Pages

Wednesday, August 29, 2012

சம்பந்தரும் சமணரும்



      வேதநெறி தழைக்க, சைவத்துறை விளங்க அவதரித்த திருஞானசம்பந்தர் தன் ஒவ்வொரு பதிகத்திலும் பத்தாவது பாடலில் வேதநெறிக்குப் புறம்பான சமண சாக்கியர்களைச் சாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பதிகத்தின் பதினோராவது பாடல் திருக்கடைக்காப்பு எனப்படுகிறது. அதில் தன் பெயரைப் பதிவு செய்வதோடு இப் பதிகத்தைப் பாடுவதால் என்ன பலன் கிடைக்கும் என்றும் கூறுகிறார். எனவே பத்தாவது பாடலே இறைவனைப் பற்றிய பாடல் தொகுதியின் நிறைவுப் பாடலாக அமைகிறது. இறைவியிடம் ஞானப்பால் உண்டவுடன் அவர் பாடிய தோடுடைய செவியன் என்ற முதல் பதிகத்தில் பத்தாவது பாடல் சமண சாக்கியர்களுக்கு எதிராக அமைந்தது திட்டமிடாதது அல்லது இறைவன் செயல் எனக் கூறலாம். ஆனால் மற்றப் பதிகங்களிலும் அதே பாணியைப் பின்பற்றியது இறைவன் வகுத்துக் கொடுத்த அமைப்பை ஒட்டிச் செல்லவேண்டும் என்று அவர் திட்டமிட்டே செய்ததாகத் தோன்றுகிறது.

      ஒன்பது பாடல்களில் இறைவனின் சிறப்புகளைப் பலபடப் புகழ்ந்துவிட்டுப் பத்தாவது பாடலில் புறச்சமயத்தாரைச் சாடி நிறைவு செய்திருப்பதைப் பார்க்கும்போது முழுப்பதிகத்தின் நோக்கமே புறச்சமயத்தின் ஆதிக்கத்தை வீழ்த்திவிட்டுச் சைவத்தை அரியணை ஏற்றுவது தான் என்பது புலப்படுகிறது. அத்தகைய சமண சாக்கிய எதிர்ப்புப் பாடல்களை மட்டும் இப்பொழுது ஆராய்வோம்.

      சம்பந்தர் பாடிய பதிகங்களின் எண்ணிக்கை (கல்வெட்டுகளின் மூலம் கிடைத்தவை உள்பட) 385. அவற்றில் பெரும்பாலானவை கடைக்காப்பு உள்பட 11 பாடல்களைக் கொண்டவை. சில பதிகங்களில் 12 பாடல்களும், ஒன்றில் மட்டும் 10 பாடல்களும் உள்ளன. இந்த 385 இல் 19 பதிகங்களில் புறச்சமய எதிர்ப்பு வெளிப்படையாகக் காட்டப் பெறவில்லை. 5 பதிகங்களில் 10வது பாடல் கிடைக்கவில்லை. இந்த 24 நீங்கலாக மீதி அனைத்திலும் சமண சாக்கியங்கள் இகழப்பட்டுள்ளன. பெரும்பாலான பதிகங்களில் பத்தாவதாகவும், ஐந்தில் ஒன்பதாவது பாடலாகவும், ஏழில் 11வது பாடலாகவும் இது அமைந்துள்ளது. 47 அடிகள் கொண்ட தொடர்நிலைச் செய்யுளான திருவெழுகூற்றிருக்கையில் 36, 37வது அடியாக இக்கருத்து அமைந்துள்ளது. மதுரையில் பாடிய பதிகங்களில் நான்கில் எல்லாப் பாடல்களிலுமே புறச்சமயத்தைத் தாக்குவது காணப்படுகிறது.
சமணம் சாக்கியம் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிக் கொள்கை உடையவை. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்ற கர்மாக் கொள்கை, மறுபிறவிக் கொள்கை, உண்மை, அகிம்சை, புலனடக்கம், புலால் மறுப்பு, இறை மறுப்பு இவை அவற்றின் பொதுக் கொள்கைகள். பௌத்தத்தை விடச் சமணம் இவற்றை அளவு கடந்து வலியுறுத்தியது என்பது தான் அவற்றிற்கு இடையேயுள்ள வேறுபாடு. எனவே தமிழகத்தைப் பொறுத்தவரை அவை இரண்டும் ஒன்றாகவே கூறப்படுகின்றன. சம்பந்தரும் தன் பாடல்களில் அவ்விரண்டையும் சேர்த்தே பேசுகிறார். ஆனாலும் சமண சாக்கியர்களின் தனிப்பட்ட பழக்க வழக்கங்களைத் தனித்தனியாகவே குறிப்பிடுகிறார்.

மிகுதேரர் எனக் குறிப்பிடப்படுவதால் பௌத்தர்கள் எண்ணிக்கையில் மிகுந்தவர் எனத் தெரிகிறது. ஆனால் சாக்கியத்தை விடச் சமணமே அன்றைய தமிழ்நாட்டில் சைவத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது என்பது சம்பந்தர் அதிகமாகச் சமணத்தைப் பற்றிக் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம். சாக்கியரைப் பற்றிக் குறிப்பிடாத பதிகங்கள் உண்டு. ஆனால் சமணரைப் பற்றிக் குறிப்பிடாதவை இல்லை.

இனி, அக்காலச் சமண சாக்கியப் பழக்க வழக்கங்களைச் சம்பந்தர் கூறும் வகையில் காண்போம்.

உணவு
சமண சாக்கியத் துறவிகள் மனைதோறும் பிச்சை எடுத்து வாழ்ந்தனர். சமணர் கையில் உணவை வாங்கி நின்றுகொண்டே உண்ண, சாக்கியர்களோ மண்டை எனப்படும் பாத்திரத்தில் உணவைப் பெற்று அமர்ந்து உண்டனர். இரு வகையினரும் குண்டிகை எனப்படும் சுரைக் குடுக்கையில் அருந்துவதற்கு நீர் வைத்திருந்தனர். அதை உறிகட்டித் தூக்கிச் சென்றனர். சமணர்கள் காலையில் தூங்கி விழித்தவுடன் கண் கழுவுமுன்னே உணவு உண்டதாகச் சம்பந்தர் குறிப்பிடுகிறார். சாக்கியர்கள் அந்த அளவுக்கு உணவுக்குப் பறக்கவில்லை என்பது தெரிகிறது. அவர்கள் காலையில் உணவு உண்டாலும் அது போதுமான அளவில் கிடைக்கவில்லை என்பது, யானைத் தீ எனப்படும் கொடும்பசி வரும் அளவும் உண்ணாமல் உச்சி வேளையில் மிகுதியாக உண்டனர் என்று சொல்லப்படுவதால் தெரிகிறது. இருவகையினரும் ஒரு நாளில் இருமுறை, காலையிலும் பகலிலும் மட்டும், உணவு கொண்டனர். இரு வகையினரும் நீர்நிலைகளிலுள்ள மீன்களைக் கவர்ந்து உண்டதாகக் குறிப்பிடுகிறார் காழியார்.
     
      பௌத்தம் என்றாலே அகிம்சை என்றும் புலால் இல்லாத உணவு என்றும் கேட்டுப் பழகி வந்த நமக்கு அவர்கள் மீன் உண்டார்கள் என்ற செய்தி வியப்பை அளிக்கிறது. ஆனால் சாக்கியம் என்றுமே புலால் உணவை முழுமையாகக் கண்டித்ததில்லை. புத்தரே ஒரு அடியவர் கொடுத்ததை மறுக்கக்கூடாது என்பதற்காகப் பன்றி ஊன் கலந்த உணவை உண்டு அதனால் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக அறிகிறோம். ஊன் உண்ணல் நன்று எனச் சாக்கியரும் தீது எனச் சமணரும் வாதம் புரிந்து கொண்டிருப்பதாகச் சம்பந்தர் கூறுகிறார்.
     
