால் வடித்திடவே வார்த்தையிலாச் செய்தியெலாம்
நீயாக உரைத்திடுவாய் நீள் விழியினில் நின்று.
பேசவொணாப் பெருஞ்செய்தி இதயத்தில் உளதெல்லாம்
நேசமுடை நெஞ்சத்தில் நீயே உரைத்திடுவாய்.

உள்ளத்துச் சோகத்தை உன்னி உன்னி நின்னை பெரு
வெள்ளம் போல் பெருக்கிவிட வேட்கை பிறக்குதையே.

ஆனால்

பத்துப் பேர் என்னைப் பார்த்து நிற்கும் போது
முத்துப் போல் நீ வந்து முகம் காட்டி நிற்கிறாய்
பிறரறியாது உன்னைப் பேணி மறைக்கிறேன்
ஊரறிய அழுவதிலே உண்டாமோ ஆறுதலும்

அருகில் யாருமே இல்லாத நேரம் நீ
பெருகி வரவேண்டுமெனப் பிடித்து வைக்கிறேன்.
தனிமையிலே நின்றுன்னை ஆறாய்ப் பெருக்குவதே
மனச்சுமை குறைத்திடும் மார்க்கம் ஆகுமே.

Sunday, February 6, 2011

அவன் வாழ்ந்தது கனவா, மாண்டது கனவா

இவர்கள் ஏன் அழுகின்றனர்?
நானும் தான் விம்முகிறேன்
எதற்காக?
என் மகன் இறந்துவிட்டானா
இல்லை, இருக்க முடியாது.
அவனுக்கென்ன நோயா, நொடியா?
கிழமா, கட்டையா?
இது யாரோ பரப்பிய பொய்.

அவனைப் பற்றிய செய்தி வந்ததும்
கனலிடை அவனுடல் மடுத்ததுவும்
கடலினில் அஸ்தி கரைத்ததுவும்
எல்லாமே கனவுத் தோற்றங்கள்.

அய்லநாடு சென்றுளான் என் மகன்
அடுத்த வாரம் வருவான்
அவனிடம் இக்கனவைச்சொல்வேன்
கைதட்டிச் சிரிப்பான்
கண்டு நான் மகிழ்வேன்

***************************

ஒரு சுகமான நீண்ட கனவு.
ஓடிய ஆண்டு முப்பத்தைந்து

முருகனே எனக்கு மகனாய்ப் பிறந்ததும்
குழந்தையாய் வளர்ந்து குதூகலம் தந்ததும்
தாய் தந்தையரைத் தாங்கிடும் விழுதாய்
பொங்கும் இளமையில் பூரித்து நின்றதும்
மெச்சியே அவனை ஊரார் புகழ்கையில்
மேனி சிலிர்த்து நாங்கள் நின்றதும்

எல்லாமே கனவுகள்,
இன்று முடிந்தன.

கனவு கலைந்ததற்காக
வருந்துவார் உண்டோ?
பின் ஏன் இவர்கள் அழுகின்றனர்,
நானும் தான் விம்முகிறேன்?

அவன் வாழ்ந்தது கனவா, இல்லை மாண்டது கனவா?









சுமை

தாய் உனைச் சுமந்தாள் வயிற்றில்
முன்னூறு நாளில்
அதற்கு ஒரு மகிழ்ச்சியான முடிவு.
நீ பிறந்தாய். 

நாங்கள் உனைத் தோளில் சுமந்தோம்
அதற்கு ஒரு மகிழ்ச்சியான முடிவு
நீ நடக்கத் தொடங்கினாய்.

இன்று
முன்னூறு நாளாக்
நான் உனை நெஞ்சில் சுமக்கிறேன்.
இதற்கு எது முடிவு?