      ஆனால் சமணரையும் இதே போன்று மீன் உண்பவர் என்று அவர் வர்ணித்திருப்பது மிக அதிகமான வியப்பை அளிக்கிறது. ஏனெனில் சமணர்கள் அகிம்சையை அளவு கடந்து பின்பற்றியவர்கள். நடக்கும்போது புழு பூச்சிகள் மிதிபட்டு இறந்துவிடப் போகிறதே என்பதற்காக மயில் தோகையால் பாதையை நீவிக்கொண்டே நடப்பர் என்று அறிந்திருக்கிறோம். அவர்கள் கையில் மயில் தோகை வைத்திருப்பதைச் சம்பந்தரும் குறிப்பிடுகிறார். இவ்வளவு அகிம்சைக் கொள்கையுள்ளவர்கள் மீன் பிடித்து உண்டிருப்பரா என்பது ஐயமாக இருக்கிறது.

      மீன் உண்ணும் வழக்கமுடையவர்கள் சமண மதத்தில் சேர்ந்த பின்னும் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியாதிருந்ததையும் அதை மற்றவர்கள் பார்த்துவிடப் போகிறார்களே என்று அஞ்சி, பள்ளி அருகே உள்ள ஆற்றில் மீன்களைப் பிறர் அறியாமல் கவர்ந்து உண்டதையும் இதிலிருந்து ஊகிக்கிறோம். அதனால் தான் அவர்களது நோன்பைப் பொய்ம்மை நோன்பு என்று சம்பந்தர் எள்ளுகிறார் போலும்.
     
      சமண சாக்கியர் இருவருமே கஞ்சி உண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. கஞ்சி என்பது இன்று நாம் வழங்கும் பொருளில் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. பொதுவாக எல்லா மக்களும் உண்ணும் பொருளாக இருந்தால் அதை ஒரு இகழ்ச்சிக்குரியதாகச் சம்பந்தர் குறிப்பிட்டிருக்க மாட்டார். கண் கழுவு முன்னே ஓடிக் கலவைக் கஞ்சியை உண்டவர்கள் என்ற தொடரிலிருந்து இரவில் உணவு கொள்ளாத அவர்கள் அதிகாலையிலேயே பிச்சைக்குக் கிளம்பிவிட்டிருப்பது தெரிய வருகிறது. அவ்வளவு அதிகாலையில் இல்லறத்தார் நொய் அல்லது மாவு கொண்டு இந்த யாசகர்களுக்காகக் கஞ்சி தயாரித்து இருப்பரா என்பது ஐயத்துக்கு உரியது. மேலும் சமணர் கையில் உணவை வாங்கி நின்ற நிலையிலேயே உண்டவர் எனக் கூறப்படுவதால் அது திரவ வடிவிலுள்ள கஞ்சியாக இருக்க வாய்ப்பு இல்லை. எனவே கஞ்சி என்பது பழைய சோற்றைக் குறிப்பதாக இருக்கலாம். மீந்து போன சோற்றைத் தண்ணீரில் ஊறவைத்துக் காலையில் வரும் யாசகருக்குப் படைத்திருப்பர் எனக் கருதலாம். மேலும் புளித்தட்டையர் என்ற சொல்லுக்குப் புளித்த கஞ்சியை உண்பவர் என்று பொருள் சொல்லப்படுவதால் அது புளித்த பழைய சோறாகத் தான் இருக்க வேண்டும்.

முன்கூறு, பின் கூறு மூடிய சீவரத்தர் முன்கூறு உண்டு ஏறுதலும் பின்கூறு உண்டு காடி தொடு சமண் என்ற தொடர் (திருக்குறும்பலாப் பதிகம்) ஆராயத் தக்கது. மூடிய சீவரத்தர் ஆகிய புத்தர்கள் முன்கூறு உண்டு வெளியேறிய பின்னர், பின்கூற்றை உண்டு காடியை அருந்திய சமணர் என்று இதைப் பொருள் கொள்ளலாம். முன்கூறு பின்கூறு என்பது என்ன? இது சாதாரணமாகப் பொதுமக்கள் உண்ணும் உணவின் முற்பகுதியான குழம்புச் சோற்றையும் பிற்பகுதியான மோர்ச் சோற்றையும் குறிப்பதாக இருக்கலாம். புத்தர்கள் குழம்புச் சாதத்துடன் நிறுத்திக் கொண்டனர், சமணர்கள் மோர் சாதம் மட்டும் சாப்பிட்டனர் என்று கொள்வது தவறாகாது. மற்றொரு இடத்தில் அறுவகைத் தேரர் என்பதற்கு அறுசுவையுடன் கூடிய உணவு உண்ணும் புத்தர் என்று பொருள் கூறப்படுவதால் (1.128 திருவெழுகூற்றிருக்கை தருமை ஆதீன உரை) அவர்கள் அறுசுவையும் அடங்கிய குழம்பு போன்ற பொருளை உண்டிருப்பர் என்றும் சமணர்கள் அறுசுவை அற்ற மோர்ச் சோற்றை மட்டுமே உண்டிருப்பர் என்பதும் வலுப்படுகிறது. உலக இன்பங்களைத் துய்த்தல் ஆகாது என்னும் சமணக் கொள்கையில் உணவின்பமும் அடங்குவதால் இவ்வாறு ஊகிக்கிறோம்.

சாக்கியரும் புளிப்பேறிய காடியைத் தட்டில் இட்டு உண்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்தக் காடி என்பது என்ன? அரிசிச் சோற்றை நீரில் பல நாட்கள் ஊறவைத்துப் புளிக்கவிட்டுத் தயாரிக்கப்படும் பானம் இது. இதை உண்டால் வரும் போதை மயக்கம் போன்ற மனநிலை தியானத்துக்கு ஏற்றது என்ற நம்பிக்கை அண்மைக் காலத் துறவிகளிடமும் உண்டு.

சமணர்கள் கடுக்காய், சுக்கு இவற்றைத் தின்றது கூறப்பட்டுள்ளது. உடலில் காம உணர்வு தோன்றக் கூடாது என்பதற்காக இதைப் பயன்படுத்தி இருக்கலாம். இதே நோக்கத்துடன் கடுக்காயும் எட்டிக்காயும் சேர்த்து உண்ணும் வழக்கம் அண்மைக் காலத் துறவிகளிடமும் உண்டு.  

       உடை
சமணர்கள் ஆடை அணியாமல் இருந்ததும் அவர்கள் அதை நாணுதற்குரிய செயலாகக் கருதவில்லை என்பதும் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓரிடத்தில் மட்டும் (சாய்க்காட்டுப் பதிகம்) நான்கு விரல் அகலமுள்ள கோவணம் அணிந்த குறிப்பு காணப்படுகிறது. அரிதாக ஓரிருவர் இவ்வாறு கோவணம் அணிந்திருக்கலாம். எல்லாச் சமணத் துறவிகளும் ஓலையால் முடையப்பட்ட தடுக்கு ஒன்றைக் கையில் ஏந்தி உடலை மறைத்தனர். உட்காரும்போது தடுக்கின் மேல் அமர்ந்தனர்.

சாக்கியர்கள் துவராடை அணிந்திருந்தனர். ஆடையில் காவி வண்ணம் ஏற்றுவதற்கு மருத மரத்தின் இலையையோ, காவிக் கல்லையோ, செம்மண்ணையோ பயன்படுத்தினர். அவ்வாடை சீவரம் எனப்பட்டது. இவர்கள் உடல் முழுதும் உடையால் போர்த்தி இருப்பர். நீண்ட போர்வையர் என்றும் இணைப் போர்வையர் (இரு போர்வை போர்த்தியவர்) என்றும் அவர்கள் கூறப்படுகின்றனர்.

கலிங்கமுடை பட்டைக் கொண்டார் என்ற தொடரிலிருந்து சாக்கியர்கள் கலிங்கம் எனப்படும் பட்டாடையை உடுத்தியதை அறிகிறோம். அது கலிங்க நாட்டுப் பட்டாடையாகவும் இருக்கலாம்.

உறைவிடம்
இரு வகையினரும் தத்தம் பள்ளிகளில் தங்கினர். சமணர்கள் மட்டும் பாழிகளில் தங்கியது கூறப்பட்டுள்ளது. அது தவம் புரியும் இடமாக இருக்கலாம். தம் உடலைச் சுற்றிப் புற்றேறும்படி கடுமையாகத் தவம் செய்தனர் என்பதும் தெரிகிறது.

உடல் தோற்றம்
இருவகையினரும் கருநிறத்தவர் எனக் கூறப்படுவதிலிருந்து அவர்கள் பகல் முழுவதும் வெய்யிலில் உணவுக்காக அலைந்ததால் கருத்திருந்தது  பெறப்படுகிறது. சமணர்களைப் பற்றிக் குளித்துணாச் சமணர், ஊத்தை வாய்ச் சமண் என்று கூறப்படுவதால் அவர்கள் குளிப்பதில்லை என்றும் பல் கூடத் துலக்க மாட்டார்கள் என்றும் தெரிகிறது. உடம்பினை இழுக்கு என்று கருதுவது அவர்களது கொள்கை போலும். இதனால் உடலில் வியர்வை தோன்றி அழுக்கேறி அவரது உடலில் முடைநாற்றம் எப்பொழுதும் வீசிக் கொண்டிருந்ததையும், அவர்கள் இகழத்தக்க உருவுடையோராக இருந்ததையும் ஆளுடைய பிள்ளை கூறுகிறார். மாறாகச் சாக்கியர்கள் நீரில் பலகாலும் மூழ்கிக் குளித்துத் தூய்மை செய்து கொண்டது சொல்லப்பட்டுள்ளது. சமணர்கள் கடுக்காய்ப் பொடியை உடல் முழுவதும் பூசிக் கொண்டதும் சாக்கியர்கள் மருதமரப் பூவை அரைத்துப் பின்பக்கத்தில் பூசி உடலை மறைத்ததும் குறிக்கப்பட்டுள்ளது. இது எதற்காக என்பது தெரியவில்லை.  

குறைந்த அளவே உணவு கொள்கின்ற சமணரைக் குண்டர் என்று சம்பந்தர் அடிக்கடி குறிப்பிடுகிறார். அது உடல் பருமனைக் குறிக்காமல் கீழ்மையைக் குறிப்பிடுவதாக உரையாசிரியர்கள் சொல்கின்றனர். சாக்கியர்களைப் பொறுத்தவரை குண்டர் என்ற சொல் உடற் பருமனையே குறிப்பதாகும். அவர்கள் உடல் பருத்தவர்கள் என்று தெளிவாகவே குறிப்பிடுகிறார் கவுணியர் கோன்.  

சாக்கியர்கள் வழக்கமான முறையில் தலையை மொட்டை அடித்துக் கொண்டதும் சமணர்கள் பறிதலைக் கையினராக இருந்ததும் கூறப்பட்டுள்ளது.

கொள்கைகள்
சமணர்கள் தெய்வம் ஒன்று உண்டு என்பதை முற்றிலுமாக மறுத்தனர். தங்கள் சமய குருவாகிய மகாவீரரின் சின்னமான அசோக மரத்தைப் புனிதமாகக் கருதினர். துன்பங்களைத் தாங்குதலே தவத்தின் அடையாளம் எனக் கருதினர். கடுமையான தவத்தால் உடம்பை வாட்டினர். வெய்யிலில் அலைதல், முடியைக் கையினால் பறித்துத் தலையை முண்டிதமாக்கிக் கொள்ளுதல், பல வகை உண்ணா நோன்புகள் ஆகியவற்றின் மூலம் தம் உடலைத் துன்புறுத்திக் கொண்டனர்.

      சாக்கியர்கள் பிடகத்தை வேதமாக உரைத்தனர். இறை மறுப்பைப் பொறுத்தவரை அவர்கள் சமணர்களைப் போல் முழு நாத்திகர்களாக இல்லாமல் சற்றுத் தடுமாற்றமான கொள்கைகளைக் கொண்டிருந்தனர். தெய்வம் இருக்கட்டும் அல்லது இல்லாமல் போகட்டும், அது பற்றிக் கவலைப்படாமல் மனிதனின் துன்பங்களைப் பற்றிச் சிந்திக்க என்னும் புத்தரின் அறிவுரைப்படி, கடவுள் உண்டு, இல்லையென்று குழப்பமாகக் கூறினர். எட்டுத் திக்கிலும் இல்லாத தெய்வம் ஒன்று உள்ளது என்று சாக்கியர்கள் கூறுகிறார்களே, அதனால் என்ன பயன் உள்ளது?” என்று சம்பந்தர் வினவுகிறார். குணங்களும் அறிவும் நிலையில்லாதன எனவும், காணப்படும் உலகப் பொருள்களும், உரைக்கும் உரையால் உணர்த்தப் படும் ஏனைய பொருள்களும் அவ்வாறே அழிந்து தோன்றுமியல்பின எனவும் அவர்கள் கணபங்க வாதம் புரிவதாக அவர் கூறுகிறார். சாக்கியர்கள் போதி எனப்படும் அரசமரத்தைப் புனிதமாகக் கருதினர்.

      இரு சமயத்தாரின் இயல்புகளையும் சம்பந்தர் மிக ஆவேசமாகத் தாக்குகிறார். உணவையை பெரிதாகக் கருதுபவர், வஞ்சகர், நற்குணங்கள் இல்லாதவர், நீதியறியாதவர், அறிவற்றவர், நெறியற்ற கீழ்மக்கள், இழிதொழில் புரிபவர், தந்திரசாலிகள், மயக்க அறிவினர், குற்றங்களையே பலகாலும் சொல்லித் திரிபவர், அஞ்சத் தகுந்த சிரிப்பு உடையவர், தம் தவறான கொள்கையில் வழுவார், நாவிற்கு வெறுப்பை உண்டாக்கும் பொய்ம்மொழி பேசுபவர், நேயமற்றவர், பித்தர், ஒன்றுமுணரா ஊமர், நல்லதை அறியாதவர், வாதுசெய்பவர், நல்வினை நீக்கிய வல்வினையாளர், ஓதியுங் கேட்டும் உணர்வினையிலாதார், உள்கலாகாததோர் இயல்பினையுடையார், குறிக்கோள் இல்லாதவர், பேய் போன்றவர், செருக்குடையவர், ஒரு பயனும் அறியாதவர், முரட்டுத்தன்மை உடையவர், சான்றோர் நெறி நில்லாதவர், தம் மனதுக்கு ஒத்தது மட்டும் சொல்பவர், போலியான தவம் செய்பவர், பொருளல்லாதன பேசுபவர், ஆசி மொழியாதவர், ஏசுபவர், ஈரமிலாதன பேசுபவர், குணமல்ல கூறுவார், போதிய பயிற்சியின்றித் தொடக்க நிலையில் உள்ளவர், குற்றப்பட்ட சமயநெறியை உடையவர், பெருக்கப் பிதற்றுவோர், தடுமாற்றமுறுபவர், அற்பமானவர், அழிதலில் வல்லவர், வாய்த்திறனால் புறங்கூறுபவர், பல்வகை விரதங்களை மேற்கொள்பவர், கைகூப்பி வணங்காதவர், வம்பு செய்யும் இயல்பினர், வீண் தவத்தர், புண்ணியப் பேறு இன்மையால் அன்பு செய்து வழிபாட்டில் நிலைத்திரார், கேட்பவர்க்குத் தெளிவு ஏற்படாதவாறு, பொருள் இது அன்று, அதுதான் என்று வாய்க்கு வந்தபடி காரணம் கூறுபவர், பூமியின் கண் நுகரத் தகுவன நுகராதே, துன்பத்தைத் தாமே தேடிக்கொண்டு வருந்துபவர்கள் என்று பல இகழ்மொழிகளால் தூற்றுகிறார்.

      சமண சாக்கியர்களின் புற ஒழுக்கங்களைச் சம்பந்தர் கடுமையாகத் தாக்குவதற்குக் காரணம் என்ன? சமணர்கள் ஆடை இல்லாதிருப்பதையும் சிலர் நால்விரல் கோவணம் அணிந்திருந்ததையும் ஏசும் சம்பந்தர் சிவனின் நக்கத் தோற்றத்தையும் துன்னம் சேர் கோவணத்தையும் மட்டும் புகழுவது ஏன்? சிவன் பலி ஏற்றுத் திரிவதைப் போற்றுதலுக்கு உரிய பண்பாகப் பேசும் அவர் சமண சாக்கியர்களின் பிச்சை எடுத்துண்ணலைக் குறை கூறுவது ஏன்? காரணம் அவர்களது நாத்திக வாதம் தான். அவர்கள் சிவனை அறியார். இறைவன் பாதம் வணங்கல் அறியார். சிவனைக் கண்டு நடுக்கம் உறுவர். வேதவேள்வியை நிந்தனை செய்துழல்வர். ஆதமில் (அறிவற்ற) அவுணரது பொய் உரைகளைக் கேட்காதீர், அவர்களோடு பேசவும் செய்யாதீர், தர்க்க சாத்திரத்தவர் சொல் இடுக்கண்வரு மொழி, அவர்களுடைய உரைகளைக் கொள்ளாதீர், இவர்களுடன் பெரியோர் நட்புக் கொள்ளார், உண்மை நெறியல்லாத புறச்சமயிகளின் அடையாளங்களைக் கருதாதீர், அவர்கள் கூறும் சமய நெறிகளும் அறவுரைகளும் வஞ்சனை மார்க்கத்தை வகுப்பன, மக்களைத் துன்பநெறியில் செலுத்தும், பழிக்கத்தக்க இவ்வாழ்க்கை நீங்கத் தவம் செய்ய விரும்புவோர் இவர்களது ஞானம் நீங்கிய பொய்மொழிகளைத் தெளியாது இறைவன் இறைவியோடு பொருந்தி வாழும் கோலத்தை வணங்குவீர்களாக, அறியாமை வயப்பட்ட சாத்திரங்களை ஓதும் புத்தர்களும், இழிந்த சமணக் குண்டர்களும் ஊழிக்காலம் வரை உணராது வாழ்நாளைப் பாழ் போக்குவர், அவர்கள் கூறும் மடமையை விரும்பி மயங்கியோர் கானல் நீரை முகக்கக் குடத்தை எடுத்துச் செல்வார் போன்றவராவர், அவ்வாறு சென்றவர் செல்லட்டும், ஏனையோர் விழிப்புப் பெறுக என்று அறிவுறுத்தும் சம்பந்தர் அவர்களை அவ்வாறு புறச்சமயத்தில் இருத்திவைப்பவனும் தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவனும் சிவனே என்று கூறி இறைவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றெனக் குறிப்பால் உணர்த்துகிறார்.
     
மாற்றுக் கருத்துகளைச் சகித்துக் கொள்வதும் ஏற்றுக் கொள்வதும் வேதத்தின் அடிப்படைப் பண்பு. அப்படி இருக்க வேதநெறியில் வந்த சம்பந்தர் சமண சாக்கிய சமயங்களை ஏன் பகைமை பாராட்டி வேரறுத்தார்?

இச்சமயங்களின் சிறந்த கொள்கைகளாகிய கர்மாக் கொள்கை, மறுபிறப்புக் கொள்கை, அஹிம்சை ஆகியவற்றை வைதிக சமயம் ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் அதை அவர்களை விடத் தீவிரமாகக் கடைப்பிடித்தது. ஏனெனில் அவை வேதத்தில் கூறப்படாதிருப்பினும் அதன் அடிப்படைக்கு மாறானவை அல்ல. ஆனால் இறை மறுப்பு என்பது வேதநெறிக்கு முரணானது. இறைவன் இருப்பதை ஒப்புக் கொண்டு அவருடைய தன்மை இத்தகையது என்று புது வகையான விளக்கம் கொடுத்திருக்குமானால் சமண சாக்கிய சமயங்களும் வைதிக சமயத்தின் உட்பிரிவாக ஆகியிருக்கும். திருமாலும் பிரமனும் சிவனை வணங்குவதாகப் புராணங்கள் தோற்றுவித்ததைப் போலச் சாக்கியக் கடவுளும் சிவனைப் போற்றுவதாகக் கதைகள் எழுந்திருக்கும். சிவலிங்கத்தின் மேல் கல் எறிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சாக்கியர் ஒருவர். இதுவும் ஒரு வகையான வழிபாட்டு முறை என்று ஏற்றுக் கொண்ட மக்கள் அவரை நாயனாராக ஆக்கியதை நோக்குக.

சமணர்களுடன் சம்பந்தர் செய்த வாதம் தான் எத்தகையது? அவர் தன் கொள்கையாக வலியுறுத்தியது இறைவன் உண்டு என்னும் கருத்தை மட்டுமே. திரும்பத் திரும்ப சிவபெருமானின் விந்தைச் செயல்களை மட்டுமே துணையாகக் கொண்டு வாதம் புரியும் அவரது கூற்றை நாத்திகர்களாகிய சமணர்கள் எப்படி ஏற்றுக் கொண்டிருக்க முடியும்? இவை எல்லாம் புராணப் புளுகுகள், கட்டுக் கதைகள் என்று அவர்கள் தள்ளியிருக்கக் கூடும். அனல் வாதமும் புனல் வாதமும் அறிவுக்குப் பொருத்தமான வாத முறைகள் அல்ல. பின் எப்படி அவர் வாதத்தில் வென்றதாக அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்? நடுநிலையோடு தீர்ப்பு வழங்க வேண்டிய அரசனோ, பார்வையாளர்களான பொது மக்களோ இதை எப்படி ஒப்புக் கொண்டார்கள்?

உண்மை என்னவெனில் சைவர்களும் வைணவர்களும் பிற சிறு தெய்வ வழிபாட்டினரும் தனித்தனியே பிரிந்து புராணக் கதைகளின் அடிப்படையில் ஒருவரை ஒருவர் தாழ்த்திக் கொண்டிருந்த நிலையில் இவர்களின் முரண்பாடுகளைக் காட்டியே இவை அனைத்தும் பொய் என்று நிரூபித்து வந்த சமண சாக்கியர்களுக்கு எதிராக மக்களை ஒன்று படுத்தினார் சம்பந்தர். புராணக் கதைகள் ஒவ்வொரு தெய்வத்தை உயர்த்தியும் ஒவ்வொன்றைத் தாழ்த்தியும் பேசுகின்றன. சிவனை உயர்த்தும் புராணக் கதைகளை அவர் போற்றினாலும் வேதம் ஒன்றே இவை அனைத்தையும் ஒன்று படுத்தும் என்பதால் வேத நெறியையே அதிகம் வலியுறுத்துகிறார்.

சாக்கிய, சமணக் கொள்கைகள் தான் வடநாட்டிலிருந்து வந்தனவே தவிர இங்கு அதைப் பின்பற்றியவர்கள் யாவரும் தமிழர்களே. அவர்களில் பிராமணரும் உண்டு. இவ்விரண்டு சமயங்களும் தர்க்க வாதத்தின்  அடிப்படையில் அமைந்ததால் அவர்களை வாதத்தில் தோற்கடிப்பது எளிதல்ல.  உங்கள் வேதத்தில் சிவனைப் பற்றிய குறிப்பே இல்லையே, எந்த அடிப்படையில் நீங்கள் சிவனை வேத முதல்வன் என்று புகழ்கிறீர்கள்?” என்று அவர்கள் வாதம் செய்திருக்கக் கூடும். எப்பெயரிட்டு அழைப்பினும் இறைவன் ஒன்றே என்ற வேதக் கருத்தை முன் வைத்துத் தான் ஞானசம்பந்தர் அவர்களிடம் எதிர்வாதம் புரிந்திருக்க வேண்டும்.

திருவாழ்கொளிபுத்தூர் பதிகத்தில் சம்பந்தர் முடியும் ஆயிரம் உடையார், கண்ணும் ஆயிரம் உடையார், வடிவும் ஆயிரம் உடையார், பெயரும் ஆயிரம் உடையார் என்று கூறுவது ருக் வேதம் 10 ஆவது மண்டலம் புருஷ சூக்தக் கருத்தே. அதே பதிகத்தில் சாகை ஆயிரம் உடையார், சாமமும் ஓதுவது உடையார் என்று கூறித் தன் கருத்துகளுக்கு வேத ஆதாரம் உண்டு என்பதைப் புலப்படுத்துகிறார்.

வேள்விகளைப் பொறுத்தவரை சமண சாக்கியர்களின் குற்றச்சாட்டு, அவை உயிர்க் கொலையைக் கொண்டுள்ளன என்பதே. வேதத்தில் பல பகுதிகள் இரண்டு கால் பிராணிகள் நலமாக வாழட்டும், நான்கு கால் பிராணிகள் நன்றாக வாழட்டும் என்று வேண்டுகிறது. அப்படி இருக்க, ஏன் பிராணிகளைப் பலி கொடுத்து வேள்வி இயற்றினர்? பலி இடப்பட்ட பிராணிகள் நற்கதி அடையும் என்று நம்பியதால் தான். புத்த மதப் பிரசாரம் நடைபெற்ற காலத்தில் அவர்களது அறிவு தூண்டப்பட்டது.  உயிர்ப் பலியைத் தவிர்க்க வேண்டி வேள்விகளையே புறக்கணிக்கத் தேவை இல்லை, உயிர்ப் பலி இல்லாமலும் வேள்விகள் செய்ய முடியும் என்பதை உணர்ந்தனர். மற்றவர் கூறும் குற்றச்சாட்டுகளின் நியாயத்தை உணர்ந்து அதற்கேற்பத் தன்னைத் திருத்திக் கொள்ளும் வைதிகப் பண்பு சைவத்தில் இயல்பாகவே இருந்தபடியால் புறச் சமயத்தாரின் தாக்குதல் வலுவிழந்து போயிற்று.

இவ்வாறு சைவத்தின் எழுச்சியும் புலால் மறுப்புக் கொள்கையும் ஒரே காலத்தில் தோன்றியதால் மரக்கறி உணவு தமிழ்நாட்டில் சைவ உணவு என்று பெயர் பெறலாயிற்று. வட இந்தியாவில் வைணவக் கொள்கையுடன் பரவியதால் அது அங்கு வைணவ உணவு எனப்படுகிறது.
     
மக்கள் சம்பந்தரின் கருத்துகளை ஏன் ஏற்றுக் கொண்டார்கள்? நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறிய சமண சாக்கியர்கள் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்த அளவுக்கு உணர்ச்சிக்கு இடம் கொடுக்கவில்லை. மனித வாழ்வு என்பது அறிவு உணர்ச்சி இரண்டின் கலவை அன்றோ? உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் வறட்டுத்தனமான தர்க்க ரீதியாக வாழ்க்கைப் பிரச்சினைகளை அணுகிய சமண சாக்கியர்களின் போக்கினால் அலுப்படைந்திருந்த மக்களுக்கு அம்மையாரின் வழிநின்ற ஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரின் உணர்ச்சிமயமான அணுகுமுறை ஆறுதல் அளிப்பதாக இருந்தது. அன்றாடம் சிறிது நேரம் அறிவைப் புறத்தே ஒதுக்கி வைத்து விட்டு புராணக் கதைகளை நம்பி இறைவனை நினைந்து காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்குதல் மக்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. அது ஆறுதலாகவும் இன்பமாகவும் இருந்தது. அதனால் தான் அவர்கள் புறச் சமயங்களைப் புறக்கணித்துச் சைவத்துக்குத் திரும்பினர். சம்பந்தரின் இசைத் திறனும் அதில் முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும்.  பயமறியாச் சிங்கக் கன்று போன்ற இந்தச் சிவக்கன்றின் காட்டமான தாக்குதலும் அவருடைய இளமையும் மக்களைப் பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும்.

சமணர்களால் அழிய இருந்த சைவம் இவரால் புதிய வலுவுடன் வீறுநடை போடத் தொடங்கியது. எனவே தான் சம்பந்தர் சைவசமயக் குரவர்களில் முதலானவராகப் போற்றப்படுகிறார். 

புத்தரும் மகாவீரரும் வகுத்த கொள்கைகள் சம்பந்தர் வர்ணித்தது போன்ற நாகரிகமற்ற வாழ்க்கை முறையைப் போதிக்கவில்லை. சமுதாயக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு மனம் போன போக்கில் வாழ விரும்பிய சிலர் இச்சமயங்களைப் போர்வையாகப் பயன்படுத்தி அவ்வாறு நடந்து கொண்டிருக்க வேண்டும். உழைக்க விருப்பம் இன்றிப் பிச்சை எடுத்து உண்பதும், ஆடையின்றித் திரிவதும், உடல் தூய்மை பற்றிக் கவலைப்படாமல் இருப்பதும், தவம் என்ற பெயரில் காடியைக் குடித்து விட்டு மயங்கிக் கிடப்பதுமான குறிக்கோள் இல்லாத வாழ்க்கை அண்மைக் காலத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட ஹிப்பி இயக்கத்தைப் போன்று இருப்பதை அறிய முடிகிறது. சமணத்தில் சில காலம் உழன்ற அப்பர் குறிக்கோள் இலாது கெட்டேன் என்று வருந்தியதை நினைவு கூர்க. இந்தக் கலாசாரம் பரவினால் சமுதாயம் முழுமையும் நாகரிகத்தில் பின்னடைவு கொள்ளும் அல்லவா? எனவே இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டியது ஒரு சமுதாயக் கட்டாயமாக இருந்தது. சமயத்தின் பெயரால் ஏற்பட்ட இந்தத் தவறுகளை மற்றொரு சமயத்தின் பெயரால் ஒழித்துக் கட்டிய சம்பந்தர் ஒரு சமூக சீர்திருத்தக்காரராகவும் விளங்கினார். அமெரிக்காவில் ஹரே கிருஷ்ணா இயக்கமும் யோகமும் பரவிய பின்னர் ஹிப்பிக் கலாசாரம் அழிந்ததை நாம் அறிவோம்.   

Saturday, August 18, 2012

மனைவி



என்னை மணந்த சின்னாளில்
உன்னில் பாதி நான் என்றாள்.
ஆம் ஆம் உண்மை அதுவென்றேன்.
இருவர் தலைமை இழுபறியாம்
ஒரு தனித் தலைமை உயர்வென்றாள்.
அதுவே எனது கருத்தென்றேன்.
அந்தத் தலைவர் நானென்றாள்.
அகப்பட்டேன் நான் விழிக்கின்றேன்.

வெண்டை முற்றல் கத்தரி சொத்தை
வாடிய கீரை வதங்கிய மல்லி
எந்தப் பொருளும் வாங்குதல் அறியார்
எனக்கென வாய்த்ததோர் அசடு என்பாள்

ஏது நான் செய்யினும் ஏது நான் பேசினும்
குற்றம் காண்பது ஒன்றே அவள் தொழில்.
எதற்கவள் மகிழ்வாள்? என்றவள் வெகுள்வாள்?
ஈசனே அன்றி யாவரே அறிகுவர்?
என்ன தான் செய்வேன்? எங்கு போய்ச் சொல்வேன்?

நமக்கேன் பொறுப்பு? நானெனும் தனிப் பொருள்
இல்லை, நானெனும் எண்ணமே பொய்யெனப்
புத்தன் புகன்றதைப் புத்தியில் கொண்டு
நானாம் பான்மையை நசுக்கிக்  கொண்டேன்.
அவள் கைப் பாவையாய் ஆகி விட்டேன்.
ஆணாம் எனக்கு ஐயகோ வீழ்ச்சி!

மனைவியால் பட்ட தொல்லை மிகவுண்டு கண்டீர்!

பொருளை ஓங்க வளர்த்தல் என் கடன்.
மற்றைக் கருமம் யாவும் முடித்தே
மனையை வாழச் செய்பவள் அவளே.
வேளைக்குணவு விதவிதமாக
இனிய சுவையுடன் இயற்றுவ தவளே.
வீட்டுத் தூய்மை விருந்தினரோம்பல்
குழந்தை வளர்ப்பெனக் கோடி வேலைகள்.
ஓய்வெனச் சாயாள் விடுமுறை அறியாள்.

செய்தித் தாளில் தலையை நுழைத்து
உலகக் கவலை ஊர் வம்புகளில்
மும்முரமாக முழுகி நான் இருக்கையில்
மற்றவர் பசியை மாற்றுவான் வேண்டி
சமையல் அறையில் பரபரத் திருப்பாள்.
தொக்கா முன்னே சொகுசாய் அமர்ந்து
ஒலிம்பிக் காட்சி நான் ரசித்திருக்கையில்
மறுநாள் இட்டிலி மிளகாய்ப் பொடியென
அறவைக் கருவியோ டைக்கிய மடைவாள்.
இல்லில் உள்ளோர் எவர்க்கும் நோயெனில்
இரவும் பகலும் ஓய்வே இன்றி
உடனிருந் துற்ற சேவைகள் செய்வாள்.
பத்திய உணவைப் பதமாய்ச் சமைப்பாள்.
கவலைப் படுவாள், கடவுளை வேண்டுவாள்.
தனக்கென வாழாத் தியாகத் திருவுரு.
நானாம் பான்மை அறவே ஒழிந்து
பணிவிடை ஒன்றே குறியாய் இருப்பாள்.
இவள் போல் மனைவி பெறற்கரும் பாக்கியம்.

மனைவி இலாவிடில் செய்கை நடக்குமோ?

Tuesday, August 7, 2012

உலகம் அழியப் போகிறது



            2012இல் உலகம் அழிந்து விடும் என்ற செய்தியைக் கேட்டவுடன் என் மனம் கால இயந்திரத்தில் ஏறி ஐம்பது வருடங்கள் பின்னோக்கிப் பயணித்தது.

            1962 பிப்ரவரி 5 அன்று  எட்டு கிரகங்கள் மகர ராசியில் ஒன்று சேர்ந்துமணி நேரத்துக்கு மாநாடு நடத்தப் போகின்றன என்ற செய்தி இரண்டு வருடங்களுக்கு முன்னே வந்து விட்டது. உடனே நம்மூர் சோதிடர்கள்ஆகா, இது ஏதோ விபரீதத்தின் அறிகுறி. உலகம் அழியப் போகிறது”  என்று பதறினர். பத்திரிகைகள் இது சம்பந்தமாகத் தினமும் ஒரு சோதிடரைப் பேட்டி கண்டு செய்தி வெளியிட்டன

ஒருவர் பூகம்பம் வந்து உலகமே அழிந்து விடும் என்றார். மற்றொருவர் நெருப்பு மழை பொழியும் என்றார். மழை பெய்து உலகையே மூழ்கடித்து விடும் என்றும், தொற்று வியாதிகள் பரவி எல்லா உயிர்களும் பலியாகும் என்றும் ஆளுக்கு ஆள் பல விதமாகச் சோதிடம் கூறிக் கொண்டிருந்தனர். அந்தக் கால கட்டத்தில் சுனாமி பற்றி யாருக்கும் தெரியாது. தெரிந்திருந்தால் அதையும் சேர்த்துக் கொண்டிருப்பர்.
          
 செய்தித் தாளைத் திறந்தால் தினமும் ஒரு திகில் செய்தி கொட்டை எழுத்துகளில் வெளியாகியது. நான் பயந்து விட்டேன்  என்று சொல்லுவதை விட ஊரோடு ஒத்து வாழ்ந்தேன் என்று சொல்வது கௌரவமாக இருக்கும். என் ஜாதகத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதில் காலியாக இருந்த மகர ராசிக் கட்டத்தில் எட்டு கிரகங்களின் பெயர்களை எழுதிப் பார்த்தேன். ஊகூம், எவ்வளவு முயற்சித்தும் நான்குக்கு மேல் எழுத அங்கு இடமில்லை. எட்டு கிரகங்கள் ஒரே இடத்தில் சேர்ந்தால் எவ்வளவு நெருக்கடியாக இருக்கும் என்பதை உணர்ந்ததும் என் பயம் அதிகரித்தது.

            ஒரு ராசி என்பது முப்பது டிகிரி விரிவு உள்ள மிகப் பெரிய இடம். அதில் எட்டு என்ன, எட்டாயிரம் கிரகங்கள் சேர்ந்தாலும் ஒன்றும் ஆகாதுஎல்லாக் கிரகங்களும் ஒரே டிகிரியில் சேர்ந்தாலும் ஒன்றும் ஆகாது. ஏனெனில் அவை ஒன்றுக்கொன்று வெகு தொலைவில் வெவ்வேறு வட்டப் பாதையில் செல்கின்றன என்று விஞ்ஞானிகள் சொன்ன செய்தி பத்திரிகையின் ஒரு மூலையில் பொடி எழுத்துகளில் படிப்பாரற்றுக் கிடந்தது.

            எல்லாக் கிரகங்களும் ஒன்று கூடி பூமியை அழிக்கச் செய்த சதித் திட்டத்தை, ராகு மட்டும்  ஒப்புக் கொள்ளவில்லை. ராகுவும் கேதுவும் நம் ஊர் திமுக, அதிமுக மாதிரி. தேர்தலுக்கு முன் கட்சிகள் தங்களுக்குள் பலவிதமாகக் கூட்டணியை மாற்றி அமைத்துக் கொண்டாலும்  ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம். திமுக எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ அதற்கு எதிர் அணியில் தான் அதிமுக இருக்கும். அது போல, மற்ற ஏழு கிரகங்களின் கூட்டணியில் கேது சேர்ந்து விட்டதால், ராகு "நான் தனித்து நின்றாலும் நிற்பேன். கூட்டணிக்கு வரமாட்டேன்" என்று உறுதியாக நின்றது.

            தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும்  அஷ்டக் கிரகச் சேர்க்கை வரப் போகிறதாம், உலகம் அழியப் போகிறதாம் என்று இதே பேச்சு. இதைக் கேட்கக்  கேட்க, நடுக்கம் அதிகரித்தது. சங்கராசாரியார்திருஞானசம்பந்தரின் கோளறு திருப்பதிகம் பாராயணம் செய்யுங்கள், எல்லாம் நல்லபடியாக ஆகிவிடும்என்றார். மற்ற மடாதிபதிகளும் அதை ஆமோதித்தனர். நல்ல மனம் கொண்டவர்கள் கோளறு திருப்பதிகத்தை அச்சிட்டு இலவசமாக விநியோகித்தனர்.

            எனக்கும் ஒன்று கிடைத்தது. அதை ஒரு லட்சம் தடவை பாராயணம் செய்ய வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டேன். ஆனால் எனக்கு அதை விட முக்கியமான வேலை இருந்தது. பொன்னியின் செல்வன் அப்பொழுது தான் படிக்க ஆரம்பித்திருந்தேன். உலகம் அழிவதற்குள் ஐந்து பாகமும் படித்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது. எனவே  நான் பதிகத்தை ஒரு முறை படித்து விட்டு, ‘ஒரு லட்சம் முறை படித்ததாக வைத்துக் கொள்ளுங்கள்என்று சுவாமியை வேண்டிக் கொண்டேன்.
          
  சாலையில், பேருந்துகளில், அலுவலகங்களில் எங்கு பார்த்தாலும் ஜனங்களின் வாய்கள் ஓயாமல்அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவேஎன்று முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

            நான் அப்பொழுது சுவாமிமலையில் குடியிருந்து சுந்தரப்பெருமாள் கோவிலில் ஒரு தனியார் நடுநிலைப்பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என் வீடு ஏற்கெனவே ஒழுகிக் கொண்டிருந்தது. கிரகங்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதி இடிந்து விழும் தூள்களை இந்த வீடு எப்படி தாங்கும் என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தோம்.

            சுவாமிமலைக் கோவிலில் அடிக்கடி ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடக்கும். எல்லாப் பேச்சாளர்களும், ‘கலி முற்றி விட்டது, பிரளயம் வரப் போகிறது, பகவன் நாமாவை விட்டால் வேறு வழியே இல்லைஎன்று பிரசாரம் செய்தனர். அதில் ஒருவர் ஒரு கதை சொன்னார்.

            காவிரியில் பெருவெள்ளம். ஒரு ஒடம் அக்கரைக்குச் செல்லத் தயாராக இருந்தது. அதன் ஒரு ஓரத்தில் ஒரு பாம்பாட்டியும் மறு ஓரத்தில் ஒரு குரங்காட்டியும் உட்கார்ந்திருந்தார்கள். நடுவில் 30, 40 பேர் இருந்தனர். அப்பொழுது ஒரு பிரம்மசாரி வந்து ஏறினான். ஓடம் நடு ஆற்றில் போய்க் கொண்டிருக்கும்போது அவன் குரங்கைக் கட்டிப் போட்டிருந்த கயிற்றை சத்தமில்லாமல் அறுத்து விட்டான். குரங்கு தாவி ஓடி பாம்புப் பிடாரனின் கூடையைத் திறந்து விட்டது. உள்ளிருந்து பாம்பு சீறிக்கொண்டு வெளியே பாய்ந்தது. உடனே ஜனங்கள் அத்தனை பேரும் பயந்து போய் குரங்காட்டி இருந்த ஓரத்துக்கு ஓடினர். சமநிலை தவறி ஓடம் கவிழ்ந்தது. பாம்பாட்டி, படகோட்டி உட்பட அத்தனை பேரும் ஜலசமாதி ஆயினர்.

            இந்தக் கதையைச் சொல்லிவிட்டு அவர், இதைப் போல எல்லாக் கிரகங்களும் ஒரு ஓரத்தில் ஒதுங்கப் போகின்றன, உலகமாகிய ஓடம் கவிழப் போகிறது, ஜாக்கிரதை என்று எச்சரித்தார். என் பயம் மேலும் அதிகரித்தது.

            எட்டுக் கிரகச் சேர்க்கை அன்று பள்ளிக்கு லீவு விட்டு விடலாமா என்று எங்கள் தலைமை ஆசிரியர் யோசனை செய்தார். அரசாங்க நிதி உதவி பெறும் பள்ளியாக இருந்ததால் அதற்கு அனுமதி வாங்க வேண்டி இருந்தது. சூரிய கிரகணத்துக்கு லீவு விடும் பகுத்தறிவுக் கழகங்களின் ஆட்சியாக இருந்தால் பொங்கல் விடுமுறையை தை மாதம் பூராவுக்கும்  நீட்டி இருக்கும். அன்று இருந்த காங்கிரஸ் அரசு விடுமுறை விடவில்லை. நாங்கள்வாழ்ந்தால் முன்னூறு பேரும் வாழ்வோம், வீழில் முன்னூறு பேரும் முழுமையும் வீழ்வோம்’ (290 மாணவர்கள் 10 ஆசிரியர்கள்) என்று சமாதானப் படுத்திக் கொண்டோம்.

            அந்த நாளும் வந்தது. நான் பள்ளிக்குக் கிளம்பும்போது ஏட்டுத் தயிரையும் பாலையும் விட்டுப் பிசைந்து ஸ்பெஷல் தயிர் சாதம் கட்டிக் கொடுத்துஅஷ்டக் கிரகச் சேர்க்கைக்கு முன் சாப்பிட்டு விடுஎன்று என் தாய் அறிவுறுத்தினார். மறு உலகம் செல்லும் போது கூட வெறும் வயிற்றோடு போகக் கூடாது என்பது தாயின் உள்ளம்.

            தலைமை ஆசிரியர், "கிரகண தர்ப்பணம் செய்ய வேண்டும். நான் வர முடியாது. நீ பார்த்துக் கொள்" என்று என்னிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டார். உலகம் அழியும்போது மனைவி மக்களுடன் கூட இருக்கவேண்டும் என்று அவர் விரும்பியது தான் உண்மையான காரணம் என்று மற்றவர்கள் பேசிக் கொண்டார்கள்.

            அந்த முக்கியமான தருணத்தில் அறைக்குள் அடைந்து கிடக்காமல்  வெளியில் போய் வேடிக்கை பார்க்க எனக்கு ஆசையாக இருந்தது. ஆனால் வேறு ஒரு நிர்ப்பந்தம். என் மாணவர்கள் பெஞ்சு மேலும் மேஜை மேலும் ஏறி உலக அழிவு சாலை வழியாக வருகிறதா என்று எட்டிப் பார்க்கத் தொடங்கினார்கள். சிலர், விட்டத்தில் ஏறி கிரகங்கள் இடிந்து விழும் காட்சியை லைவாகக் காண்பதற்காகக் கூரையில் கீற்றை விலக்கிக் கொண்டிருநதனர். இன்னும் கொஞ்சம் விட்டால் எட்டுக் கிரகங்களுக்கும் உதவி செய்கிறேன் என்று சொல்லி கூரையில் நெருப்பு வைத்தாலும் வைத்து விடுவார்கள் போலிருந்தது. அவர்களுக்கு ஏதேனும் வேலை கொடுத்தால் தான் கட்டுப்படுத்தி வைக்க முடியும். "அடுத்த மாதம் .எஸ். எல்.சி. அரசாங்கப் பொதுத் தேர்வுக்குப் பணம் கட்டி இருக்கிறீர்கள். ஏற்கெனவே நீங்கள் கணக்கில் வீக்" என்று சொல்லிவிட்டுப் பாடம் நடத்தத் தொடங்கினேன்.

            "உலகம் தான் அழியப் போகிறதே, எதற்காக சார் படிக்க வேண்டும்?” என்று மாணவர்கள் கேட்டனர். "இப்பொழுது படித்து விட்டால் அடுத்த ஜன்மத்தில் படிக்க வேண்டியதில்லை. திருஞான சம்பந்தர் மூன்று வயதில் கவி பாடவில்லையா. அது போல நீங்கள் பிறந்த உடனேயே ராமானுஜம் ஆகிவிடலாம்" என்றேன். 'சார் புருடா விடறார்டா' என்று கமெண்ட் அடித்தான் ஒருவன். "இப்பொழுது படித்தது அடுத்த ஜன்மத்துக்கு உதவும் என்பதற்கு என்ன ஆதாரம்" என்று ஒருவன் கேட்டான். "திருவள்ளுவர் தான் ஆதாரம். ஒருமையுள் தான் கற்ற கல்வி எழுமையும் ஏமாப்புடைத்து என்று சொல்கிறார்" என்றேன். வள்ளுவர் பேரைச் சொன்னதும் அவர்கள் வாயை மூடிக் கொண்டார்கள்.
   
         ஒரு தொட்டியில் ஒரு அங்குல விட்டமுள்ள குழாய் வழியாகத் தண்ணீர் மணிக்கு 10 மைல் வேகத்தில் கொட்டிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து ¾ அங்குல விட்டமுள்ள குழாய் வழியாக மணிக்கு 20 மைல் வேகத்தில் நீர் வெளியேறுகிறது. தொட்டி நிரம்ப எவ்வளவு நேரம் ஆகும் என்ற கணக்கை எத்தனை தடவை சொல்லிக் கொடுத்தாலும் அவர்கள் மூளையில் தங்காமல் அந்தத் தொட்டியைப் போலவே காலியாகிக் கொண்டிருந்தது.

           அவர்களைத் தயார் செய்ய வேண்டும்இன்றைக்கு எப்படியாவது அவர்கள் மூளையில் துணியை வைத்து அடைத்தாவது அந்தக் கணக்கை நிரப்பி விடவேண்டும் என்று தீர்மானித்து தலைமை ஆசிரியர் பீரியடையும்  என் பீரியடையும் சேர்த்து பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன். 1 ½ மணி நேரம்  மாணவர்களை அறுத்துத் தீர்த்தபின் திடீரென்று ஞாபகம்  வந்து, தலைமை ஆசிரியர் அறையில் வைத்திருந்த கடிகாரத்தைப் போய்ப் பார்த்தேன்

            அடேடே, கிரகச் சேர்க்கை நேரம் முடிந்துவிட்டது. நாங்கள் எல்லோரும் உயிருடன் தான் இருக்கிறோம். ஒருக்கால் என் கடமை உணர்வை மெச்சி எங்கள் எல்லோரையும் கூண்டோடு கைலாசத்துக்குக் கடவுள் அழைத்து வந்துவிட்டாரோ என்று சந்தேகம் வந்தது. வெளியில் வந்து பார்த்தேன்ஒரு பஸ் கும்பகோணத்தை நோக்கிச் சென்றது. அடுத்தாற்போல தஞ்சாவூருக்குப் போகும் பஸ் வந்தது. அப்பாடா, உலகம் அப்படியே தான் இருக்கிறது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

            அந்த நிம்மதி நிலைக்கவில்லை. ஒரு சந்தேகம் தோன்றியது. என் தலைமை ஆசிரியர் 1,08,000 தடவை வேயுறு தோளி பங்கன் பாடலைச் சொல்லியிருந்தார் அவருடைய பக்தியின்  வலிமையினால் இந்த ஊர் மட்டும் தப்பித்திருக்கும். என் பெற்றோர் என்ன ஆயினரோ என்று கவலை வந்தது. முருகன் இருக்கும் இடத்தில் ஒரு இடையூறும் வராது என்று ஒரு மனம் சொன்னாலும் கோவிலைச் சுற்றி இருப்பவர்களில் 90 சதவீதம் பேர், கோவில் பணியாளர் உள்பட, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அவர்களைத் தண்டிப்பதற்காக முருகன் அந்த ஊரையை அழித்திருக்கக் கூடும் என்றும் தோன்றியது. வழியெங்கும் உற்றுப் பார்த்துக் கொண்டே சைக்கிளில் வீடு நோக்கிச் சென்றேன். சுவாமிமலையில் முருகன் கோவில் முதல் என் ஓட்டை வீடு வரை எல்லாம் அப்படியே இருந்தன. வீட்டில் என் பெற்றோரும் தம்பியும் நலம். நான் வளர்த்த நாய், எருமை மாடு, தேனீக் கூட்டம் மற்றும் நான் வளர்க்காமலேயே என் வீட்டில் வளர்ந்த பெருச்சாளிகள், பாம்புகள் எல்லாம் முன்பு போலவே இருந்தன.

            “இத்தனை பேர் கோளறு திருப்பதிகம் பாராயணம் செய்தது வீண் போகவில்லை என்று பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். எனக்கு என்னவோ ராகு பகவான் தனித்து நின்று மற்ற எட்டு பேரின் எடையையும் சமநிலைப்படுத்தி அவர்களது சதித் திட்டத்தை முறியடித்து விட்டதாகத் தான் தோன்றியது. பார்வதி கல்யாணத்தின் போது வட இந்தியா கடலுக்குள் மூழ்காமல் அகத்தியர் தனி ஒருவராகத் தென்னாடு வந்து இந்தியாவைச் சமநிலைப் படுத்தவில்லையா, அது போல. கதையில் வந்த பாம்பாட்டி போல மெஜாரிட்டியின் வலிமைக்குப் பலி ஆகாமல், தன்னையும் காப்பாற்றிக் கொண்டு உலகத்தையும் காப்பாற்றிய ஹீரோவாகவே அவர் எனக்குத் தோன்றினார்.

அது முதல் ராகு பகவானிடம் எனக்குத் தனி மரியாதையும் அன்பும் ஏற்பட்டு விட்டது. நான் எந்த வேலையைச் செய்வதானாலும் அவருடைய காலத்தில் தான் செய்வது என்று தீர்மானித்தேன். என்னுடைய திருமணம் ஒரு திங்கள் கிழமை நடந்தது. அன்று காசி யாத்திரை  காலை 8.45க்கு ராகு காலத்தில் தான் துவங்கியது. இன்று வரை நானும் என் மனைவியும் அரசியல் வாதியும் ஊழலும் போல இணை பிரியாமல் வாழ்வதற்குக் காரணம் ராகு தான் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கைஎங்களில்யார், ‘யார் என்பதில் மட்டும் எங்களிடையே அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்படும். அது அந்த எட்டு கெட்ட கிரகங்களின் வேலை

            எட்டுக் கிரகச் சேர்க்கையால் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பையும் நான் சொல்லியாக வேண்டும். அதற்கு முதல் நாள் தான் எனக்கு 'ஐயா வீட்டுத் தம்பி'யின் அறிமுகமும் அவரோடு பேட்மின்டன் ஆடும் வாய்ப்பும் கிடைத்தது. சுந்தரப் பெருமாள் கோவிலில் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டினாற் போலவளைவுஎன்று ஊர் மக்களால் அழைக்கப்பட்ட அவரது மாளிகை இருந்தது. அவருடைய தோட்டத்தில் கோர்ட் போடப்பட்டிருந்தது. நானும் 'தம்பி'யும் ஒரு அணி. 'தம்பி'யின் உறவினரான என் சக ஆசிரியர் ஒருவரும் வேலை இல்லாப் பொறியாளர் ஒருவரும் எதிர் அணிநான் அன்று தான் முதன் முதலாக மட்டையைப் பிடித்திருந்தேன். ஒரு பந்து கூட உருப்படியாக எடுக்கவில்லை. இருந்தாலும் 'தம்பி' என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார். என்னை விட ஐந்தாறு வயது மூத்தவராகவும் ஐநூறு வேலி நிலச்சுவான்தாரராகவும் இருந்த போதிலும் அவர் துளிக் கூட கர்வமில்லாமல் பழகினார். என்னைப் பற்றி அன்புடன் விசாரித்தார். தொடர்ந்து விளையாட வருமாறு அழைப்பு விடுத்தார். மறுநாள் உலகம் அழியாமல் இருந்தால் வருவதாகச் சொன்னேன்.

            மறுநாள் அவர் தோட்டத்துக்குப் போனேன். அவர் கும்பகோணம் போய்விட்டதாகத் தெரிந்தது. அடுத்த அடுத்த நாட்களில் அவர் வேறு வேலைகளாக வெளியூர் சென்று கொண்டிருந்தார். அதன்பின் நான் ஒரு பயிற்சிக்காகமாதம் சென்னையில் தங்க நேரிட்டது. கோடை விடுமுறைக்குப் பின் நான் அந்தப் பள்ளியை விட்டு வேறு ஊரில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியனாகப் போய்ச் சேர்ந்தேன். எட்டுக் கிரகச் சேர்க்கை மட்டும் 'தம்பி'யுடனான  என் நட்பை முளையிலேயே கிள்ளாமல் இருந்திருந்தால் நான் இந்தியாவின் பிரதம மந்திரியாகவோ அல்லது குறைந்தது தமிழ்நாட்டு முதல் மந்திரியாகவோ ஆகியிருப்பேன். இந்தியாவுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. நம் நாட்டின் தலைவிதியை மாற்றி விட்டன பொல்லாத அந்த எட்டுக் கிரகங்களும்.

           யார் அந்தத் 'தம்பி' என்று கேட்கிறீர்களா? பிற்காலத்தில்கிங் மேக்கர்என்று புகழப்பட்ட ஜி.கே. மூப்பனார் தான்